பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 3

எப்படி இருக்கிறாய் கண்ணே... கடைசியாய் உன்னைக் குறித்தும் உன்னுடன் உரையாடியும் சிறிது நாட்கள் கடந்து விட்டன. இடையில் ஏற்பட்ட சில பல எதிர்பாராத எதிர்மறை நிகழ்வுகளால் ஏற்பட்ட சோர்வின் காரணமாய் என்னால் உன்னுடனும் உன்னைக் குறித்தும் அதிகம் பேச இயலவில்லை. எதுவும் கடந்து போகும் என்னும் வாழ்வின் கோட்பாட்டுடன் அனைத்தையும் கடக்க முயற்ச்சிக்கிறேன். வாழ்வில் மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டிய தருணத்தில் மிகவும் முக்கியமானது இதுவென்பது நானும் அறிந்ததே, ஆனால் சில சூழ்நிலைகளின் காரணமாய் அதற்கும் சிறு இடைவேளி விடும்படியாய் அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.


மருத்துவரை கடைசி முறை சந்தித்தும் சில காலங்கள் கடந்த நிலையில் அவரே தொலைபேசியில் அழைத்து மருத்துவமனை  வர சொல்லும்வரையிலும் செல்ல இயலாமல் ஆகிவிட்டது. இருப்பினும் அவரின் அழைப்பின் படி சென்று உன்னை மீண்டும் அவர் பரிசோதித்து அறிந்து அனைத்தும் நன்றாய் இருப்பதாய் கூறியதும் இருந்த துன்பங்கள் எல்லாம் எங்கோ மறைந்துவிட்ட உணர்வு. ஆனால் ஒரு மிகப்பெரிய வருத்தம் இம்முறை அவர் உன்னை எனக்கு காட்டவில்லை என்பதுதான். சில மருத்துவ காரணங்களுக்காய் உன் வளர்ச்சி குறித்த குறிப்புகள் அவருக்குத் தேவைப்பட்டன, அந்த குறிப்புகளைப் பெறவே அவர் எங்களை அழைத்தும் இருந்தார். அதனால் அவருக்கு இம்முறை உன்னை எனக்கு காட்டி விளக்கம் சொல்லுவதற்கான அவகாசம் இல்லாமல் போய்விட்டது. வருத்தத்திலும் சிறு ஆறுதல், பத்து நாள் இடைவேளியில் எங்களை மீண்டும் வர சொல்லியிருக்கிறார் அப்பொழுது உன்னை நிச்சயம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை தான்.

இம்முறை இன்னொரு தகவலும் அறிந்து கொண்டேன் அது என்னவெனில் உன்னுடைய செவிப்புலன் சம்பந்தப்பட்ட எலும்புகளின் வளர்ச்சி இப்பொழுதிலிருந்து தொடங்கியிருக்கும் என்பதுதான். எத்தனை மகிழ்ச்சியான செய்தி. இனி நான் உன்னுடன் சத்தமாக உரையாடலாம் அல்லவா. எனது நீண்ட பகல் பொழுதின் தனிமைகள் இனி தீர தொடங்கி விடும். ஆனால் இதனுடன் கூடிய குறுஞ்செய்தி ஒன்றும் உண்டு அது இன்னும் சிறிது நாட்கள் கழித்தே உன்னால் நான் பேசுவதை எல்லாம் கேட்க முடியும் என்பதும், இப்போதைக்கு தாயின் இருதய துடிப்பு ஓசை மட்டுமே உன் செவிப்பறைகளை வந்தடையும் என்பதும்.

பரவாயில்லை இன்னும் சிறிது நாட்கள் தானே அதிகபட்சம் ஒரு மாதம் ஆகுமா அகட்டுமே எப்படியோ என் தனிமை தீர்ந்தது அப்படித்தானே கண்ணே. தாய்க்கும் சேய்க்குமான உரையாடல் என்பது என்றென்றைக்கும் உரியது. முடிவற்ற பல கதைகளையும், வெளிகளையும் தாண்டி செல்லக் கூடியது. எண்ணற்ற கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கியது.அப்படியான விஷயங்களின் தொடக்கம் என்பது அமைந்துவிட்டது என்பது எத்தனை பெரிய சந்தோஷத்தைத் தரக்கூடியது. இல்லையா?. ஒரு சின்ன செய்தி வாழ்வின் பல்வேறு விஷயங்களைத் திருப்பி போட்டு விடும் என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மை.

இந்த சிந்தனைகளில் மூழ்கும் பொழுதெல்லாம் உள்ளம் தான் எத்தனை உவகை கொள்கிறது. உன்னுடன் உரையாடும் தருணங்களையும், உன்னைக் குறித்தும் எண்ணிப் பார்க்கும் தருணங்களிலெல்லாம் பாரதியின் கண்ணம்மாவும், கண்ணனும், பாப்பாவும் நெஞ்சில் அலையடித்துச்  செல்கின்றனர். கண்ணனும், பாப்பாவும் சரி கண்ணாமாவுக்கு இங்கென்ன வேலை என்று நீ பிற்காலத்தில் கேட்கலாம். அவன் கண்ணம்மாவின் பாடல்களில் இழையோடும் அன்பும் காதலும் அனைவருக்கும் பொதுவன்றோ, ஆகையால் அது உனக்கும் சேர்ந்ததே கண்ணே. காற்று வெளியிடை பாரதி கண்ணம்மாவின் காதலை எண்ணிக் கழித்தான், நான் அதே காற்று வெளியிடை உன்னைக் கற்பனையில் எண்ணிக்  கழிதீர்க்கிறேன். எனில் கண்ணம்மாவை நான் இங்கே இழுத்தது சரிதானே.


" நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் நினைப் 
பொன்னென கொண்ட  பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினிலே வளர் சோதியே - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே!"

இந்த வரிகளில் கண்ணம்மாவைக் குறித்த பாரதியின் சிந்தனைக்கும் உன்னைக் குறித்தன எந்தன் சிந்தனைக்கும் எந்தவொரு வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. உனைக் குறித்து பேசத் தொடங்கிய முதல் அத்தியாயத்திலேயே நான் கூறியிருந்தேன் " நீ வந்துதித்தாய் அறிந்திட்ட கணமதில் என் துன்பங்கள் அனைத்தும் பறந்து விட்டது" என, பாரதியும் அதையே கூறுகின்றான். இதைப் போலவெ மற்றைய வரிகளனைத்தும். என் வாழ்வின் அனைத்து கட்டங்களுக்கும் துன்ப, துயர, இன்பமெனும் அனைத்திற்குமான வரிகளை தன்னகத்தே கொண்ட கவிஞன் இவன் என்பது எத்தனை உண்மை.

எப்படி உன்னைக் குறித்து பேச ஆரம்பித்தால் பக்கங்கள் நிறைந்து கொண்டேயிருக்கிறதோ அப்படியே பாரதியும் எனக்கு, அவனைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தால் நான் கூற்று வெளியிடைதான் நிற்க்க வேண்டிவரும், ஆதலால் இப்போதைக்கு அவனை இங்கேயே விட்டுவிடுவோம்.

மூன்று பருவங்கள் கொண்ட கர்ப்பகாலத்தின் முதல் பருவம் முடிவடைந்து, இரண்டாம் பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன். மசக்கையின் ஆரம்பகட்ட அனைத்து அசௌகரியங்களும் முடிந்து சிறிது சிறிதாய் இயல்பு நிலைக்கு உடலும் மனமும் திரும்பிக்  கொண்டிருக்கின்றன. உனது அடுத்த, அடுத்த கட்ட வளர்ச்சியினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்  மட்டுமே இப்பொழுதெல்லாம் வெளிப்படுபவை. வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் பெரிய அளவில் குறைந்துவிட்டன. சிறிது நாட்களாய் சரியாய் செய்ய முடியாமல் தவித்து வந்த அன்றாட வீட்டு
வேலைகள் உட்பட அனைத்து வேலைகளும் மீண்டும் முன்பு போலவே சிறிது சிறிதாய் செய்யத் தொடங்கி விட்டேன். மனசும் உடலும் லேசாய் மாறத் தொடங்கிவிட்டது.

என் உடல்நிலை குறித்தும் தனிமை குறித்தும் கவலைப்படும் உன் பாட்டிக்கு நான் கூறும் ஒரே விடயம் என்ன தெரியுமா, "என் குழந்தைக்கு இப்பொழுதே தெரிந்துவிட்டது அம்மா பெரிதாய் உதவிக்கு யாருமின்றி இருக்கிறாள் என்று அதனால் இப்பொழுதே சமத்து குழந்தையாய் எனக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை" என்று, சரிதானே. இப்பொழுதே அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்து என்னுள் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் வளர்ந்து வரும் உன் கருணைக்கு என் அதீத அன்பும் முத்தங்களும் உரித்தானது. அத்துடன் சேர்த்து கருவிகளின்  வழியே கண்டுணர்ந்த உன் மெல்லிய பாதங்களுக்கும், மெல்லிய முகத்திற்கு, சின்னஞ்சிறிய கைகளுக்கும் விரல்களுக்கும் காற்றின் வழியே என் அன்பான முத்தங்கள் கண்ணே!.... விரைவில் உன்னைத் தொட்டு உன் ஸ்பரிசங்களுடன் உனக்களிக்க போகும் முத்தங்களுக்கு இது ஒரு ஆரம்பம்.

உன்னைத் தொட்டு, உன் வாசம் முகர்ந்து , உன்னில் அன்பு செலுத்தும், உன்னில் என்னை  உணரும் அந்த கணத்திற்கான காத்திருப்புகளுடன்.....


பிரியா.. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக