பக்கங்கள்

இப்படியாக வானிலை .... ஒரு கற்பனை

மொட்டை மாடியில் விரித்திட்ட
நாடாக் கட்டிலில்
அயர்ந்து தூங்கையில்
திடுமென உணர்த்திட்ட
அதீத குளிரைத் தாங்காமல்
கைகள் போர்வையைத் துழாவிட
பார்வையில் மார்கழிப் பனி
திடுக்கிட்டு  விழித்திட
அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம்
தகிக்கும் கோடையில் பனித்துளியா?இது என்ன கனவா?
வெயிலின் வெம்மை தாங்காமல்
நேற்றிரவு தானே கட்டிலை
வெளியே போட்டோம்
செய்திகளில் கூட அக்கினியின் கொடூரம்
இன்று முதல் அதிகம் என்றுதானே
அந்த அழகி வாசித்தால்...
பின் எப்படி?

ஏதோ ஒன்றென யோசித்தபடி
உள்நுழைந்து
தொலைக்காட்சியை  இயக்க
அந்நேரத்தில் அவசர செய்திகளென்று
அதே அழகி அவசரமாய் வாசித்துக் கொண்டிருந்தால்
"நேயர்களுக்கு முக்கிய அறிவிப்பு
எதிர்பாராத வானிலை மாற்றம்,
வெயில் மொத்தமாய் மறைந்து
இன்று முதல் உறைபனி
சூரியனின் அஸ்தமன உதய நேரங்களிலும்
எதிர்பாராத மாற்றம்
மேலும் செய்திகளுக்கு...."

லேசாய் தலை கிறுகிறுக்க
ஒருவழியாய் சமாளித்து
குளித்து உடைமாற்றி
காலை உணவு முடித்து
அலுவலகம் கிளம்ப...
வீதிகளில் நேற்று வரை
இளநீரும், குளிர்மோரும்,
குடைகளும், தொப்பிகளும்,
விற்ற கடைகளில் - இன்று
குளிர்பிரதேச ஆடைகள்
சூடான சிற்றுண்டிகள்
குளிருக்கு இதமாய் டீ, காபி
என அனைத்தும் தலைகீழ்

சாலைகளில் படிந்திருந்த பனியை
சரியான உபகரணங்களின்றி
குப்பை  கூட்டும் சீமாரிலேயே
சிரமப்பட்டு அகற்றும்
சாலைப் பணியாளர்,
எதிர்பாராத காரணங்களினால்
போக்குவரத்து தடையால்
தேங்கிக் கிடக்கும் வாகனங்கள்
என அனைத்தும் கடந்து
அலுவலகம் வர....

அலுவலக வண்டி நிறுத்ததில்
ஆயாமா எதையோ கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாய் பனியை
அகற்றியபடி - காலை வேளையின்
பணியையும், பனியையும்
சேர்த்தே பேசித்தீர்த்தது
தெள்ளு தமிழில்...
--பிரியா
2 கருத்துகள்:

 1. அருமை! இப்படி ஓர் மாற்றம் நிகழ்ந்தால் சுவாரஸ்யம்தான்!

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு