பக்கங்கள்

சில்லறை வணிக அரசியல்

 ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காய்கள் வாங்க சென்றிருந்தோம். வாங்கி முடித்து பணம் செலுத்துகையில் மீதி சில்லறைக்கு காசாளர் பெண் சில்லறைக்கு பதில் சாக்கலேட் கொடுத்தார். நான் அதை திருப்பி கொடுத்து எனக்கு சாக்கலேட் வேண்டாம் சில்லறை தொகை தான் வேண்டும் என்று கேட்க எனை வித்தியாசமாக பார்த்து முறைத்து கொண்டே சில்லறையைத் தந்தார்.


இது போலவே இன்னுமொரு நிகழ்வு. நான்கு தளங்கள் கொண்ட நிறுவனத்தின் ஒவ்வொரு தளத்திலும் பில்லுடன் சேர்த்து சில்லறைக்கு பதில் சாக்கலேட்கள்  கொடுக்கப்பட்டது. நான் மொத்தமாக சேர்த்து அத்தனையையும் கீழ் தளத்தின் காய்கறி பிரிவில் கொடுத்துவிட்டேன், அதே சில்லறைக்கு பதிலாக. இவை அனைத்தும் உங்களுடையதுதான், இவை எனக்கு தேவை இல்லை, சில்லறைக்கு பதில் வைத்து கொள்ளுங்கள் என்று. உடனே என் அருகிலிருந்த மற்றொரு நபர் அப்படியெனில் நாங்களும் நீங்கள் அளித்த சாக்கலேட்டுகளை திரும்ப தரலாமா என்று கேட்க காசாளர் அவை நாங்கள் அளித்தவை எனில் வாங்கி கொள்வோம் என்றார் தலையை குனிந்தவாறே.

இதே போல் என் நண்பர் ஒருவர் பொது தொலைபேசியை உபயோகிக்க சென்றார். இரண்டு மூன்று முறை உபயோகிக்க வேண்டி வந்தது ஒவ்வொரு முறையும் அவருக்கும் இதேபோல் சில்லறைக்கு பதிலாக சாக்கலேட்டுகள் வழங்கப்பட்டன. கடைசி முறை உபயோகிக்க சென்றபோது அவர் தொலைபேசி கட்டணத்திற்கு ஈடாக அவர்கள் கொடுத்த சாக்கலேட்டுகள் அத்தனையையும் அப்படியே திருப்பி அளித்து விட்டார். அவர்களால் எதுவும் பேசவே இயலவில்லை.

யோசித்துப் பார்க்கையில் இது எவ்வளவு பெரிய மோசடி. முதலில் எல்லாம் கடைகளில் உண்மையாகவே சில்லறை இல்லை எனும் போது அவர்கள் தயங்கித் தயங்கி சில்லறை இல்லை அதற்க்கு பதில் பொருள் ஏதேனும் வாங்கி கொள்கிறீர்களா என கேட்பார்கள். அந்த வார்த்தைகளில் அத்தனை தயக்கம் இருக்கும் ஒரு நேர்மை இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி யாரும் கேட்பதே இல்லை. சர்வ சாதரணமாக ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரையுள்ள சில்லறையை யாரும் தருவதே இல்லை, அதற்க்கு பதில் அவர்கள் நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருள் நம் மீது திணிக்கப்படுகிறது. ஐந்து வரையிலான ரூபாய்கள் எல்லாம் மதிப்பிழந்து விட்டனவா என்ன? இல்லை ஐந்து ரூபாய் வரை சில்லறை தர வேண்டியதில்லை கடைகாரர்கள்
அவர்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என அரசாங்கம் அனுமதி அளித்து விட்டதா ?


மிக சாதாரணமாக அன்றாட வாழ்வில் நம் ஒவ்வொருவரும் கடந்து செல்லும் நிகழ்வு இது. ஆனால் இதன் பின்னால் உள்ள வணிக  அரசியல் மிகவும் யோசிக்க வேண்டியது, பேசப்பட வேண்டியது. கொஞ்சம் கவனித்து பார்த்தால் நிறைய இடங்களில் ஒரு ரூபாய் நாணயத்திற்கு பதில் கொடுக்கப்படும் சாக்கலேட்டுகளின் பெயர்கள் நாம் முன் பின் அறிந்திராதவையாக, சுவைத்திராதவையாக இருக்கும். அதிலும் பெரும்பாலானவை எந்த வித தரமும் இல்லாத மலிவு விலை சீன மிட்டாய்கள். அவை வேறு வழியே இல்லாமல் நம்மால் வாங்கப்பட்டு நம் வீட்டின் மேசைகளிலும் நம் பாக்கெட்டுகளிலும் நிறைந்து கிடக்கும். அவை வாழ்நாளில் ஒரு போதும் நிச்சயமாக நம்மால் விரும்பி வாங்கப்படாதவையாக இருக்கும்.

இதே போல் சில்லறைக்கு பதிலாக தரப்பட்ட எத்தனையோ தரமற்ற, ஒரு வகையில் நமக்கு பிடிக்காத சாக்கலேட்டுகளும் பிஸ்கட்டுகளும் நம் வீட்டிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் எவ்வளவு பெரிய அளவில் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை யோசிக்க வேண்டும். இவை அனைத்தும் ஒரு வகையில் வீணடிக்கப்பட்ட நம்முடைய பணம் அல்லவா? பணத்தை குப்பைத் தொட்டிகளில் கொண்டு எறிவதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? சில்லறைக்கு பதில் தரப்பட்டது என்பதற்காகவே நம்மில் எத்தனையோ பேர் நமக்கு பிடிக்காத அந்த பிஸ்கட்டுகளையும் சாக்கலேட்டுகளையும் தினமும் தின்று கொண்டு இருக்கிறோமே, இதில் நமக்கான உணவுப் பாதுகாப்பு என்பது எங்கே?

இதில் கவனிக்கப் பட வேண்டிய மற்றுமொரு விடயம் இவர்கள் நமது விருப்பமின்றி நம் மீது திணிக்கும் அந்த பொருள்களின் விற்பனையிலும் அவர்களுக்கு உள்ள இலாப விகிதம். பொதுவாகவே வணிக நிறுவனங்களில் உள்ள அனைத்து பொருள்களுமே இலாப விகிதத்துடனே இருக்கின்றன அதை மறுப்பதற்கில்லை. வணிகம் என்பதே இலாப மயமானதுதானே. ஆனால் இதில் இவர்கள் நமக்கு தேவையே இல்லாத ஒரு பொருளை நம் மீது திணித்து அதனால் ஒரு இலாப விகிதமும் அடைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இல்லை என்பதே உண்மை. யோசித்துப் பாருங்கள் இதில் இவர்களுக்கு இரட்டை இலாபம். ஒன்று விற்காத பொருளை கட்டாயபடுத்தி நம் மீது திணிப்பதில் வருவது மற்றொன்று அந்த தரமற்ற பொருள்களில் இருக்கும் அதிக இலாப விகிதம்( மற்ற தரமுள்ள பொருள்களை விட இதில் இலாப விகிதம் அதிகம் என்பதும் மிகப்பெரிய உண்மை).  இத்தனையும் யோசித்துப் பார்க்கையில் தோன்றுவது கொள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எத்தனை பெரிய பகல் கொள்ளை இது?

ஒரு கடையில் பொருள்கள் வாங்கும் போது நமக்கு என்ன தேவையோ அதை வாங்கி முடித்த பின் தான் பணம் செலுத்தவே செல்கின்றோம் , அங்கே  நமக்கு தேவையில்லாத எதோ ஒன்றை நமக்கு விருப்பமில்லாத ஒன்றை சில்லறை என்னும் பெயரில் திணிப்பதற்கு இவர்கள் யார்? நம் தேவை என்ன என்பதை தீர்மானிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது? என்ன வகையான வியாபார யுத்தி இது?

அவர்களைப் போலவே பணத்திற்கு பதில் நாம் நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்தால் அதை அவர்கள் பெற்றுக் கொள்வார்களா? பின் நாம் மட்டும் ஏன் அப்படி பெற்றுக் கொள்ள வேண்டும்? நம்மில் ஒவ்வொருவரும் இனியாகிலும் இதைப் புரிந்து கொண்டு வணிக நிறுவனங்களில் நம்முடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இல்லை எனில் இப்படியான சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நமக்கு அவர்கள் தர வேண்டியது தரப்பட வேண்டிய நம்முடைய சில்லறையை மாறாக நமக்கு தேவையே இல்லாத அவர்களுடைய எந்த வியாபர பொருளையும் அல்ல.நம்முடைய உழைப்பு நம்முடைய பொருள்கள் நம்முடைய செல்வம் நம் உரிமை. இதை விட்டுக் கொடுப்பதோ தட்டிப் பறிப்பதோ இரண்டுமே சரியல்ல.

--பிரியா





4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நிச்சயமாய் சகோ... யோசித்து செல்பட ஆரம்பித்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம்

      நீக்கு
  2. இந்தியாவில் இருக்கும் அனைவரும் தினம் தினம் இவ்வாறு ஏமாற்றப்பட்டுதான் கொண்டிருக்கிறார்கள்..நானும் பலமுறை இதேபோல கோப்பபட்டிருக்கிறேன்..சரியான நேரத்தில் சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ... கோபத்தை செயலில் வெளிப்படுத்தினால் மட்டுமே மற்றங்கள் சாத்தியம்

      நீக்கு