கால் கொலுசின் மணிகள் கலகலவென்று ஒலிக்க ஓடி வரும் சின்ன குழந்தை போல சலசலத்து ஓடி வருகிறது அந்த நதி. அந்த நதியை பார்க்கும் அனைவருக்கும் கவிஞர்கள் சொல்லி சென்ற வர்ணனை நிச்சயமாய் நினைவில் வரும். நதியை கொண்டு பெண்ணைப் புகழ்ந்தானா? இல்லை பெண்ணை கொண்டு நதியை புகழ்ந்தானா? அத்தனை அழகை கட்டி கொண்டு ஓடி வருகிறது நதி.
அதோ அங்கே தெரிகிறது படித்துறை. அதனருகில் சற்று தள்ளி இரண்டு கோவேறு கழுதைகள், உலகம் போகும் போக்கை பற்றிய கவலை ஏதும் அற்று தன் உணவை மென்றபடி.அங்கிருந்து சற்று தள்ளி அமர்ந்திருக்கிறாள் ஒரு பதின்ம வயது சிறுமி கையில் உள்ள புத்தகத்தில் ஆழ்ந்தவளாய் சூழ்நிலை மறந்து.படித்துறையில் துணி துவைக்கும் சத்தம் கேட்கிறது. அங்கே ஊர் மக்களின் ஆடைகளில் உள்ள அழுக்கை எல்லாம் சுத்தம் செய்வது வளவனும் அவன் மனைவி பொன்னியும். அங்கே அமர்ந்து படித்து கொண்டிருக்கும் சிறுமி அவர்களின் செல்ல மகள் செல்வி.
செல்வி பக்கத்து ஊரில் இருக்கும் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படு சுட்டி. மேல்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது செல்வியின் கனவு. செல்வியின் தந்தை வளவனின் ஆசையும் அதுவே. ஊர்க்காரர்களின் துணிகளை வெளுப்பதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே அந்த குடும்பத்தின் ஒரே வருமானம். குறைந்த வருமானம் எனினும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
"ஏ! புள்ள செல்வி இங்க எந்திருச்சு வா" கூவி அழைத்தாள் செல்வியின் அம்மா பொன்னி.
" ஏ! புள்ள ... என்ன இப்போ உனக்கு. புள்ள படிச்சுட்டு இருக்கில்ல இப்போ எதுக்கு கூப்புட்டு தொந்தரவு பண்ற " என்றான் வளவன். " ஆமா பெருசா படிச்சு கிளிச்சுட்டாலும். உங்க புள்ள படிச்சு என்ன கலெக்டர் ஆகப்போறால. எப்படியும் கட்டி கொடுக்கற வூட்டுல நம்மள மாறியே ஊர் துணிய துவைச்சுதான் வவுத்த கழுவனும். அதுக்கு இப்போ இருந்தே தொழில கத்துக்கறதுதானே உத்தமம். அதுக்குதான் கூப்புடுறேன். அதுல என்ன தப்பு" என்றாள் பொன்னி. இந்த வார்த்தைகள் வளவனின் மனதை என்னவோ செய்தன அவன் முகம் இருண்டது.
" நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நா என் புள்ளைய நல்லா படிக்க வெச்சு கலெக்டர் ஆக்கதான் போறேன். அவ எம்புட்டு நல்லா படிக்கற புள்ள அவ கனவ எதுக்காக களைக்கனும். அவ என் மகளா பொறந்த ஒரே ஒரு காரணத்துக்காக அவளும் ஊர் மக்க அழுக்க வெளுத்துதான் பொழைக்க வேணுமா. இது என்ன அவளுக்கு தலை எழுத்தா. அப்படியே அது தலை எழுத்தாவே இருந்தாலும் நா அத மாத்ததான் போறேன். நீ வேணுனா பாரு." உறுதியாய் தெறித்தன வளவனின் வார்த்தைகள். பொன்னி அசந்தவளாய் பேசும் தன் கணவனையும், படித்து கொண்டிருக்கும் மகளையும் மாறி மாறி பார்த்தவாறு நின்றாள்.
" ஏ| எதுக்கு இப்படி பாத்துட்டு நிக்கிறவ. நா நம்ம மகளோட தலை எழுத்ததான் மாத்தறேன்னு சொன்னேன். நமக்கு பொழப்பு இதுதான். வெயில் உச்சிக்கு ஏறுது பாரு சட்டு புட்டுன்னு வெளுத்துட்டு வீட்டுக்கு போவோம்.வெள்ளாவி வெக்கணும் பொட்டி போடணும் வேல கெடக்கு நெறையா" என்றபடி துணிகளை ஆற்று நீரில் அலச ஆரம்பித்தான் வளவன்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துணிகள் அனைத்தையும் வெளுத்து முடித்து கழுதைகளின் மேலேற்றி புறப்பட தயாரானார்கள். செல்வியும் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில்தூக்கு வாலியையும் எடுத்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.நடக்கையிலும் கூட கையில் புத்தகத்தை பிரித்து வைத்தவாறு படித்து கொண்டே நடந்தாள் செல்வி. " போதும் புள்ள ரோட்ட பாத்து நடந்து வா மீதிய வீட்டுல போயி படிச்சுக்கலாம். முள்ள கிள்ள காலுல ஏத்திக்காத" பரிவுடன் வந்தன வளவனின் வார்த்தைகள். செல்வியும் தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டவளாய் புத்தகத்தை மூடி கொண்டு நடந்தாள்.
சிறுது நேரத்தில் அவர்கள் குடிசையை அடைய, பொன்னி வெள்ளாவி அடுப்பை பற்ற வைக்க சென்றாள், வளவன் கழுதைகளின் மேலிருந்த பொதியை இறக்கி வைத்துவிட்டு துணிகளை இஸ்த்திரி போட கரி துண்டுகள் களைக்க சென்றான். செல்வி அவர்களுக்கான உணவை தயாரிக்கும் பொருட்டு குடிசைக்குள் சென்றாள்.
பொன்னியும் வளவனும் தங்கள் வேலையை முடித்து கொண்டு வர... அவர்களுக்கான உணவை சாப்பிட எடுத்து வைத்தாள் செல்வி. மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர். உணவிற்கு பின் வளவன் திண்ணையில் சென்று படுக்கையை போட பொன்னி குடிசையினுள் அந்த கிழிசல் பாயை விரித்தாள் தான் படுக்க. செல்வி தூண்டல் விளக்கை இன்னும் கொஞ்சம் தூண்டி விட்டவளாய் புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க அமர்ந்தாள்.
விளக்கின் ஒளியில் தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் தன் மகளின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் பொன்னி. அவள் மனதுள் ஏதேதோ வகையினதாய் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன அவற்றுள் அன்று அவள் கணவன் படித்துறையில் பேசியவையும் ஓங்கி ஒழித்து கொண்டிருந்தன. அவள் கண்ணில் ஏனோ லேசாய் கண்ணீர் கசிந்தது. யாருமறியாமல் துடைத்து கொண்டேகேட்டால் " ஏ! புள்ள காலைல இருந்து படிச்சுகிட்டே இருக்கியே இப்ப வந்து கெடந்து உறங்கலாம்ல. காலைல படிக்கலாம்ல" பரிவுடன் ஒலித்தன அவள் வார்த்தைகள். " இல்லமா, பரிட்ச நெருங்கிட்டு இருக்கு இப்ப இருந்து படிச்சாதான் நல்ல மார்க் வாங்க முடியும். அப்போதான் மா மெரிட் ல சீட் கெடைக்கும் மேல் படிப்பு படிக்க" என்றாள் செல்வி
அவள் சொல்வதில் பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் புரிந்ததாய் ஒரு முனகலுடன் சுருண்டு படுத்தாள் பொன்னி. மீண்டும் மகளையே பார்த்து கொண்டிருந்தாள் உறக்கம் வராதவளாய்.எவ்வளவு நேரமோ தெரியாது திடீரென எதோ நினைத்தவளாய் எழுந்து அடுப்பை பற்ற வைத்தாள்,சத்தம் கேட்டு செல்வி நிமிர்ந்து பார்க்க வளவன் வெளியே இருந்து குரல் கொடுத்தான்" இந்த நேரத்துல என்ன புள்ள உருட்டற சத்தம்". " புள்ள கண்ணு முழிச்சு படிக்குதிள்ளஅதா ஒரு காபி தண்ணி போடலானு. நீ தூங்கு மச்சான்" என்றாள் பொன்னி. செல்வி ஒரு புன்னகையுடன் மீண்டும் படிக்க தொடங்கினாள். வளவனும் ஒரு புன்னகை பூத்தான் எதோ ஒன்றின் புரிதலுடன், அதில் ஒரு நிம்மதியும் சேர்ந்தே இருந்தது.
(தொடரும் )
---- பிரியா
இரண்டாம் பகுதியைப் படிக்க (2nd Part)
http://wordsofpriya.blogspot.in/2013/06/2_12.html
இறுதி பகுதியைப் படிக்க (Last Part)
http://wordsofpriya.blogspot.in/2013/04/blog-post_16.html
பொன்னியின் பொறுப்பும், வளவனின் சிறப்பான எண்ணமும், செல்வியின் புரிதலும் பிரமாதம்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சார்...
நீக்குஆரம்பத்தில் நீங்கள் வர்ணித்திருக்கும் ஆற்றங்கரைக் காட்சியிலேயே கிராமத்தின் வனப்பு மனக்கண் முன் விரிகிறது. வளவனின் குடும்பமும், பொன்னியின் படிப்பார்வமும் படிக்கையில் மனது மகிழ்கிறது! நல்ல துவக்கம் ப்ரியா...! தொடர்கிறேன் இக்கதையை!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்.. கண்டிப்பா தொடருங்கள்...
நீக்கு