பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 2


மசக்கை அன்பதன் அர்த்தம் என்ன என்பதை முழுமையாய் அனுபவித்து உணர்கிறேன் இப்பொழுது. ஆனால் நீ என் செல்ல மகள(ன)ல்லவா அதனால்தான் பெரிதாய் எதுவும் தொந்தரவு கொடுக்காமல் இப்பொழுதே
சமத்தாய் இருக்கிறாய் போலும். நிறைய தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் படும் கஷ்டங்களைப் பார்த்தபொழுது எனக்கும் ஆரம்பத்தில் பயமாகவே இருந்தது. அதுவும் மசக்கை வாந்தி ஆரம்பித்த காலத்தில் நிரம்பவே பயந்துதான் போனேன், ஆனால் நீ என் சமத்து, பெரிதாய் என்னை நீ தொந்தரவு படுத்தவே இல்லை, வாந்தி ஆரம்பித்த வேகத்தில் அப்படியே நின்றும் போனது. ஆனால் என் உணவு பழக்கம் தான் முற்றிலும் மாறிப் போனது.


எனக்கு இப்பொழுதே ஒரு சந்தேகம் நீ வயிற்றில் வளரும் போதே அப்பா பிள்ளையாய்  வளர்கிறாயோ என்று. ஹிஹி அது ஒன்றும் இல்லை இப்பொழுதெல்லாம் என் உணவு பழக்கமானது எனக்கு பிடித்தமானவைகள் எல்லாம் தவிர்க்கப்பட்டு உன் தந்தைக்கு பிடித்தவை எல்லாம் எனக்கும் பிடித்தமானவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. ( உன் அப்பாவின் காட்டில் மழை. வேறு என்ன சொல்ல?). இட்டிலியை இப்படி விரும்பி சாப்பிடுவேனென்று ஒரு பொழுதும் நான் நினைத்ததே இல்லை. தொலைபேசியில் இதை அறிந்த உன் பாட்டிக்கு அதுதான் என்னுடைய அம்மாவிற்கு அப்படி ஒரு புன்னகை. அந்த இட்டிலியை சமைத்தற்காய்  அவரை என்ன பாடு படுத்தியிருப்பேன் முதலில் எல்லாம். ஹ்ம்ம் விதி வலியது அப்படித்தானே. இதை கேட்கையில் வயிற்றில் இருக்கும் உனக்கும் புன்னகை மேலிடுவது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய?

இத்தருணத்தில் உன் தந்தையைக் குறித்தும் கூற வேண்டும். உண்மையில் அவர் எனக்கு கணவர் மட்டுமல்ல தாயுமானவர். உறவுகளை எல்லாம் விட்டு விட்டு கடல் கடந்து வெளி நாட்டில் வாழும் எங்களைப் போன்ற தம்பதிகளுக்கு எது நடந்தாலும் நாங்களே ஒருவருக்கொருவர் துணை. அது சுகமானாலும் துக்கமானாலும் பெரும்பாலும் எங்களுக்குள்ளேயே முடிந்தும் போகிறது. இத்தகைய தனிமையில் தாய்மைப்பேறு என்பது அனைத்து உணர்ச்சிகளும் கலந்த ஒன்று. ஆனால் இதனை முழுக்க முழுக்க சந்தோஷ நினைவுகள் கொண்ட ஒன்றாக மாற்ற உன் தந்தை தன்னால் ஆன அனைத்தையும் செய்கிறார். காலை முதல் அலுவலகத்தில் உழைத்து கலைத்து வந்தாலும் நான் வீட்டில் முடியாதிருக்கும் தருணங்களில் என்னையும் கவனித்து வீட்டு வேலைகளையும் முடித்து உறங்கும் வரையில் உழைத்துக் கொண்டே இருக்கிறார். பெண்களுக்கு இப்படி ஒரு கணவன் கிடைப்பது உணமையிலேயே வரம் அல்லவா. 

அவரின் மனைவியாக நான் எத்தனை அதிர்ஷ்டம் செய்தேனோ அதை விடவும் பல மடங்கு அதிர்ஷ்டம் செய்தவள் நீ அவரின்  மகளா(னா)வதற்க்கு. இந்த வரிகளை எழுதுகையில் என்னையும் அறியாமல் என் மனதிற்குள் " ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் எங்கிருந்தோ வந்து சேர்கிறது.

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி"

உண்மைதான் கண்ணே உன் கைகள் பிடித்து போகும் வழி முடிவில்லாத் தொலைவுகள் கொண்டதாய் இருக்க வேண்டும். அதில் நீயும் நானும் உன் தந்தையும் சேர்ந்து இசைக்கும் கீதம் இன்னிசையாய் எங்கும் வியாபிக்க வேண்டும். உன்னைக் குறித்தான என் கனவுகள் இன்னும் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது வானை முட்டும் எண்ணத்துடன்.
இன்று உன் அப்பாவும் நானும் மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தோம். ஸ்கேனிங் செய்த மருத்துவர் உன் அப்பாவையும் அழைத்து எங்கள் இருவரையும் உன்னைப் பார்க்க செய்தார். இன்னும் முழுவதும் உருவம் பெறாத உன் சின்னச்சிறு உருவம்... அத்தனை அழகு... உன் கை கால் அசைவுகள், ஒரு இடத்தில் நிற்காமல் நீந்திக் கொண்டே இருந்தது. அற்புதமான தருணம் கண்ணே. அனைத்திலும் உச்சம் அக்கருவியின் ஒலிப்பெருக்கியின் வழியே மருத்துவர் உன் இருதயத் துடிப்ப எங்களைக் கேட்க வைத்தது தான். வாழ்வின் மிக சந்தோஷமான தருணங்களில் ஒன்று இது.

உன்னை அங்கு கண்ட உன் தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரின் உணர்ச்சிப் பெருக்கை பார்த்த மருத்துவருக்கு அது மிகப்பெரிய ஆச்சரியம். இவர் என்ன இத்தனை சந்தோஷப்படுகிறார் இவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது, சில பேரிடம் இப்படிக் குழந்தையைக் காட்டும் பொழுது அவர்களிடம் எந்தவித உணர்ச்சியும் இருக்காது, ஆனால் இவரின் உற்சாகம் என்னையும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது என்றார் மருத்துவர். அன்றைக்கு முழுவதும் உன் தந்தையை கட்டுப்படுத்தவே இயலவில்லை, சூழ்நிலை மறந்து மருத்துவனை வரவேற்பறையில் ஆடத்தொடங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளேன். அதிலும் வீட்டிற்கு வந்து நீ வயிற்றில் எந்த நிலையில் இருந்தாய் எப்படியெல்லாம் கையைக் காலை ஆட்டினாய் என்றெல்லாம் மறுநாள் வரையிலும் செய்து காட்டிக் கொண்டே இருந்தார்.

குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றார் மருத்துவர். இந்த நாட்டின் விதி முறைகள் குழந்தையின் பாலினத்தை கருவில் இருக்கும் போதே தெரிந்து கொள்ள அனுமதிக்கின்றன. ஆனால் எங்களுக்குத்தான் அத்தனை அவசரமாக பாலினம் தெரிந்து கொள்வதில் விருப்பமில்லை. கடைசி வரையில் நாங்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறோம். நீ வெளியில்
வந்து இந்த உலகத்தைப் பார்த்து எங்களையும் பார்க்கும் பொழுது நாங்களும் உன்னைக் கண்டு கொள்ளலாம் என்றிருக்கிறோம்.

இதுவே நீ நமது தாய்நாட்டில் பிறந்திருந்தால் அங்குள்ள சட்ட அமைப்பின் படி பாலினத்தை குழந்தை பிறப்பின் முன்னர் தெரிந்து கொள்ள முடியாதுதானே அதனால்தான் இங்கேயும் நாங்கள் அதையே பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.
நீ யாராயிருந்தாலும் எப்படியாயிருந்தாலும் எங்களின் செல்லமே, அதில் மாற்றமென்பது துளியேனும் இல்லை, அப்படித்தானே தங்கமே?

மாதம் பத்து முழுதாய் தவமிருந்து
சின்ன சின்னதாய் வலிகள் பொறுத்து
பிடித்ததை விடுத்து, உனக்கானது பிடித்து
ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிந்திட
அடுத்தென்பது என்னவென்றறியாமல்
ஒவ்வொரு நொடியும் நெடியதாய் கடக்க
கடைசியாய் வந்திட்ட நாளொன்றில்
இத்தனையும் பறந்து போகும்
உன் சின்னசிறிய கால்களும் கைகளும்
கன்னக் கதுப்பும் அழகிய விழியும்
பார்த்து சிலிர்க்கையில்.....

உண்மைதான் கண்ணே, எப்பொழுதும் வேகமாய் ஓடும் காலம் இப்பொழுது மட்டும் எனக்கு ஓரிடத்தில் தேங்கியே இருப்பாய் தோன்றுகிறது. இந்த காத்திருப்பு  ஏனோ இத்தனை நீளமாய்... ஹ்ம்ம். தினமும் உன்னைக் குறித்து ஏதேனும் ஒன்றை இணையத்தில் தேடிக் கொண்டே இருக்கிறேன். எதை எதை சாப்பிட்டால் உன் வளர்ச்சிக்கு நல்லதாய் இருக்கும், எப்படியான விசயங்களைப் படிக்க வேண்டும், எப்படியான விசயங்களைக் கேட்க வேண்டும் இன்னும் இன்னும். என் பொழுதுகளில் பாதிக்கும் மேல் இதுவே ஆக்கிரமித்துக் கொள்கிறது. பரவாயில்லை கண்ணே உன் வரவிற்காய் காத்திருக்கும் தருணங்களில், இந்த நீண்ட பொழுதுகளை சற்றே சுருக்கி கொள்ள இது போன்ற தேடல்களே உதவுகின்றன.

காத்திருப்புகளுடன்.......


--பிரியா
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக