பக்கங்கள்

இப்படியாக வானிலை .... ஒரு கற்பனை

மொட்டை மாடியில் விரித்திட்ட
நாடாக் கட்டிலில்
அயர்ந்து தூங்கையில்
திடுமென உணர்த்திட்ட
அதீத குளிரைத் தாங்காமல்
கைகள் போர்வையைத் துழாவிட
பார்வையில் மார்கழிப் பனி
திடுக்கிட்டு  விழித்திட
அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம்
தகிக்கும் கோடையில் பனித்துளியா?

என் அன்பான மகனு(ளு)க்கு - 2


மசக்கை அன்பதன் அர்த்தம் என்ன என்பதை முழுமையாய் அனுபவித்து உணர்கிறேன் இப்பொழுது. ஆனால் நீ என் செல்ல மகள(ன)ல்லவா அதனால்தான் பெரிதாய் எதுவும் தொந்தரவு கொடுக்காமல் இப்பொழுதே
சமத்தாய் இருக்கிறாய் போலும். நிறைய தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் படும் கஷ்டங்களைப் பார்த்தபொழுது எனக்கும் ஆரம்பத்தில் பயமாகவே இருந்தது. அதுவும் மசக்கை வாந்தி ஆரம்பித்த காலத்தில் நிரம்பவே பயந்துதான் போனேன், ஆனால் நீ என் சமத்து, பெரிதாய் என்னை நீ தொந்தரவு படுத்தவே இல்லை, வாந்தி ஆரம்பித்த வேகத்தில் அப்படியே நின்றும் போனது. ஆனால் என் உணவு பழக்கம் தான் முற்றிலும் மாறிப் போனது.

என் அன்பான மகனு(ளு)க்கு - 1

தருணங்களில் பொன்னான தருணம் எதுவென்றால், இதுவே என்பேன், அது என்னுள் நீ வந்துதித்த செய்தியறிந்த தருணம் என் அருமை மகளே(னே). என்னை நான் முழுமையடைந்ததாய் உணர்ந்த தருணமும் இதுவே.

இந்த நாளுக்காய் நான் கடந்த வந்த நாட்கள் மிகவும் நெடியது என்னுயிரே. அவை அதிகமாய் இருக்கவில்லை ஆனால் ஏதேதோ காரணங்களால் நீண்டதாய் இருந்தன. சமுதாயத்தில் ஏதேதோ மாற்றங்கள் வந்த பின்னரும் இன்னும் சில விடயங்கள் மாறாததாய் அதே பழமை மிக்கதாய் இருப்பதே என் நாட்கள் நீண்டதாக காரணம். பெண் என்பவள் எத்தனை படித்திருந்தாலும்,  எத்தனையோ இலட்சியங்கள் கொண்டிருந்தாலும் திருமணம் முடிந்ததும் அவள் முதல் கடமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதாகவே இருக்க வேண்டும் என்பதே இச்சமூகத்தின் எதிர்பார்ப்பு.

எத்தனையோ காரணங்களால் சமூகத்தின் பல தேவையற்ற எதிர்பார்ப்புகள் பழக்கவழக்கங்களிலிருந்து நான் வேறுபட்டிருந்தாலும் இச்சமூகத்தின் அங்கமாகவே தொடர்ந்தும் இருப்பதால் அதன் விரல்கள் என்னையும் நோக்கி நீள்வதை என்னால் தடுக்க முடியவில்லை கண்ணே. தாய் நாட்டின் மண்ணிலிருந்து எத்தனையோ மைல்கள் விலகி  இருந்தாலும் கூட அந்த கரங்கள் எப்பொழுதும் என்னை தொட்டு விடும் தொலைவிலேயே இருக்கின்றன, என் பாதங்கள் மண்ணை மிதிக்கும் தருணத்திலெல்லாம்
அவை என் குரல் வளையை இறுக்க தயங்குவதே இல்லை.இதற்கும் நான் திருமண பந்தத்தில் இணைந்து இன்றோடு 15 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. இதற்குள் தான் எத்தனை நீண்ட நாட்கள்.
அதனால்தானோ என்னவோ நீ உதித்ததாய் அறிந்துவிட்ட தருணத்தில் உனக்கான என் மகிழ்ச்சியுடன் எனக்கான என் மகிழ்ச்சியும் சற்றே அதீத சுய நலத்துடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில் இனி என் குரல் வலைகள் குறித்து நான் கவலைப்பட வேண்டாம் தானே. அவை இனி நிச்சயம் பத்திரமாய் இருக்கும் உன் பொருட்டாவது.

போகட்டும் அந்த நீண்ட நாட்களின்  பலனெல்லாம் உன் மூலம் நான் அடைவேன் என்பது மட்டும் தின்னம். உன் அன்பில், உன் மழலையில், உன் சிரிப்பில், உன் தாவலில், உன் கொஞ்சலில் என்று உன் அனைத்திலும் அது மறைந்திருக்கும் தானே? அதனால்தான் சொல்கிறேன் நான் இனி எனை சற்றே  ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அப்படித்தானே?

இன்று நான் முதன் முதலாய் உலகத்துடன் உனைக்  குறித்து பேச தொடங்கியிருக்கிறேன் எனக்கு தெரிந்த, எதிர்காலத்தில் உனக்கும் புரியும் ஒரு நடையில். ஆனால் இது வரை பேசியதெல்லாம் எனைக் குறித்து மட்டுமே. ( நானின்றி நீ இல்லை எனும்போது உனைக் குறித்து பேசையில் ஆரம்பத்திலாவது நான் வந்துதானே தீர வேண்டும்). ஆனால் இனி உன்னை குறித்தும் உனக்கான அறிமுகங்கள் குறித்தும் பேசலாம் என்றிருக்கிறேன். நீ இந்த பூமி தொடும் நாள் வரையிலும் இதைத்  தொடரவும் தீர்மானித்துள்ளேன். காலம் வழி விடுமா? பார்க்கலாம்.

நீ உதித்ததாய் அறிந்த தருணத்தில் மனதில் இருந்தது என்னவோ அதீத சந்தோஷம் மட்டுமே. நாட்கள் செல்ல செல்லவே உணர்கிறேன்  உன்னுடன்  சேர்த்து சில கடமைகளும் என்னுள் சேர்வதை. உன்னைக்  குறித்தான கனவுகளும் கற்பனைகளும் எனக்கு மிகவும் அதிகம் உயிரே.

கனவுகள் என்றதும் பயப்படாதே உன் மீது எதை எதையோ திணிக்க இப்பொழுதே தயாராகி விட்டேன் என்று. நிச்சயமாய் நான் அப்படியான காரியத்தை செய்ய மாட்டேன் மகளே(னே). உன் கரம் பிடித்து பாதையில் அழைத்துச் செல்வதல்ல என் நோக்கம், உன் கண் முன் உள்ள வழிகளை உனக்கு அறிமுகப் படுத்தி வைப்பது மட்டுமே என் பணி அதன் பிறகு அதில் உன் பாதை என்பது உன் பாதங்கள் தேர்ந்தெடுப்பதாய் மட்டுமே இருக்கும். நிச்சயம் அதில் என் குறுக்கீடு என்பது எள்ளளவும் இருக்காது.
பாதைகளில் ஏதேனும் தவறிருந்தால் அதை நான் அறிந்திருந்தால் உனக்குச் சுட்டிக்காட்டுவேன் அத்துணையே அதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. இத்தருணத்தில் இது நான் உனக்கு அளிக்கும் வாக்குறுதி.

பின் உனக்கான என்னுடைய கற்பனையும் கனவும் என்னவென்றா கேட்கிறாய். அது வேறொன்றும் இல்லை கண்ணே. உனக்கான என் கற்பனை உன் முதல் பார்வை, உன் முதல் புன்னகை, உன் முதல் தொடுகை, உன் முதல் முத்தம், உன் முதல் அழைப்பு, உன் முதல் அடி இவை குறித்தே. உனக்கான என் கனவு என்பது நாம் பேச இருக்கும் புத்தகங்கள், தலைவர்கள், நாம் போக இருக்கும் தேசங்கள், நகரங்கள், நாம் உணரவிருக்கும் இசை, நமக்கான கலை கொண்டாட்டங்கள் இவையே.

இசையும் புத்தகங்களும் கலையும் என்னவென்றே இப்பொழுது உனக்கு தெரியாதுதான். கவலை வேண்டாம் இவை ஒவ்வொன்றையும் நானே உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். அபிமன்யூ கருவறையிலேயே வித்தைகளைக் கற்றது போல, நீயும் ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வாய் மகளே(னே). இது என்ன நகை முரண் சற்று முன்புதான் என் மீது எதையும் திணிக்க மாட்டேன் என்று விட்டு இப்பொழுது இத்தனை வரிசை கட்டி சொன்னால் எப்படி என்கிறாயா? மகளே(னே) ஒரு சமூகத்தின் தொன்மை சிறப்புகளும், பண்பாடும், பழக்கவழக்கங்களும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் இலக்கியங்களும் கலைகளுமே மிகப் பெரிய ஊடகம். அவைகளே சமூகத்தின் சாளரங்கள். அதனால்தான் அவைகளை முதலிலேயே உனக்கு அறிமுகப்படுத்த எண்ணம் கொண்டிருக்கிறேன்.

கலைகளும் இலக்கியங்களும்ஒன்றும் கடுமையானதில்லை மகவே அவை நம் சமூகத்தின் கருவூலங்கள். நம் அடையாளங்கள். உலகம் ஒரு சமூகத்தின் தொன்மை மற்றும் இருப்பு குறித்து அறிந்து கொள்வதற்கு முதலில் நாடுவது அதன் கலை மற்றும் இலக்கிய வளங்களையே. அதைக் கோண்டே அனைத்தும் அறியப்படுகிறது, தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் அவற்றை தலை முறை தலை முறையாக எடுத்துச் செல்வது நம் கடமை என்று கருதுகிறேன் நான். அதன் பலனே உனக்கும் கற்றுக் கொடுக்க முனைவது.

உன்னுடன் பேச எனக்கு நிறைய இருக்கிறது மகளே(னே). நீ அதைக் கேட்க போகும் தருணங்களுக்காய் இப்போதிருந்தே காத்திருக்க தொடங்கி விட்டேன்.ஆனால் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அதிகம் வேண்டாம். விரைவில் இன்னும் பல முக்கிய அறிமுகங்களுடன் மீண்டும் வருகிறேன். அதுவரை நீ ஓய்வெடு என் செல்ல மகளே(னே).-- பிரியா


மழைத் தோழி (ஒரு தொடர்)

மழை - ஒரு வார்த்தையாகப் படிக்கும் போது கூட அது வெறும் வார்த்தையாக இல்லாமல் பல்வேறுபட்ட சிந்தனைகளையும், நியாபகங்களையும் , உருவகங்களையும் தூண்டி செல்லும் தன்மை வாய்ந்த ஒரு இயற்கைப்  பேரதிசயம். மலை, நிலம்,காற்று என இயற்கையின் அத்தனை படைப்புகளுமே அதிசயந்தான். ஆனால், அதில் மழை ஒரு தனி ரகம்.

சிதறல் - 21

உறவு
=====
என்
எதிர்பாராத் தருணங்களை - இன்னும்
இதமாக்கிச் செல்வதில்
இருக்கிறது
எனக்கும் மழைக்குமான
பந்தம்

சில்லறை வணிக அரசியல்

 ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காய்கள் வாங்க சென்றிருந்தோம். வாங்கி முடித்து பணம் செலுத்துகையில் மீதி சில்லறைக்கு காசாளர் பெண் சில்லறைக்கு பதில் சாக்கலேட் கொடுத்தார். நான் அதை திருப்பி கொடுத்து எனக்கு சாக்கலேட் வேண்டாம் சில்லறை தொகை தான் வேண்டும் என்று கேட்க எனை வித்தியாசமாக பார்த்து முறைத்து கொண்டே சில்லறையைத் தந்தார்.

கீதா

லிப்ட் இல்லாத அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டாரின் மூன்றாம் தளத்திலிருந்து லிப்ட் வைக்காத முதலாளியை சபித்துக் கொண்டே வரும்போதுதான் மூன்றாவது இரண்டாவது தளங்களுக்கு மத்தியில் அனுவை  சந்திக்க நேர்ந்தது.நாங்கள் இருவரும் பள்ளித் தோழிகள். நீண்ட நாட்களின் பிறகு எதிர்பாராமல் சந்தித்து கொண்டதில் இருவரின் முகத்திலுமே அத்தனை மகிழ்ச்சி.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின் கீழ்த்தளத்தின் உணவுப் பகுதியில் எங்கள் அரட்டை தொடர்ந்தது. பேச்சு பல கட்டங்களைத் தாண்டி எங்கள் பள்ளி வாழ்க்கையைக் குறித்து சென்றது. பள்ளியில் அடித்த லூட்டிகள் எங்கள் நண்பர் கூட்டம் என்று நீண்டு கொண்டே சென்ற பேச்சில் எங்கிருந்தோ நுழைந்தது கீதாவின் நியாபகம்.

கீதாவும் எங்கள் பள்ளித் தோழிதான், மிக நன்றாக படிக்கும் மாணவி. பள்ளி இறுதி ஆண்டில் அவளே அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேறினால்.மேல்நிலைப்  பள்ளியில் அவள் முதல் பிரிவு (கணிதம், உயிரியல் பிரிவு) மாணவி, நாங்கள்  இரண்டாம் பிரிவு (கணிப்பொறி அறிவியல்). இருப்பினும் இரு பிரிவிற்கும் பொறியியல், கணிதம், இயற்பியல் பாடங்கள் கூட்டாக வைத்துதான் நடத்தப்படும், ஆதலால் அவளுக்கும் எங்களுக்கும் நல்ல அறிமுகம் இருந்தது, பின்னர் அது நல்ல நட்பாகவும் மாறியது.

பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்திருந்த போதே எங்கள் நட்பு நன்கு பலப்பட்டது, அப்படியே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்தது. கீதாவுக்கு ஒரு தங்கை, படித்துக் கொண்டிருந்தாள், அம்மா  கூலித் தொழிலாளி, அப்பாவிற்க்கு இவர்களை விடுத்து வேறொரு குடும்பம் இருந்தது, அவர் அவர்களுடன்  இருந்தார். இருப்பினும் அவர் பிள்ளைகளை அவ்வப்பொழுது வெளியில் சந்தித்து நலம் விசாரித்து சிறு தொகை  செலவிற்கு கொடுப்பதுண்டு, கீதாவின் குடும்பம் அவள் தாயின் பெற்றோருடன் வசித்து வந்தனர். அவர்களும் கூலி வேலை செய்பவர்களே.

கீதா காலை பள்ளிக்கு வருவதற்குள் அங்கே உள்ள தேங்காய் கலங்களில் அதிகாலையிலேயே சென்று தேங்காய் உடைத்து விட்டு பின்பு பள்ளி வருபவள், அதனால்  எப்பொழுதும்  காலை உணவு சாப்பிட  நேரம் இருக்காது , மதிய உணவும் பல நேரங்களில் இருக்காது . அத்தகைய தருணங்களில் நாங்கள் தோழிகள்  எங்களுடைய உணவை அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களும் உண்டு.

பள்ளி  முடிந்ததும் நாங்கள் அவரவர் விருப்பப்படி அடுத்த அடி எடுத்து வைக்க கீதா அசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தால். அதன் பிறகு சிறிது காலம் எங்களுக்குள் தொடர்பு இல்லை. பின்பு ஒரு முறை கீதாவை கடைவீதியில் சந்திக்க நேர்ந்த பொழுது தான் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து விட்டு ஒரு டுட்டோரியலில் வேலை செய்து கொண்டே  பகுதி நேர கல்லூரியில் இளநிலை கணிதம் படித்துக் கொண்டு இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினால்.

இதுவே அதுவரை எனக்கு தெரிந்த விவரங்கள்.அதன் பிறகு அனு கூறிய விவரங்கள் என் மனதில்  ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டன.

கீதாவை  நான் இறுதியாக சந்தித்த பொழுதே அவள் பாட்டியும் அப்பாவும் இறந்து விட்டிருந்தனர். அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் அம்மாவும் இறந்து விட, இவர்களுக்கு ஆதரவிற்க்கு யாருமற்ற நிலை. இவள் கல்லூரி முடிந்ததும் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பொறுப்பாய் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து அவள் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதிலேயே அவர்களை குடியமர்த்தி தாயின் இடத்திலிருந்து தங்கைக்கு வளைகாப்பும் நடத்தியிருக்கிறாள்.  இந்த விவரங்கள் அனைத்தும் அனு  கீதாவை சந்தித்த பொழுது அவள் கூறியவை. அப்பொழுது கீதாவிடம் அவள் திருமணம் குறித்து கேட்க சிரிப்பு மட்டுமே விடையாக வந்துள்ளது .

எப்பொழுதுமே கீதாவின் பண்பும் அறிவும் எங்களுக்கு வியப்பைத் தருபவை. ஆனால் அனைத்தையும் தாண்டி இந்த சிறு வயதில் அவளுக்கிருந்த பொறுப்புணர்வும், தங்கையின் மீதான அவள் தாயன்பும் மனதை ஏதோ செய்தது.

"அக்கா என்பவள் இன்னொரு அம்மா" என்ற சொலவடைதான் எவ்வளவு உண்மை. இவளைப்  போல் தாயுமாயும் தந்தையுமாயும் அமையும் அக்காக்கள் எத்தனை பேருக்கு அமைவர். சிந்தனையிலேயே கழிந்தது பொழுது .

புதுப் பொங்கல்

புதுப் பொங்கல்
==============

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 
முன்னோட்டம் ஓடுகிறது 
சின்னத்திரையில் 
"பொங்கல்னா லீவு 
எல்லார் வீட்டுக்கும் போலாம் ஜாலி"
இத்தனைதான் பொங்கலுக்கான 
தொகுப்பாளினியின் விளக்கம் 

சிதறல் - 20

விட்டுவிடுங்கள்
---------------------------

பிரித்துவிடாதீர்கள்
விடியும் வரை
அந்த இமைகளை - அதனுள்
பத்திரமாய் இருக்கிறது
இருதுளிக் கண்ணீர்....