பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 5எப்படி இருக்கிறாய் என் செல்ல தங்கமே? இப்பொழுதுதான் உன்னைக் குறித்து அறிந்ததுபோல் இருக்கிறது அதற்குள் ஆறு மாதங்கள் முடிந்து ஏழாவது மாதம் ஆரம்பித்து விட்டது. காலம்தான் எத்தனை வேகமாய் செல்கிறது. நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க உன்னை சீக்கிரம் காண வேண்டும் என்ற ஆவலும், எண்ணமும், உந்துதலும் சேர்த்தே அதிகரிக்கிறது. உன் சின்னச்சிறு விரல்களை பிடிக்க உச்சி முகர உன் சிரிப்பினைக் காணவென கனவுகளும் கற்பனைகளும் விரிந்து கொண்டே செல்கின்றது. என்ன செய்ய எத்தனைதான் நான் கனவு கண்டாலும் அவசரம் கொண்டாலும் இயற்க்கை அது அதற்கென ஒரு காலவரையறை வைத்துள்ளதே அதன் படிதானே அனைத்தும் நடக்க இயலும். அதுவரை என்னுள் உன்னை வைத்துக் கொண்டே உன்னுள் உரையாடிக் கொண்டே காலத்தை ஒட்டி விடுவேன்.

உன்னிடம் உரைத்தது போலவே பாரதி, வள்ளுவன் இருவரையும் நல்லதொரு நாளில் உனக்கு இனிதே அறிமுகப்படுத்தியாயிற்று. இனி அவர்கள் உன்னைப் பார்த்துக்கொள்வார்கள். உள்ளிருக்கும் வரையில் அவர்களை முடிந்தவரை அறிந்துகொள் வெளியில் வந்தவுடன் அவர்களைத் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கும் பலரையும் முடிந்தவரை ஒரு ஒருவராக அறிமுகம் செய்கிறேன். அதன்பின் உனக்கான தேடுதலையும் தேறுதலையும் நீயே பார்த்துக்கொள். ஏன் இத்தனை அவசரம் என்று நீ யோசிக்கலாம், சமூக சூழ்நிலையின் மாற்றங்களை எல்லாம் பார்க்கையில் நீ வெளியில் வந்து எப்படியான வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற கவலை இப்பொழுதே என்னைத் தொற்றிக் கொள்கிறது. உலகை உனக்கு அறிமுகப் படுத்த வேண்டிய ஊடகங்களின் நிலை என்பது இப்பொழுது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது அதனால்தான் நான் அறிந்த நல்லவைகளை இப்பொழுதே உனக்கும் அறிமுகப் படுத்தும் எண்ணம் கொண்டேன்.

இன்றைய சமூக ஊடகங்கள் என்பது மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் என்பது மாறி வியாபாரத்திற்காக, வணிக நோக்கத்திற்காக என்று ஆகிவிட்டன. அவற்றின் மூலம் மக்கள் அறிந்து கொள்வதற்கான நல்லது என்பவையே இல்லாமல் போய்விட்டது. ஊரில் நடைபெறும் சமூக முன்னேற்றம் சார்ந்த நடவடிக்கைகளோ அல்லது வேறு எந்த நல்ல விஷயங்களுக்கோ அவற்றில் முக்கிய இடம் என்பதே இல்லை, அங்கங்கே மூலைகளில் நடக்கும் சமூக குற்றங்களே அவற்றில் முதன்மை செய்தியாகின்றன. அதற்காக குற்றங்கள் குறித்த செய்திகள் இடம்பெறவே கூடாது என்றில்லை ஆனால் அவை மட்டுமே இடம் பெறுகின்றதே என்பதே என் கவலை, என்னைப் போன்ற பலருக்கும்.

அதிலும் தற்சமயம் சில நாட்களாய் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகளைக் கண்டு இன்னும் சிறிது நாட்களுக்கு மொத்தமாய் அவற்றிலிருந்து விலகியே இருக்கலாமா என்ற எண்ணமே தோன்றுகிறது. என்ன செய்வது நீ என்னுள் இருக்கையில் நான் பார்க்கும் கேட்க்கும் என்னுள் உள்வாங்கும் அனைத்தும் உன்னைக் குறித்தான விஷயங்களைத் தீர்மானிப்பவையாக இருப்பதால் அனைத்தைக் குறித்தும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி உள்ளது. போகட்டும்  நீ எப்படி இருக்கிறாய் உனக்கு இந்த ஊடக செய்திகள் இதுவரை எந்த பிரச்சினையையும் கொடுக்கவில்லை தானே? அப்படி ஏதாகிலும் இருந்தால் இந்த அம்மாவை மன்னித்து விடு கண்ணே அந்த தவறு இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஹ்ம்ம் அவற்றைத்தான் நாம் தள்ளி வைத்தாயிற்றே, அதனால் இதனை இப்படியே விட்டு விடலாம் இனியும் எதற்கு அதைக் குறித்தே பேசிக்கொண்டும் யோசித்துக் கொண்டும்.

உனக்கு ஒன்று தெரியுமா இப்பொழுதெல்லாம் பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் நட்டுள்ள செடிகளையும் அவற்றில் மலர்ந்தும், மலர்வதற்காகவும் காத்துள்ள மலர்களையும் மொட்டுக்களையும் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஏதோ ஒன்று தோன்றுகிறது. அது நம்மையும் அந்த செடிகளையும் சேர்த்து யோசிக்க வைக்கிறது. அப்படி யோசித்தபோது  என்னுள் தோன்றிய சில வரிகள் இதோ ,

புதிதாய் நட்டிட்ட
தொட்டிச் செடியில்
முதன் முதலாய்
லேசாய் எட்டிப் பார்த்தது
சின்னச்சிறிய அரும்பொன்று
பச்சை நிற மூடியால் மூடப்பட்டு...
நாட்கள் செல்லச்செல்ல
அரும்பு மொட்டாகி
கொஞ்சம் கொஞ்சமாய்
பச்சை மூடி விரிய
புன் சிரிப்புடன்
எட்டிப் பார்த்தது பூவொன்று
தன் சுயம் காட்டி....


நீயும் கூட இந்த தொட்டிச் செடியில் பூத்த மொட்டைப் போலத்தானே லேசாய் என்னுள் மொட்டாகி, அரும்பாகி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து கடைசியில் பூவாகி உன் சுயம் காட்டி என் கைகளில் தவழ்வாய் அந்த பூவைப் போலவே மென்மையாய். இங்கு செடி என்பது நான் மொட்டென்பது நீ, ஆஹா நமக்கும் செடிக்கும் தான் எத்தனை பொருத்தம், இத்தனை நாட்களாய் இருந்ததை விட இனி செடிகளுக்கும்  பூக்களுக்கும், எனக்கும் உனக்குமான நெருக்கமும் கூட அதிகரிக்கவே செய்யும் இல்லையா.

இயற்கையை அன்னை என்று விழிப்பதற்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு மாற்றமும் இயற்கையின் ஏதோ ஒரு கட்டத்துடன் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது ஒரு மாறாத விதியைப்போல். உண்மையில் அனைத்திற்கும் பிறகு  நாமும் இயற்கையின் ஒரு அங்கம்தானே, அப்படி இருக்கையில் எப்படி வித்தியாசப் பட முடியும். சரிதானே? ம்ம் இன்றைக்கு இது போதும் மீதியை பின்னர் பேசலாம் இப்பொழுது நீ ஓய்வெடுத்துக்கொள் நானும் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்.

அன்பு முத்தங்களுடன்
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக