பண்ணையாரின் வீட்டிலிருந்து வீடு வந்த செல்வி யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் குடிசைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள். போதிய மட்டும் தண்ணீரை குடித்து ஆசுவாசபடுத்திக் கொண்டு தந்தையும் தாயும் என்ன செய்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தாள், அவர்கள் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர். செல்வி மெதுவாய் புத்தகத்தை எடுத்து கையில் வைத்து படிப்பதற்காய் அமர்ந்தாள். மனம் புத்தகத்தில் லயிக்காமல் எங்கோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
வளவனின் குரல் கேட்டு சித்தம் கலைந்தாள்" என்னப்பா " என்றாள். " நாங்க படித்துறைக்கு போறோம் நீ பாத்து இருந்துக்கோ புள்ள அத சொல்லத்தான் கூப்டேன்" என்றான் வளவன். ஏதோ யோசித்தவளாய்" நானும் உங்களோட வரேன் பா' என்று கூறி அவர்களுடன் கிளம்பினால் செல்வி. மூவரும் கழுதைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.
மூவரும் கிளம்பி சென்றனர்.ஆற்றுக்கு செல்லும் வழியில் சில சிறார்கள் பட்டம் விட்டு கொண்டிருந்தனர். அதை பார்க்கையில் செல்வியின் மனதில் குதூகலமாய் இருந்தது. அதை பார்த்து ரசித்துக் கொண்டே சென்றாள். அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் பண்ணையாரின் காரும் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து இரு கண்கள் செல்வியே வெறித்து பார்த்து கொண்டிருந்தன. இதயரியாமல் அவள் பட்டம் விடுவதையே பார்த்து கொண்டு மெதுவாய் நடந்த வண்ணம் இருந்தாள். இந்த குதூகலத்தில் அவள் மெய் மறந்ததில் முன் சென்று கொண்டிருந்த பொன்னியையும் வளவனையும் விட்டு அவள் சற்றே பின் தள்ளி நின்றாள்.
திடீரென தன்னை உணர்ந்தவளாய் அவள் அவர்களின் பின்னால் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். வழியில் இருந்த சோளக்காட்டின் வரப்பின் மீது வேகமாய் மனதில் தோன்றிய புதிய உற்சாகத்துடன் நடந்து சென்றாள். திடீரென்று சோளக்காட்டின் உள்ளிருந்து ஒரு கை அவளை பிடித்து உள்ளே இழுத்தாது. பயத்துடன் அலறி கொண்டே திரும்பியவள் அங்கே சேதுபதியை கண்டு திகைத்தாள்.அவன் ஒரு கையில் மது புட்டியை பிடித்து கொண்டே இன்னொரு கையில் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான். அவனது பிடி உடும்பு பிடியாய் இருந்தது. கோபம் குரோதம் தன்னிரக்கம் அனைத்தும் சேர்ந்து அவன் பிடியை வலுவாக்கியது.
" அப்பா.... " செல்வி பலம் கொண்ட மட்டும் அலறினாள். "டேய் விடுட கைய விடுடா " என்று அவனிடமும் போராடினால். மகளின் அலறல் குரல் வளவனை எட்டியது ஏதோ விபரிதம் என உணர்ந்தவன் வேகமாய் ஓடி வந்தான் வந்த வழியே. அங்கே சிதறிக் கிடக்கும் மகளின் புத்தகங்களையும் வேகமாய் அசையும் சோளக்கதிர்களையும் கொண்டு எதையோ யூகித்தவனாய் வெறி கொண்டு ஓடினான். சிறிது தூரத்தில் பண்ணையாரின் மகன் செல்வியின் கையை பிடித்து இழுத்து செல்வதை பார்த்ததும் அலறினான்" செல்வி....".
குரல் கேட்டு இருவருமே திரும்பி பார்க்க அங்கே வளவனை கண்டு செல்வியின் கண்களில் கண்ணீரும் மனதில் ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வும் பரவ வளவனைஅங்கே எதிர்பார்க்காத சேதுபதி அதிர்ச்சியில் பிடியை நழுவ விட அவன் கையை தட்டி செல்வி தந்தையிடத்தில் சேர்ந்து வளவனின் தோள்களில் சாய்ந்து அழுதாள்" அப்பா..." அதற்குள் அங்கே வந்துவிட்ட பொன்னி அனைத்தையும் யூகித்து அதிர்ச்சியில் உறைந்தவளாய் தன்னிச்சையாய் வளரும் கண்ணீரை துடைக்கவும் மறந்து நின்றாள்.
சற்று தூரத்தில் சிறுவர்கள் விட்ட பட்டம் காற்றின் திசைக்கு அங்கும் இங்கும் அடித்து செல்லப்பட்டு பின்பு அங்கே இருந்த உயரமான மரத்தின் உச்சாணிக் கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டது.
அன்று இரவு வளவனின் குடிசை முன்னே பண்ணையார் கணக்குபிள்ளை இன்னும் சில ஊர் பெரியவர்கள் கூடி இருந்தனர். வளவன் சொல்வதும் செய்வதும் அறியாது வானத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் புயலாய் வீசிக் கொண்டிருந்தன. செல்வி குடிசையினுள் பொன்னியின் மடியில் வெறித்தபடி சுருண்டு படுத்திருந்தாள். பொன்னியின் கண்களில் பொங்கிய கண்ணீர் தடைபடாமல் வந்து கொண்டிருந்தது.
கணக்கு பிள்ளை தான் முதலில் பேச ஆரம்பித்தார்" இப்படியே ஆளாளுக்கு பேசாம இருந்தா எப்படி. எதோ நடந்து போய்டுச்சு. அதுதா ஏதும் நடக்காம புள்ள வீடு வந்தசுள்ள. இதே இப்படியே சுமூகமா முடிச்சு விட்ருவோம். ஊருக்குள்ள தெரிஞ்சா எல்லாருக்கும் அசிங்கம். ஜமீன் மானம் மரியாதையும் முக்கியம் இல்ல" என்றார். வளவன் அமைதியாய் அவரை நிமிர்ந்து பார்த்து " மானம் மரியாதயெல்லா ஜமீனுக்கு மட்டும் தானாயா, குடிசைல இருக்க எங்களுக்கு இல்லையா" என்று மெதுவாய் கேட்டான். " என்னடா கேட்ட " என்று சீரிய கணக்குபிள்ளையை பண்ணையார் கையமர்த்தினார்.
அவர் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் சீறியபடி இருந்ததன. அவர் விஷயத்தை கேள்விப்பட்ட உடன் கோவத்தில் பொங்கிப் போனார். வீட்டிற்கு வந்த மகனை பெல்டால் நன்கு நைய்ய புடைத்து விட்டு அழுது கெஞ்சிய மனைவியின் முகத்திற்க்காய் அவனை அத்துடன் விட்டு விட்டு இங்கே வந்திருந்தார். அவர் மனதில் மகன் மீது கோவம் மிகுந்திருந்தாலும் பரம்பரை கௌரவமும் அந்தஸ்த்தும் அதையும் தாண்டி நின்றன.
மெதுவாய் பேச ஆரம்பித்தார்" வளவா உன் மககிட்ட என் மகன் நடந்து கிட்டது தப்புத்தா அத நா இல்லேனு சொல்ல முடியாது. வயசு கோளாறு தலைக்கு ஏறுன போத வேற, பொம்பள கையாள அடி வாங்குனதும் சேத்து அவன இப்படி செய்ய வெச்சுருச்சு. இது பொம்பள புள்ள சமாச்சாரம் வெளிய போன பொண்ணு வாழ்க்கைக்குதா பாதிப்பு சாஸ்தி. சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காத வயசு பொண்ணு என்னதா படிக்க வெச்சாலும் அடுத்த வீட்டுக்கு போறவதானே. அதுனால தாமதிக்காம ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சுரு. விஷயம் வெளிய போன அதும் சிரமம். ஊரு கண்ணு மூக்கு வெச்சு பேச ஆரம்பிச்சுரும். இந்தா இதுல பணம் இருக்கு இத எடுத்துக்கோ பொண்ணு கல்யாணத்த சீக்கிரமா முடிக்க பாரு" என்று கூறி ஒரு கட்டு பணத்தை எடுத்து திண்ணையின் மீது வைத்து பேச்சை முடித்தார்.
அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. வளவன் எதுவுமே பேசவில்லை. பண்ணையும் மற்றவர்களும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு எழுந்து சென்றனர். செல்கையில் பண்ணை ஒரு நிமிடம் திரும்பி குடிசையினுள் இருந்த செல்வியை பார்த்தார் அவர் கண்கள் லேசாய் பளபளத்தது. மேல் துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு நடக்கத் துவங்கினார் .
வளவன் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். பின்னர் ஏதோ நினைத்தவனாய் எழுந்து நின்றான் அவன் கண்களில் ஒரு உறுதி தெரிந்தது. பொன்னியையும் செல்வியையும் நோக்கி உரைத்தான்" இந்த ஊர் காரனுக கட்டுற துணி மட்டும் தா அழுக்காகுமா என்ன. ஏ புள்ள அழுதது போதும் எழுந்து எல்லாத்தையும் கட்டு கெளம்புவோம். செல்வி நீயும் எழு மா" என்றான்.
அந்த இருட்டில் அந்த மூவரும் கிளம்பி விட்டனர். இது வரை ஊர் பொதிகளை மட்டுமே சுமந்து கொண்டிருந்த அந்த கோவேறு கழுதைகள் முதன் முதலாய் வளவன் வீட்டு பொதிகளை சுமந்து நடந்தன. அவைகளின் முன்னால் வளவன் முதுகில் செல்வியின் புத்தகப்பை அவனின் முன்னால் செல்வியும் பொன்னியும் கைகளில் மூட்டைகளுடன்.
மறுநாள் பொழுது புலர்ந்த போது பண்ணையார் வீட்டில் ஒரே அதகளமாய் இருந்தது. வீட்டின் முன் மருத்தவமனை செல்வதற்காக கார் தயாராய் இருந்தது. உள்ளே பண்ணையாரம்மா அழுது ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். சேதுபதியின் அறையில் இருந்த பாட்டில்கள் எல்லாம் எடுத்து உடைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. பண்ணையார் மகனை வலுக்கட்டாயமாய் காரில் ஏற்றி போதை பழக்கம் மீட்பு மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
யாருமே இல்லாத அந்த குடிசையில் காற்றில் படபடத்து கொண்டிருந்தது பண்ணையார் விட்டுச் சென்ற பணக்கட்டு. இந்த பயணம் நிச்சயமாய் ஒரு புதிய விடியலை நோக்கியே.