பக்கங்கள்

என் அன்பான மகனு(ளு)க்கு - 7

பகுதி - 7

மிக நீண்ட காத்திருப்பு நிறைவுக்கு வரப்போகும் தருணமிது, அளவில்லாத மகிழ்ச்சியில் மனது நிரம்பி வழிகிறது. உன்னைப் பார்ப்பதற்கான இறுதி காத்திருப்புக்கு என்னுடன் சேர்ந்திருக்க உன்னுடைய பாட்டியும் இங்கு வந்தாயிற்று. உனக்கான காத்திருப்பு என்பதான  பொழுதுகள் மாறி இப்பொழுதெல்லாம் உனக்கான பொருட்களை தேடும் பொழுதுகளாக மாறிவிட்டது. என் நடை பயிற்சியே கடை கடையாக ஏறி இறங்கும் பயிற்சியாக மாறிவிட்டது. உனக்கான உடைகளெல்லாம் ஊரிலிருந்து உன் பெரியம்மா ஒரு வார காலம் அலைந்து வாங்கி உன் பாட்டியிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். அங்கே கிடைக்காத ஒரு சில பொருட்கள் மற்றும் தொட்டில் இன்ன பிற பொருட்களுக்கான தேடலே இங்கே இப்போது.

மாதங்கள் கடந்து நாட்களில் வந்துவிட்டது பொழுதுகள். இன்னும் ஒரு சில நாட்களே. நீ வந்து விடுவாய், எங்கள் உலகினை நிறைக்க. இந்த வருட தீபாவளி உன்னுடன், எத்தனை  பெரிய சந்தோசம் இது. இந்த வருட பொங்கல் பண்டிகை நமக்கு நமது நாட்டில், நம்முடைய மிகப் பெரிய அறுவடைத் திருநாள் திருவிழா அல்லவா இது. நாம் சந்தோஷமாக நம் ஊரில் கொண்டாடலாம். தீபாவளிதான் நமக்கு இங்கே, வேறு நாட்டில், பொங்கல் உன் தாத்தா பாட்டி நம் சொந்தங்களுடன் நம் நாட்டில். நினைக்கையிலேயே சந்தோசம் பொங்குகிறது. எனக்கு எதை பேசுவது எதை சொல்வது என்று தெரியவில்லை மனம் நிரம்பி வழிகிறது வார்த்தைகள்தான் வசப்படவில்லை.

இத்தனை மாதங்களில் உன்னுடன் எத்தனையோ விஷயங்களை பகிர்ந்தாயிற்று எனது உணர்வுகள், உனக்கான அறிவுரைகள் என்று எத்தனை எத்தனையோ. உன் பாட்டி இங்கு வந்து சில நாட்கள் முன்பு நான் சொல்லியிருந்த வளைகாப்பு சடங்கையும் சிறந்த முறையில் நடத்தி விட்டார். அவர் வந்த பின்பு இப்போதெல்லாம் எனக்கு முழு நேர ஒய்வு. அது மட்டுமா மூன்று நேரமும் வகை வகையான சாப்பாடும் கூட. உன் அப்பாவுக்கும் பெரும் நிம்மதி இல்லையெனில் தினம் தினம் எனைத்தனியே வீட்டில் விட்டு விட்டு அவர் அலுவகத்தில் அங்கும் மனம் ஒட்டாமல் இங்கு நான் என்ன செய்கிறேன் என யோசித்துக் கொண்டே இருப்பார். இப்போது அவருக்கு எந்த கவலையும் இல்லை. நிம்மதியாக வேலையை செய்கிறார்.

அனைத்தும் நல்ல விதமாய் போய்க்கொண்டிருக்கிறது, விரைவில் நீ என் கைகளில் தவழும் நாளை எதிர் நோக்கி. தினம் தினம் உனைக் குறித்த நினைவுகள் மட்டும்தான்,  வெளியே மால்களுக்கும் பெரிய கடைகளுக்கும் செல்கையில் அங்கே பிறர் தங்களுடன் எடுத்து வரும் சிறிய சிறிய குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் நீ இவர்களில் யாரைப்போல் இருப்பாய், யாரைப்போல் பார்ப்பாய், யாரைப்போல் சிரிப்பாய் என்றெல்லாம் என்னை மறந்து யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். நீ வெளியே வந்தபின்பு இதையெல்லாம் கேட்டால் சிரிப்பாய்.

உன் அப்பாவுக்கும் இங்கே இருக்கும் உன் மாமாவுக்கும் இப்பொழுதே போட்டி யார் உன்னை அதிக நேரம் தம்முடன் வைத்திருப்பது என்று. நீ யார் சொல்வதைக் கேட்பாய் என்றெல்லாம்.இப்பொழுதே உனக்கான விளையாட்டு சாமான்கள் கூட வீட்டில் சேர ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் நீ நம்புவாயா. அது மட்டுமா இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு நீ விளையாடுவதற்கான பொருட்களுக்கான தேடலையும் இருவரும் இப்போதே தொடங்கியாயிற்று. இவர்கள் இருவரையும் என்ன செய்ய.

போதும் கடிதம் மூலம் பேசியது. நீதான் விரைவில் என் கைகளில் வரப்போகிறாயே பின் எதற்கு இந்த கடிதத்தை இன்னும் நீட்டிக்க கொண்டு முடித்துக் கொள்வோம், சரிதானே? இனி நேருக்கு நேராக அனைத்தையும் பேசிக்கொள்ளலாம். சரி கண்ணே நான் கடிதங்களை இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன், எதிர் காலத்தில் வேலை நிமித்தமோ படிப்பின் நிமித்தமோ நீ எங்களை விட்டு தொலைவில் செல்லும் காலம்  எதுவும் வந்தால் மீண்டும் இது தொடரும். அதுவரை இடைவெளிவிட்டு இத்தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். சென்ற முறை உன்னிடம் உரைத்தது போலவே மற்றவை நேரில் என்ற பதத்துடன். உனக்கு என் முத்தங்கள் தங்கம்.


பிரியங்களுடனும், எதிர்பார்ப்புடனும்
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக