பாரத நாடு பழம்பெரும் நாடென்றும்,நாகரீகத்தில் உலகோர்க்கு மூத்தோர் என்றும், அன்னை தேசமென்று வணங்கி பெண்களுக்கு மதிப்பளிக்கும் தேசமென்றும் உலகில் பரப்பிய (பொய் )உரைகள் அனைத்தும் மதிப்பழிந்து போய்க்கொண்டிருக்கின்றன அடுத்து அடுத்து வாசிக்கும் செய்திகளைப் பார்க்கையில்.
முதலாவது செய்தி மேற்கு வங்காளத்தின் கோல்கத்தா அருகிலுள்ள ஒரு பழங்குடியினர் பிரதேசத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆணுடன் காதல் கொண்டதால், அவருக்கு எதிராக காப் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட தண்டனைதான். அந்த ஆணுக்கு 50,000 ரூபாய் பெண்ணிருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அந்த பெண்ணால் பணத்தை கட்ட முடியாத சூழ்நிலையில், அபராததிர்க்கு மாற்றாக அப்பெண்ணை 14 பேர் சேர்ந்து வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்க்கு பஞ்சாயத்தும் அந்த ஊர் பொதுமக்களும் ஆதரவு. அந்த 14 பேரில் அப்பெண்ணின் தந்தையின் வயதுடையவர்களும் அடக்கம் என்பது உச்சம்.
நம்முடைய சமூகம் எத்தகைய காட்டுமிராண்டி சமூகம் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம் அல்லவா. இது ஒன்று இது போல் எத்தனை சம்பவங்கள் சொல்லப்படாமல். இந்திய சமூகத்தின் கண்களில் காதல் ஏன் இத்தனை பெரிய குற்றமாக கருதப்படுகிறது? காதலே குற்றமெனில் அதற்கான தண்டனை என்று இவர்கள் விதித்தது எத்தனை பெரிய கொடூரம். பெண் எப்பொழுதும் உடலாக மட்டுமே பார்க்கபடுகிராளா? அவளின் உடலை சிதைப்பதன் மூலம் எத்தகையொதொரு நீதியை இவர்கள் நிலைநாட்டி உள்ளார்கள். இது யாருக்கான நீதி?
அடுத்தது தலைநகர் தில்லியில் ஆப்பிரிக்க பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. கறுப்பின பெண்கள் என்றாலே அவர்கள் விலை மாதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை டெல்லி அமைச்சருக்கு சொல்லித்தந்தவர் யாரென்று தெரியவில்லை. சாதி வெறி மட்டுமல்ல இந்தியர்கள் இனவெறியிலும் சலித்தவர்கள் அல்ல என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர் வெட்கம் கெட்ட டெல்லி அதிகாரிகள். தென்னிந்தியர்களின் இயல்பான நிறமும் கூட கருப்புதான். அப்பொழுது இவர்களுடைய பார்வையில் தென்னிந்திய பெண்களின் நிலை என்ன? ஒரு நாட்டின் தலை நகரத்தில் உள்ளவர்களுக்கே மனித உரிமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோம் மனிதனின் இயல்பு அவர்களின் நிரத்தையோ சமூகத்தையோ சார்ந்தது அல்ல என்பதை..
வடக்கில் மட்டும்தான் இப்படி, நம்மூரில் அனைத்தும் அருமை என்று நினைக்க வேண்டாம். சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நடைபெற்ற சம்பவம். ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி அவளின் ஒழுக்கத்தை சந்தேகத்திற்கிடமாக்கி பிரச்சினையை முடித்தாயிற்று ( இதில் அப்பெண்ணின் ஒழுக்கத்தை குறித்து சொல்லப்பட்டவை அனைத்தும் பொய்யுரைகள் என்பது அவ்வழக்கை விசாரித்த பெண் போலிஸ் அதிகாரியின் வாக்குமூலம்). ஆனால் விஷயத்தை அப்படியே மூடி மறைத்தாயிற்று.
இவர்களுக்கு ஒரு கேள்வி , ஒரு பெண் விலை மாதே ஆயினும் அவளின் அனுமதியின்றி அவளை தொடுவதற்க்கான உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு? அனைத்து சமூக கேடுகளுக்கும் சீரழிவிற்க்கும் பழியாவது பெண் உடல் தானா? பெண் என்பவள் அத்தனை இலப்பமாக போய்விட்டாளா? அப்பெண்ணை விலை மாது என்று கூறி யாரென்று தெரியாத அவளுடன் வல்லுறவு கொண்ட அந்த ஆண்களுக்கு என்ன பெயர்? வேற்று சமூகத்து ஆணை காதலித்த குற்றத்திற்காய் அவளை புணர்ந்த இந்த ஆண்களுக்கு என்ன பெயர்? இவர்களுக்கான தண்டனை என்ன? இங்கு ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் பெண்ணிற்கு மட்டும்தானா? ஆண் அதற்க்கு கட்டுப்படமாட்டனா? எனில் அப்படியான ஆண்களை எதற்காக சமூகம் மதிக்க வேண்டும்? அவர்களுக்கு இந்த சமூகத்தில் எதற்கு ஒரு இடம்?