பக்கங்கள்

நூல் அறிமுகம் - நீலகண்டம்


நீலகண்டம் ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் நிறைய நிறைய துணைக்கதைகளைக் கொண்ட ஒற்றை நாவல். ஆனால் துணைக்கதைகள் அனைத்தும் நாவலுடனும், அதன் கதாபாத்திரங்களுடனும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவை. தமிழில் இப்படியான ஒரு நாவலை வாசித்ததாக பெரிதாக நினைவில்லை. நாவலின் முதல் அத்தியாயமே விக்கிரமாதித்தனும் வேதாளமும் என்றிருப்பதால் நாவலுக்குள் நுழைவதற்கு முன்னமே நாம் நம்முடைய கடந்த கால பால்யத்தினுள் நுழைந்துவிடுகிறோம்.  அதுவும் கூட காரணமாகத்தான் என்பது நாவலுக்குள் நாம் நுழைய நுழையத்தான் புரிகிறது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் வாந்துகொண்டிருக்கும் நம்முடைய வாழ்வென்பது பெரும்பாலும் பணமென்ற ஒன்றையே சார்ந்திருக்கிறது. தங்குதடையில்லாத அதன் வரவு மட்டுமே நம் இன்பம் துன்பம் அனைத்தையும் தீர்மானிக்கிறது. எந்த ஒரு கணத்தில் அதன் வரவென்பது தடைபடுகிறதோ, அல்லது தடைபடப்போகிறதோ என்ற எண்ணமும், பயமும் தலை தூக்குகிறதோ அங்கே அக்கணத்தில் அனைத்தும் சூன்யமாகிறது. நம்முடன் இருப்பவர்களின் மீதும், அவர்கள் அன்பின் மீது கரிசனத்தின் மீதும் மனம் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறது. அவர்கள் எப்பொழுதும் போல இயல்பாக இருந்தாலும் நம்மால் அதை நம்ப முடிவதில்லை. ஏதோ ஒரு சந்தேகத்தை ஏதோ ஒரு குழப்பத்தை அது நம்முள் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் அதுதான் நீலகண்டத்தின் மையப்புள்ளியும் கூட. பிரச்சினைகள் ஏற்படுத்தும் குழப்பமும் அதன் தீர்வுகளும், மையக்கதையாக நகர்கிறது. அதன் சம்பவங்களின் நீட்சி ஆங்காங்கே கிளைக்கதைகளாக முளைத்துக் கிடக்கிறது.