பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 4


இதற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் பலரும் குழந்தை தன்னை உதைக்கும் அந்த தருணம் குறித்து பரவசமாய் சிலாகிப்பதையும், மகிழ்ச்சியுடன் பகிர்வதையும் கேட்டிருக்கிறேன், ஆனால் அதை உணர்ந்ததில்லை. இப்பொழுதே முதன் முறையாக அந்த தருணம் எப்படியானது என்பதை உணர தொடங்கியிருக்கிறேன். இன்னும் அதை அனுபவிக்க ஆரம்பிக்கவில்லை என்ற போதும் அதற்கான காத்திருப்பு கூட இத்தனை இனிமைகளைத் தர முடியும் என்பது பேரதிசயமே.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னுடைய அந்த முதல் தொடுதலுக்கான சுகத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

யாராவது நம்மை உதைக்க வேண்டும் என்று வாழ்வில் இப்படி காத்திருப்போமா என்ன?ஆனால் இந்த பிஞ்சு பாதங்களின் உதை மட்டும் ஏனோ இத்தனை எதிர்பார்ப்புகளையும் காத்திருப்புகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒய்வு நேரங்கள் முழுமையும் என் கைகள் கொண்டு உன் பாதங்களை என்னுள் தேடிக் கொண்டே இருக்கிறேன், ஏதாகிலும் ஒரு கணத்தில் அந்த பாதங்களை, அந்த ஸ்பரிசத்தை அடைந்து விட மாட்டோமா என்று. அப்படித் தேடித் தேடி அடைந்த கணங்களின் சந்தோஷம் என்பது வாழ்வின் பிற அனைத்து சந்தோஷங்களையும் தாண்டி சொல்ல முடியாத அளவில் பேரதிசயம் ஹ்ம்ம்.

மாதங்கள் நகர நகர பெரியவர்கள் அடுத்து  என்ன என்பதைக் குறித்து யோசிக்கவும் பேசவும் தொடங்கியாயிற்று. கர்ப்ப காலத்தின் இடைப்பகுதியில் வரக்கூடிய சடங்கு வேறு எதுவாய் இருந்திடக் கூடும் வளைகாப்பு நிகழ்ச்சிதான் அது. பெரியவர்களைப் பொறுத்த வரை அது கட்டாயம் செய்திட வேண்டிய ஒரு சடங்கு, ஒரு சீர் முறை அத்தனையே. அந்த சடங்கின் பின்னால் உள்ள காரண காரியங்கள் குறித்து பலருக்கு தெரிவதேயில்லை இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலர் அதை தெரிந்து கொள்ள அக்கறை எடுப்பதும் இல்லை என்பதே மிகப்பெரிய உண்மை. ஆனால் எவருமில்லாமல் தனியே இருக்கையில் சடங்காவது சம்பிரதாயமாவது....அதற்காக நமது சந்டங்கு சம்பிரதாயங்களை நான் குறை கூறவில்லை அவை அத்தனையும் அர்த்தமிக்கவை என்பதில் சிறிதும்  ஐயமில்லை. கர்ப்பகாலத்தில் ஐந்தாவது மாதத்திலோ அதன் பின்பு வரும் ஏதேனும் ஒரு மாதத்திலோ நடத்தப்படும் இந்த சடங்கின் பின்னால் உள்ள அறிவியல் அற்புதமானது. இந்த காலகட்டத்தில் தான் வயிற்றில் உள்ள சிசுவின் செவிப்புலன் உறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன, சிசு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் உள்ள ஓசைகளைக் கேட்க தொடங்குகிறது.

நான் சென்ற முறை உன்னுடன் பேசுகையில் கூறியிருந்தேனே உன் செவிப்புலன் உறுப்புகள் வளர்ச்சி குறித்து மருத்துவர் கூறினார் என்று இப்பொழுது அதையும் இதையும் யோசித்தாலே அனைத்தும் விளங்கும். அதனால்தான் இக்காலகட்டத்தில் கையில் கண்ணாடி வளையல்கள் இட்டு அதன் ஓசை சிசுவை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த சடங்கு. அப்படியாக வெளிப்புறத்தில் இருந்து எழும் ஓசைகள் உன்னை குசிப்படுத்தும் போது உன்னில் இருந்து வரும் சந்தோஷ எதிர் வினைகள் என்னையும் பெரிதும் குஷிப்படுத்திடும் அல்லவா?  இதுவே அதன் தாத்பரியம். ஆனால் வெறும் சடங்காக மாறிவிட்ட இந்த நிகழ்வு சில  நேரம் சோர்வையே கொடுக்கிறது. எப்படி என்றா கேட்கிறாய், இந்த சடங்கை செய்ய இந்த நாட்டில் கண்ணாடி வளையல்கள் கிடைக்காது எனக் கூறிடும் பொழுது அங்கு கிடைக்கும் பிளாஸ்டிக் வளையல்களைக்  கொண்டு சடங்கை முடித்து விடுங்கள் எப்படியோ அந்த சடங்கு என்பது நடந்தால் போதும் என்னும் மறுமொழி கிடைத்திடும் போது.

அதற்காக நான் அவர்களையும் குறை சொல்லவில்லை அவர்கள் அறிந்தது அத்தனையே. பல நல்ல பழக்கங்கள் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக அதை நம் முன்னோர்கள் கட்டாய சடங்குகள் என்ற பெயரில் கூறி வைக்க, இப்பொழுது காரணங்கள் மறைந்து கட்டாயங்கள்  மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஒரு  உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டுமென்றால் குங்குமப்பூ குறித்து கூறலாம். குங்குமப்பூ உண்மையில் பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்லது, ஆனால் அப்படிக் கூறினால் எத்தனை பேர் தவறாமல் குடிப்போம்? அதே குங்குமப்பூ குடித்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றால் ஓடி ஓடி குடிப்போம். இதுதான் உண்மை.  நம் முன்னோர்கள் அனைத்தையும் சடங்காகவும், கட்டாயமாகவும் ஆக்கியதன்  மர்மம் இதுவே.

இப்பொழுது எனக்கு சில விஷயங்கள் தோன்றுகிறது, வளையல்களின் ஓசையின் வழி உன்னிடம் உரையாடுவதே இதன் நோக்கம் எனில், என் குழந்தையுடன் உரையாட எனக்கும்  உனக்கும் நடுவில் இன்னொருவர் அல்லது இன்னொரு ஊடகம் என்பது எதற்கு? 24 மணி நேரமும் உன்னிடம் உரையாட முடியாது என்பதாலேயே அந்த வளையல் சங்கதி என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் வளையல்கள் முடியாத ஒன்றாகிய போது மாற்று வழிகளை யோசிக்கலாம் தானே? நான் இரசித்து வளர்ந்த இசை, படித்து மகிழ்ந்த இல்லக்கியங்கள் இவையெல்லாம் இப்பொழுது கை கொடுக்கும்தானே, அதனால்தான் நான் முடிவு எடுத்துளேன் என்னால் எத்தனை முடியுமோ அத்தனை உன்னுடன் பேசுவது பேசாத பொழுது இருக்கவே இருக்கிறது இசை. நான் இரசித்த என்னை பைத்தியமாக்கிய இராஜாவும், ரகுமானும் உன்னை சும்மா விட்டு விடுவார்களா என்ன? அவர்களும்தான் உன்னைக் கொஞ்சம் வளர்க்கட்டுமே, வலையோசிக்கிணையான எத்தனையோ ஆகாச்சிறந்த இசைக் கோர்வைகள் அவர்களிடமும் உள்ளன கண்ணே.

எப்படியும் நீ வெளியில் வந்த பின்னர் அவர்களின்றி உன்னுலகம் இருக்காது அது இப்போதிருந்தே தொடங்கட்டுமே. இலக்கியத்தில் நான் அறிந்த பாரதியையும், வள்ளுவனையும் இன்னும் மற்றவர்களையும் நானறிந்த வகையில் அறிமுகப் படுத்துகிறேன். உனக்கான அவர்களை நீ வெளியில் வந்து தேடிக்கொள். அதைப்போலவே இசையும் இன்ன பிறவும். அறிவுப்பூர்வமான விசயங்களை இப்படியே விட்டு விடுவோம். இப்போதைக்கு இதுவே அதிகம். மொத்தமாய் அனைத்தையும் இப்பொழுதே உன் சிறிய மூளையில் திணித்திட வேண்டாம், நீ இப்போதைக்கு நன்றாய் ஓய்வெடு, மீண்டும் ஒருநாள் பேசுவோம்.

அளவுகடந்த பிரியங்களுடன்............
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக