பக்கங்கள்

இப்படியாக மனிதர்கள் ...

பாகம் - 1

அந்த மாலை நேரம் மிகவும் இதமாக இருந்தது. தென்றலாய் வீசிய காற்று அன்று பகல் பொழுதில் வாட்டிய தகிக்கும் வெயிலுக்கு அருமருந்தாய் இருந்தது. ஆஹா இந்த தென்றல்தான் எத்தனை சுகமாய் இருக்கிறது என்ன இதமாய் தழுவிச் செல்கிறது. இந்த மாலைப்பொழுது மிகவும் இதமாய் தானிருக்கிறது.

அது ஒரு நான்கு சாலைகளின் சந்திப்பு. சந்திப்பு என்றால் எதோ ஒரு பெருநகரத்தில் இருக்கும் சாலை சந்திப்பு அல்ல, முக்கிய சாலையில் இருந்து கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் பிரியும் இடம். அந்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் மூன்று நான்கு குட்டிக் குட்டி கிராமங்கள் இருந்தன. அந்த சந்திப்பில் சில கடைகளும் இருந்தன அதில் ஒரு டீ கடையும் முடிதிருத்தும் கடையும் அருகருகே இருந்தது. மற்ற கடைகள் இக்கடைகளுக்கு எதிர் புறத்தில் சாலையின் அந்த பக்கமாக இருந்தன. அந்த இரண்டு கடைகளை நடத்துபவர்களும் அருகே இருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த டீ கடையை வயதான தம்பதியர் நடத்தி வந்தனர். அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள், மருமக்கள் பேரன் பேத்திகள் என பெரிய குடும்பம் .உடலில் வழு உள்ளவரை அந்த கடையை நடத்தி சுயவருமானத்தில் வாழ்வது என்ற எண்ணத்துடன் இருந்தனர். பாட்டி அந்த தாத்தாவிற்கு ஆகச்சிறந்த துணையாய் இருந்தார்.இரவுப்பொழுதும் அவர்களுக்கு அந்த கடையில்தான்.

அருகில் இருந்த முடி திருத்தும் கடையை நடத்துவது மற்றொரு கிராமத்தை சேர்ந்த இளைஞன். அவன் பெயர் முகிலன்.அவனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு. அருகிலிருந்த கிராமத்தில் அவனுடைய வீடு இருந்தது . அந்த பகுதியில் இருக்கும் ஒரே ஒரு முடி திருத்தும் கடை அதுதான், ஆகையால் வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை.

முகிலனுக்கு அன்றைய தினம் கொஞ்சம் சோம்பல் உடையதாகவே இருந்தது. காலையிலிருந்து கடைக்கு யாரும் வருவாரில்லை, இயல்பாகவே வார விடுமுறை நாட்களில் மட்டுமே கடையில் கூட்டம் இருக்கும், வார நாட்களில் சுமார் தான். இன்று இன்னும் மோசம்.

வேலை எதுவும் இல்லாததால், கடையில் சாமான்களை ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு  முகிலன் கடைக்கு வெளியில் இருந்த மரத்தினடியில் வந்து அமர்ந்தான். ரோட்டில் வேகமாய் போய்கொண்டிருக்கும் வித விதமான வாகனங்களையும் அதில் செல்லும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக்  கொண்டே.

மாலை நேரம் ஆகையால் எதிர்த்தாற்போல் இருந்த பேக்கரியில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. அதை ஒட்டி இருந்த தையல் கடையில் தையல் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு அடுத்தாற்போல் கார் புரோக்கர் ஆபீஸ் அதில் நான்கைந்து பேர் அமர்ந்து பேசிக்  கொண்டிருந்தனர்.அடுத்ததாக மாட்டுத் தீவனக் கடை அதில் ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்து கொண்டு முகிலனைப் போலவே ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

அப்படியே ஒரு ஒரு கடையாக பார்த்து விட்டு இறுதியில் அருகில் இருந்த டீ கடையின் பக்கம் முகிலனின் பார்வை சென்றது. தம்பதியரில் தாத்தா கல்லாப்பெட்டியின் அருகில் நின்று ஏதோ செய்து கொண்டிருந்தார். பாட்டி கழுவுவதற்காக பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தவர்
முகிலனைப் பார்த்து மெலிதான ஒரு புன்னகை புரிந்து கொண்டே கேட்டார் " என்ன முகிலா காத்து நல்ல வருதா". முகிலன் பதிலாய் ஒரு புன்முறுவலைத் தந்தான்." டீ சாப்புடறைய" கேட்டார். " போடுங்க மா குடிப்போம்" என்றான் முகிலன்.

இரண்டு நிமிடத்தில் கண்ணாடி டம்ப்ளரில் ஆவி பறக்கும் டீ யை முகிலனிடம் கொண்டு வந்து கொடுத்தார் பாட்டி. அதை கையில் வாங்கி குடிக்க ஆரம்பித்தான், உடன் கடையினுள்ளே சென்ற பாட்டி இரண்டு பிஸ்கட்டுகளைக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தார். " இந்தா சாப்பிடு". " இது எதுக்கு மா எனக்கு வேண்டாம்" என்றான் முகிலன்." பரவாயில்லையா நீ சாப்டு. மதியமும் நீ சாப்ட வீட்டுக்கு போகல நா கவனிச்சேன்யா, சோறும் கொண்டு வரல வவுறு பசிக்கும்ல.. சாப்புடு" என்றார் வாஞ்சையுடன். முகிலன் பாட்டியின் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகை புரிந்தான், பின்பு டீயுடன் பிஸ்கட்டும் சாப்பிட தொடங்கினான்.

(தொடரும் )

--பிரியா

10 கருத்துகள்:

 1. தலைப்பே ஆவலைத் தூண்டுகிறது...

  முகிலனின் புன்னகையில் ஏதோ அர்த்தம் இருக்கும் போல...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்... தொடர்ந்து வாருங்கள்...முகிழனை அறிய

   நீக்கு
 2. முகிலனை பற்றி அறிய ஆவல்.., தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் தொடர்ந்து வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

   நீக்கு
 3. மதிய உணவு கொண்டு வரவில்லை என்பதை கவனித்து, உபசரிக்கும் பாட்டியின் பாங்கு... மனதைத் தொடுகிறது. கிராமத்து மனிதர்களிடம்தான் இத்தகைய பரிவு + பாசம் இப்பவும் இருக்கு. பக்கத்து வீட்ல குடியிருக்கறவன் பேர்கூட தெரியாத நிலைலயில்ல நகரத்து ஜனங்க இருக்காங்க...! எதிர்பார்ப்பினை விதைக்கிற ஆரம்பத்துடன் தொடரும் போட்டிருக்கீங்க ப்ரியா. தொடர்ந்து படிக்க ஆவலுடன் நான். இதே ரசனையைத் தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாய்... நீங்களும் தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுங்கள்...

   நீக்கு
 4. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்கக நன்றி சார் உங்கள் தகவலுக்கு.. பார்த்து விட்டேன்.. :)

   நீக்கு
 5. அருமையான தொடக்கம்! தொடர்ந்து வந்து ரசிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு