பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 6



செல்ல தங்கமே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழக்கம்போல் என் புலம்பல்களையும், அறிவுரை என்ற பெயரில் தொணதொணப்பையும் கேட்டு கேட்டு சலித்துப் போய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாயா? இதோ மீண்டும் வந்துவிட்டேன் ஹிஹி என்ன செய்ய என் மகனா(ளா)ய்  போய்விட்டாயே இந்த தொணதொணப்பிலும், புலம்பலிலும் மாற்றம் என்பது எப்பொழுதும் வர வாய்ப்பே இல்லை. நான் உனக்கு எழுதும் கடிதத்தை படிப்பவர்கள் எப்பொழுதும் வழவழவென்று பேசிக்கொண்டே இருந்தால் எப்படி என்கிறார்கள். ஆனால் இப்போதைய நிலையில் இதைத் தவிர வேறு எந்த வழியில் உன்னுடனான என் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது என்று எனக்கும் தெரியவில்லை அதனால்தான் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள் என் தங்கமே.

சமூக சூழ்நிலைகளின் தாக்கமும், உன் எதிர்காலம் பற்றிய பயமுமே இப்போதிருந்தே உன்னிடம் அனைத்தையும்குறித்து பேச வைக்கிறது. நான் பார்க்கும் பல இடங்களில் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளை வளர்த்து மேலுக்கு கொண்டு வருவது குறித்து நிறைய கவலைகளுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைக் கேட்டால் தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்தி கொண்டு வருவதும்  கூட மிகப் பெரிய சவாலான விஷயமாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் குழந்தைகள் வீதிகளில் இறங்கி விளையாடுவது என்பது கொண்டாட்டமான விஷயமாக, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் உறவுநிலை சமன்பாடு அனைத்திற்கும் உகந்ததான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போதைய நிலையில் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் விடுவது அவர்களின் பாதுகாப்புக்கே கேள்விக்குறியாக இருக்கிறதே? பின் எப்படி பயம் கொள்ளாமல் இருப்பது.

இத்தகைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் எங்களின் காலத்தை விட இன்னும் அதிகப்படியான  மன தைரியத்துடனும், வாழ்வின் அனைத்து அறங்களையும், தெரிந்து வளர வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் சுய பாதுகாப்பு என்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமூகத்துடனான ஒட்டுறவும். அதனால்தான் திருக்குறளையும், பாரதியின் வரிகளையும் இப்போதிருந்தே உனக்கு அறிமுகம் செய்கிறேன், அவர்களின் வரிகள் உனக்கு தைரியத்தை மட்டுமின்றி வாழ்வையும் கற்றுக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

வெளிவரும் முன்னே இப்படியெல்லாம் பயப்படுத்தினால் எப்படி என்கிறாயா? சங்கடம் வேண்டாம் கண்ணே இவை உனக்கான எச்சரிக்கை மட்டுமே, வேறு எதுவும் அல்ல அச்சம் வேண்டாம். உன் வாழ்வின் முக்கிய காலகட்டங்கள் அனைத்திலும் நானும் உன் அப்பாவும் உன்னுடனேயே  இருப்போம், நிச்சயம் தனித்து விட மாட்டோம் பயம் வேண்டாம். விரல் பிடித்து நடக்கும் வயதில் விரல் பிடித்தும் தோழ்  கொடுக்கும் காலத்தில் தோழமையுடனும் எப்பொழுதும் உனக்காகவும் உன்னுடனும் இருப்போம். உனக்கு நான் உரைத்திட்ட பாரதியின் பின்வரும் வரிகளை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்

"மனதி லுறுதி வேண்டும் 
வாக்கினிலே யினிமை வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
கனவு மெய்ப்பட வேண்டும்"



எக்காலத்திலும் எத்தகைய சங்கடத்திலும் இவ்வரிகள் உனக்கு நிச்சயம் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் நம்பிக்கையையும் தரும்.

இதுபோலவே என்னுடைய குறிப்பேட்டின் முதல் பக்கத்திலும் நான் ஒரு வரி எழுதி வைத்திருப்பேன் அது என்னவெனில்

" சில நேரம் நதியாய் 
   சில நேரம் காற்றாய்"

என்பதே.இது வாழ்வில் என்னுடைய இறுப்பை கூறும் வரிகள். காற்றும் நதியும் அதனதன் போக்கில் மிகவும் வலுவாய் செயல்படுபவை. சில நேரங்களில் மட்டுமே தன் போக்கையும் திசையையும் சற்றே மாற்றிக் கொள்ளக் கூடியவை. நீயும் வாழ்வில் அப்படியே இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளில், தேர்ந்தெடுக்கும் திசையில் தெளிவும் உறுதியும் எப்பொழுதும் இருக்க வேண்டும். அது மட்டுமே வாழ்வின் பல்வேறு உயரங்களை நீ அடைய உதவும். தெளிவற்ற முடிவும் திசைகளற்ற பயணமும் உன்னை எப்பொழுதும் உனக்கான இடத்தில் கொண்டு சேர்க்காது என்பதையும் நினைவில் கொள்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ சென்று வழக்கம்போல் இக்கடிதமும் அறிவுரையிலேயே முடிந்திருக்கிறது. ஹ்ம்ம் இருக்கட்டும் பரவாயில்லை அனைத்தும் உன் நன்மைக்கானது என்று கொள்கிறேன், அப்படியே நீயும் ஏற்றுக் கொள்வாய் என்றும் நம்புகிறேன். விரைவில் உன்னை சந்திக்கப்போகும் ஆனந்தத்துடன் இக்கடிதத்தை இங்கே இப்பொழுது  முடித்துக் கொள்கிறேன். உன்னை நேரில் சந்திக்கும் முன் மீண்டும் ஒருமுறை விரைவில் கடிதம் வாயிலாக சந்திப்போம் தங்கமே எனக்குள் இருக்கும் உனக்கான கடைசி கட்ட கடிதத்துடன் மற்றவை நேரில் என்ற முடிவுரையுடனும் முடித்துக் கொள்ள. அதுவரை

அன்பு முத்தங்களுடன்
பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக