பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 1

தருணங்களில் பொன்னான தருணம் எதுவென்றால், இதுவே என்பேன், அது என்னுள் நீ வந்துதித்த செய்தியறிந்த தருணம் என் அருமை மகளே(னே). என்னை நான் முழுமையடைந்ததாய் உணர்ந்த தருணமும் இதுவே.

இந்த நாளுக்காய் நான் கடந்த வந்த நாட்கள் மிகவும் நெடியது என்னுயிரே. அவை அதிகமாய் இருக்கவில்லை ஆனால் ஏதேதோ காரணங்களால் நீண்டதாய் இருந்தன. சமுதாயத்தில் ஏதேதோ மாற்றங்கள் வந்த பின்னரும் இன்னும் சில விடயங்கள் மாறாததாய் அதே பழமை மிக்கதாய் இருப்பதே என் நாட்கள் நீண்டதாக காரணம். பெண் என்பவள் எத்தனை படித்திருந்தாலும்,  எத்தனையோ இலட்சியங்கள் கொண்டிருந்தாலும் திருமணம் முடிந்ததும் அவள் முதல் கடமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதாகவே இருக்க வேண்டும் என்பதே இச்சமூகத்தின் எதிர்பார்ப்பு.

எத்தனையோ காரணங்களால் சமூகத்தின் பல தேவையற்ற எதிர்பார்ப்புகள் பழக்கவழக்கங்களிலிருந்து நான் வேறுபட்டிருந்தாலும் இச்சமூகத்தின் அங்கமாகவே தொடர்ந்தும் இருப்பதால் அதன் விரல்கள் என்னையும் நோக்கி நீள்வதை என்னால் தடுக்க முடியவில்லை கண்ணே. தாய் நாட்டின் மண்ணிலிருந்து எத்தனையோ மைல்கள் விலகி  இருந்தாலும் கூட அந்த கரங்கள் எப்பொழுதும் என்னை தொட்டு விடும் தொலைவிலேயே இருக்கின்றன, என் பாதங்கள் மண்ணை மிதிக்கும் தருணத்திலெல்லாம்
அவை என் குரல் வளையை இறுக்க தயங்குவதே இல்லை.இதற்கும் நான் திருமண பந்தத்தில் இணைந்து இன்றோடு 15 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. இதற்குள் தான் எத்தனை நீண்ட நாட்கள்.
அதனால்தானோ என்னவோ நீ உதித்ததாய் அறிந்துவிட்ட தருணத்தில் உனக்கான என் மகிழ்ச்சியுடன் எனக்கான என் மகிழ்ச்சியும் சற்றே அதீத சுய நலத்துடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில் இனி என் குரல் வலைகள் குறித்து நான் கவலைப்பட வேண்டாம் தானே. அவை இனி நிச்சயம் பத்திரமாய் இருக்கும் உன் பொருட்டாவது.

போகட்டும் அந்த நீண்ட நாட்களின்  பலனெல்லாம் உன் மூலம் நான் அடைவேன் என்பது மட்டும் தின்னம். உன் அன்பில், உன் மழலையில், உன் சிரிப்பில், உன் தாவலில், உன் கொஞ்சலில் என்று உன் அனைத்திலும் அது மறைந்திருக்கும் தானே? அதனால்தான் சொல்கிறேன் நான் இனி எனை சற்றே  ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அப்படித்தானே?

இன்று நான் முதன் முதலாய் உலகத்துடன் உனைக்  குறித்து பேச தொடங்கியிருக்கிறேன் எனக்கு தெரிந்த, எதிர்காலத்தில் உனக்கும் புரியும் ஒரு நடையில். ஆனால் இது வரை பேசியதெல்லாம் எனைக் குறித்து மட்டுமே. ( நானின்றி நீ இல்லை எனும்போது உனைக் குறித்து பேசையில் ஆரம்பத்திலாவது நான் வந்துதானே தீர வேண்டும்). ஆனால் இனி உன்னை குறித்தும் உனக்கான அறிமுகங்கள் குறித்தும் பேசலாம் என்றிருக்கிறேன். நீ இந்த பூமி தொடும் நாள் வரையிலும் இதைத்  தொடரவும் தீர்மானித்துள்ளேன். காலம் வழி விடுமா? பார்க்கலாம்.

நீ உதித்ததாய் அறிந்த தருணத்தில் மனதில் இருந்தது என்னவோ அதீத சந்தோஷம் மட்டுமே. நாட்கள் செல்ல செல்லவே உணர்கிறேன்  உன்னுடன்  சேர்த்து சில கடமைகளும் என்னுள் சேர்வதை. உன்னைக்  குறித்தான கனவுகளும் கற்பனைகளும் எனக்கு மிகவும் அதிகம் உயிரே.

கனவுகள் என்றதும் பயப்படாதே உன் மீது எதை எதையோ திணிக்க இப்பொழுதே தயாராகி விட்டேன் என்று. நிச்சயமாய் நான் அப்படியான காரியத்தை செய்ய மாட்டேன் மகளே(னே). உன் கரம் பிடித்து பாதையில் அழைத்துச் செல்வதல்ல என் நோக்கம், உன் கண் முன் உள்ள வழிகளை உனக்கு அறிமுகப் படுத்தி வைப்பது மட்டுமே என் பணி அதன் பிறகு அதில் உன் பாதை என்பது உன் பாதங்கள் தேர்ந்தெடுப்பதாய் மட்டுமே இருக்கும். நிச்சயம் அதில் என் குறுக்கீடு என்பது எள்ளளவும் இருக்காது.
பாதைகளில் ஏதேனும் தவறிருந்தால் அதை நான் அறிந்திருந்தால் உனக்குச் சுட்டிக்காட்டுவேன் அத்துணையே அதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. இத்தருணத்தில் இது நான் உனக்கு அளிக்கும் வாக்குறுதி.

பின் உனக்கான என்னுடைய கற்பனையும் கனவும் என்னவென்றா கேட்கிறாய். அது வேறொன்றும் இல்லை கண்ணே. உனக்கான என் கற்பனை உன் முதல் பார்வை, உன் முதல் புன்னகை, உன் முதல் தொடுகை, உன் முதல் முத்தம், உன் முதல் அழைப்பு, உன் முதல் அடி இவை குறித்தே. உனக்கான என் கனவு என்பது நாம் பேச இருக்கும் புத்தகங்கள், தலைவர்கள், நாம் போக இருக்கும் தேசங்கள், நகரங்கள், நாம் உணரவிருக்கும் இசை, நமக்கான கலை கொண்டாட்டங்கள் இவையே.

இசையும் புத்தகங்களும் கலையும் என்னவென்றே இப்பொழுது உனக்கு தெரியாதுதான். கவலை வேண்டாம் இவை ஒவ்வொன்றையும் நானே உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். அபிமன்யூ கருவறையிலேயே வித்தைகளைக் கற்றது போல, நீயும் ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வாய் மகளே(னே). இது என்ன நகை முரண் சற்று முன்புதான் என் மீது எதையும் திணிக்க மாட்டேன் என்று விட்டு இப்பொழுது இத்தனை வரிசை கட்டி சொன்னால் எப்படி என்கிறாயா? மகளே(னே) ஒரு சமூகத்தின் தொன்மை சிறப்புகளும், பண்பாடும், பழக்கவழக்கங்களும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் இலக்கியங்களும் கலைகளுமே மிகப் பெரிய ஊடகம். அவைகளே சமூகத்தின் சாளரங்கள். அதனால்தான் அவைகளை முதலிலேயே உனக்கு அறிமுகப்படுத்த எண்ணம் கொண்டிருக்கிறேன்.

கலைகளும் இலக்கியங்களும்ஒன்றும் கடுமையானதில்லை மகவே அவை நம் சமூகத்தின் கருவூலங்கள். நம் அடையாளங்கள். உலகம் ஒரு சமூகத்தின் தொன்மை மற்றும் இருப்பு குறித்து அறிந்து கொள்வதற்கு முதலில் நாடுவது அதன் கலை மற்றும் இலக்கிய வளங்களையே. அதைக் கோண்டே அனைத்தும் அறியப்படுகிறது, தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் அவற்றை தலை முறை தலை முறையாக எடுத்துச் செல்வது நம் கடமை என்று கருதுகிறேன் நான். அதன் பலனே உனக்கும் கற்றுக் கொடுக்க முனைவது.

உன்னுடன் பேச எனக்கு நிறைய இருக்கிறது மகளே(னே). நீ அதைக் கேட்க போகும் தருணங்களுக்காய் இப்போதிருந்தே காத்திருக்க தொடங்கி விட்டேன்.ஆனால் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அதிகம் வேண்டாம். விரைவில் இன்னும் பல முக்கிய அறிமுகங்களுடன் மீண்டும் வருகிறேன். அதுவரை நீ ஓய்வெடு என் செல்ல மகளே(னே).-- பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக