பக்கங்கள்

சிதறல் - 16

ஒரு இலையாய்
-------------------------

நான்
முன் ஜென்மத்தில் - ஒரு
இலையாய் இருந்திருக்கக்கூடும்
எப்பொழுதும்
எதனுடனாவது ஒட்டிக்கொண்டேX
காற்றில் அலைந்தபடி....

                            ---X---

ஒரு கணக்கு
---------------------

நானென்பது
எத்தனை நானென்று
கணக்கிட்டுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணிக்கை முடிந்தபாடில்லை....

                           ---X---

என்னுள் 
-------------

விட்டுக்கொடுக்கவும் இயலாத
தொட்டுக்கொள்ளவும் இயலாத
எண்ணங்களைக் கொண்ட
வினோத கலவையொன்று
செயல்படுகிறது என்னுள்
என்னை இயக்கியபடி.....

                          ---X---

மரத்தினிடையில் 
----------------------------

அடர்ந்த மரங்களுக்கிடையில்
என்னை ஒழித்துக்கொள்கிறேன்...
சில மரங்களில்
கிளைகள் மட்டுமே அதிகம்
தண்டுகள் - அத்தனை
பெரிதாய் இருப்பதில்லை...--பிரியா 

மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது?

இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம். வழக்கம் போல் பல்வேறு பட்ட முகநூல் மற்றும்  சமூக வலைத்தளங்களின் வாழ்த்துக்களுடன் விடிந்தது பொழுது. நானும் ஒரு வாழ்த்து பதிவிட்டேன் நள்ளிரவிலேயே, விடிந்தவுடன் அனைவரின் கண்களிலும் படும்படி. ஆனால் காலை நான் முகநூல் வந்ததும் பார்த்த முதல்  செய்தியே இன்றைய நாளைக் குறித்தான முடிவுடன் இருந்தது.

செய்தி இதுதான்அகமதாபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறாள் அவளது உறுப்பில் ஒரு இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டு. இப்படியான செய்தியை பார்த்த பின்பு வரும் மகளிர் தின வாழ்த்துக்களை எப்படியானதாக பாவிப்பது. 

பெண்களுக்கானதாகவும் குழந்தைகளுக்கானதாகவும் இல்லாமல் போன இந்த சமூகத்தில் மகளிர் தினம் என்ற ஒன்று எதற்காக? இன்னும் எத்தனை குழந்தைகள் இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகப் போகிறார்கள். யாரிடமேனும் விடை உண்டா? பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களின் மீதே ஆயிரம் குற்றங்களுடன் வாதிடும் கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன விடையளிக்கப் போகிறார்கள்? பெண்கள் எனில் இரவில் வெளியே போவது குற்றம், ஆடை அணிவதில் குறை, அதீதமான அழகுபடுத்துதல் இன்னும் இன்னும் என காரணங்கள் சொல்லலாம், குழந்தைகளுக்கு உங்களிடம் உள்ள காரணம் என்ன? அவர்களின் ஆடையா? தெருவில் விளையாடுவதா? பள்ளிக்கு செல்வதா? என்ன கூறுவார்கள் இவர்கள்?இதிலும் சிலர் சொல்வதுண்டு, வளர்ந்த பெண்கள் உணர்வுகளைத் தூண்டும்படி நடப்பதால்தான் அதன் வடிகால்களாக குழந்தைகள் மாறுகிறார்கள் என்று. அவர்களுக்கு ஒன்று தெரியாமல் இருக்கலாம் இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் சிறார்களில் 60% ஆண்  குழந்தைகள், அதுவும் அதே ஆண்களால்தான். நம்ப முடிகிறதா உங்களால். இதற்கு என்ன வகையான காரணங்களைச் சொல்லாம்? ஒன்று செய்யலாம் ஆண் குழந்தைகள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளானதற்கு வளர்ந்த ஆண்கள் அணியும் உடையும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் தினசரி செல்லுவதுமே காரணமாய் இருக்கும், ஆதலால் இனி ஆண்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே இருக்கட்டும், ஆண்கள் சரியானபடி ஆடை அணியட்டும், அவர்கள் தெருவினுள் இறங்கி நடக்காம இருக்கட்டும். இப்படியான யோசனையைத்தான் கலாச்சாரக் காவலர்கள் சொல்லக் கூடும், இப்படித்தான் சொல்லவும் வேண்டும் ஏனெனில் இவர்கள் பெண்களுக்கு இப்படியான யோசனையைத் தானே வழங்கினார்கள்.


இவர்களின் யோசனைப்படி பார்த்தால் ஆண்,  பெண், குழந்தைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கட்டும், எங்கும் செல்லாதிருக்கட்டும்.அலுவலகங்கள் தேவை இல்லை, பள்ளிகள் தேவை இல்லை, அரசியல் சாசனங்கள் தேவை இல்லை, நாகரீகம் தேவை இல்லை, நாடு, சமூகம், மதங்கள், வழிபாட்டுத்தலங்கள், கட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சடங்குகள்  எதுவும் தேவை இல்லை. அனைவரும் எதுவுமற்ற ஆதி மனிதர்கள் ஆவோம். கலாச்சாரக் காவலர்களும் சில முற்போக்கு வியாதிகளும் சொல்லும் தீர்வுகள் இப்படியான சூழலுக்குத்தான் நம்மை இட்டு செல்லும்.


பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வென்பது எதையும் தடை செய்வது அல்ல. மாறாக உணர வைப்பது. ஆண் என்பதும் பெண் என்பதும் யாரென்பதை உணர வைப்பது. பெண் உடலோ ஆண் உடலோ போகப் பொருளல்ல என்பதை உணர வைப்பது. குழந்தைகள் நிச்சயம் உணர்ச்சிகளின் வடிகால்கள் அல்ல அவர்கள் சமூகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிசங்கள் என்பதை உணர வைப்பது. இது வளர்ப்பு முறைகளாலும், சரியான வாழ்க்கைக் கல்வியினாலும் மட்டுமே சாத்தியம் மாறாக தண்டனைகளாலோ மறைத்து வைப்பதினாலோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுவரை மாற்றங்கள் நிகழ்வது கேள்விக்குறியே.

முடிவில், இத்தகைய கொடும் செய்திகளற்ற ஒரு மகளிர் தினம் விரைவில்  வரும், உண்மையான கொண்டாட்டத்துக்குறிய ஒரு நாளாக அது அமையுமென்ற நம்பிக்கையில் இன்றைய நாளும் கடந்து போகிறது  மற்றுமொரு நாளாக.

--பிரியா