பக்கங்கள்

வாழ்வெனும் சுருக்கம் .....

மரணத்தை முழுவதுமாய்
உணர்த்திச் சென்ற
நாளொன்றின் தனிமையில் - மனம்
இப்படிச் சொல்லிற்று
வாழ்க்கை இத்தனை 
சிறியதாய் இருந்திருக்க வேண்டாம்

மரணத்தை உணர்த்தியவள்
என் தோழி
காணும் போதெல்லாம்
சிரித்த முகமாய்....
இறந்த பின்பும் - அவள்
அப்படியே இருந்ததாக சிலர் 
சொல்லிச் சென்றனர்
மரணிக்கையிலும் எப்படி
சிரிக்க இயலும்
தீராத சந்தேகம்

இயல்பானதல்ல அம்மரணம் 
சாலையொன்றின் நடுவில்
அவள் சிதறிக் கிடந்தாள்
நான்கு துண்டுகளாய்
தன்னுள் இன்னுமொரு
உயிரினைச் சுமந்தபடி
அவளுக்கென்ன இத்தனை அவசரம்....

கொஞ்சமும் பொறுப்பென்பதே
இல்லை அவளுக்கு
அந்த காதல் கணவனின்
கண்ணீர் துளிகளை
யாரால் துடைக்க இயலும்
பாவி இப்படி அழவைத்தாளே

உடன் வந்த தந்தை
உயிர் பிழைத்து நிற்க....
புலம்பிக் கொண்டே இருக்கிறார்
தானே அவளைக் கொன்றதாய்
அவருக்கான தேறுதல் எங்கே?

உடன் பிறந்தவன்
ஒற்றையாய்
சாலையில் பிரண்டு அழுகிறான்
ஆறுதல் சொல்லவும்
எவரும் இன்றி

அதுவெல்லாம் சரி....
அம்மாவைத் தேடும்
அம்மூன்று வயது குழந்தைக்கு - இனி
ஆறுதல் யாரோ?

நினைக்கையில் மனம்
மீண்டும் சொல்லிற்று
வாழ்க்கை
இத்தனை சிறியதாய்
இருந்திருக்க வேண்டாம்.....


--பிரியா

சிதறல் - 14

மெல்ல
-----------
பெருவெள்ளமென
இத்தனை வேகமெதற்க்கு
உன்னை முழுவதுமாய்
இரசித்திட வேண்டும்....
மெல்லவே  நடந்துவா!
மழை மகளே


வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்

வெற்று அறிவிப்புகள்
ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன
எங்கேனும் வெள்ளம் பாதித்த
எங்கேனும் கட்டிடம் இடிந்த
எங்கேனும் தீ பிடித்த
ஒவ்வொரு காலையிலும்

நான் இதுவே

எனக்கான காற்று 
எனக்கான மழை
எனக்கான நிலம்
எனக்கான வாழ்க்கை 
எனக்கான என்னுடையவைகள் 
இவைகளை மட்டுமே - நான் 
எனதுடைமை என்கிறேன்

நடந்தேறா முயற்சி

சிறிது நாட்களாக
சில நினைவுகளை
அழிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டுள்ளேன்
தீவிரமாக

ஒரு கரும்பலகையை
சுத்தம் செய்வதுபோல் - அது
அத்தனை சுலபமாய்
இருப்பதில்லை

பாத்திரத்தில் வடித்த
எழுத்துக்களைப் போல் -
அவைகளின் ஆழம்
கொஞ்சம் அதிகம்

நீக்க நினைக்கையில்
நிச்சயம் எச்சங்களை
விட்டே செல்லும்
கீறல்களாக

இருப்பினும் ஏதேனும்
ஒரு வகையில் அத்தனையும்
அழித்தொழிக்க முயல்கிறேன்

சேதாரங்கள் மட்டும்
சற்றே குறைவாக
இருக்கும்படி




--பிரியா

சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150

மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - பெண்கள் பாதுகாப்புக்காக 150 கோடியும்  சர்தார் பட்டேலின் சிலையை குஜராத்தில் நிறுவ 200 கோடியும் ஒதுக்கீடு


வறுமை எழுத்தறிவின்மை சுகாதாரம் போன்ற ராட்சதப் பிரச்சினைகள் இன்னும் நீங்கப்  பெறாத சுதந்திர இந்தியாவில், இவை அனைத்தையும் விட தற்பெருமைக்காக 2500 கோடி ரூபாய் செலவு செய்து  கட்டப்படும் ஒரு சிலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் சுலபமாய் 200 கோடிரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் அதுவே இச்சமூகத்தின் சரி பாதியாய் நித்தம் நித்தம் ஏதேனும் ஒரு வகைப் பிரச்சினையில் ஆட்பட்டு வாழும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு இவர்களால் ஒதுக்க முடிந்தது வெறும் 150 கோடி மட்டுமே. பாவம் இவர்களின் வறுமை கூட பாரபட்சமானது போல. 

இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது இந்திய அரசு?.  பெண்களின் பாதுகாப்பு என்பது இந்த அரசாங்கத்திற்க்கு அத்தனை பெரிய விசயமாக படவில்லையா? இல்லை இந்த இந்திய சமூகத்தில் பெண்கள் அத்தனை அதிக பாதுகாப்பாக வாழ்கிறார்களா? எப்பொழுதும் தொலை நோக்கிகளை கையில் வைத்துக் கொண்டு கனவுலகில் வாழும் இந்த அரசாங்கத்திற்கு நிஜம் அத்தனை சீக்கிரம் புரியாதுதான்.  ஆனால் என்ன செய்ய எங்கள் கைகளில் தொலை நோக்கிகளும் இல்லை,  இவர்களைக் குறித்தான கனவுகளும் இல்லை, எங்கள் வெற்று கண்களுக்கு நிகழ்காலம் அத்தனை அப்பட்டமாய் தெரிகிறதே.



தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் தான் அதில்  நிச்சயம் மாற்றுக் கருத்தென்பதே கிடையாதுதான். ஆயினும் போராடி வாழ்ந்து மறைந்த தேசத்தலைவர்களுக்கு  ஆடம்பர சிலை அமைப்பதைக் காட்டிலும் நித்தம் நித்தம் போராட்டத்துடன் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் மிகவும் அவசியம். இதை அந்த தலைவர்களின் ஆன்மாவும் கூட உறுதியாய் ஒத்துக்கொள்ளும்(நீங்கள் கேட்டுப் பார்த்தால்). உங்கள் சிலை அமைப்பின் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கலாம். ஆனால் அதில் எங்கள் நலனைப் புறக்கணிக்காதீர்கள். நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களித்தது நிச்சயம் சிலைகளை மட்டுமே அமைக்க அல்ல.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த இந்திய வாக்காளர்களில் பெண்களும் உள்ளனர்  என்பதை மோடி அரசாங்கம் மறந்து விட்டது போலும். இவர்களால் தங்களுக்கு ஏதேனும் ஒரு நல்லது நடக்கும்  என்ற எண்ணத்தில்தான் இந்த பெண்கள் வாக்களித்திருந்தனர். அந்த வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி  நல்லதொரு பரிசை அளித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். இது போன்றதொரு நல்லாட்சியை எதிர் பார்த்துதானே வாககளித்தீர்கள் அனைவரும்???

உங்களில் யாரேனும் கேள்வி கேட்கலாம் இருக்கும் நிதி நிலைமையில் 150 கோடியாவது ஒத்துக்கினார்களே என்று, அதே நிதி நிலையிலிருந்துதான் சிலையமைக்க இந்த 200 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மட்டும்தான் மத்திய அரசு இப்படி செய்தது என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னுமொரு பிரச்சினையும் உண்டு மிகப்பெரிய திட்டங்களான லக்னோ அகமதாபாத் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை............................................. வெறும் 100 கோடி மட்டுமே. வாழ்க நமோ அரசாங்கம்


-- பிரியா 

சிதறல் - 13

பயணங்கள்
-----------------
தனிமையுடன் கூடிய
நெடுந்தூரப் பயணங்கள்
முற்றுப்பெறுகின்றன
சிறந்ததொரு பொழுதில்
எனக்கான அறையின்
இறுதித் தனிமையில்

நாடு தொலைத்தவர்கள்

தொலைந்தவர்கள் நாங்கள்
தேடுகின்றோம் வாழ்வுதனை
முளைவிட்ட இடம்தாண்டி
வேர்விட்ட இடம்தனிலே

இரட்சகர்கள் வான்செல்ல
அறிந்தவர்கள் தலை தொங்க
வீதிகளில் அலைகின்றோம்
மீட்பர்கள் யாருமின்றி

தொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு

பொள்ளாச்சியில்  இரு சிறுமிகளுக்கு நடைபெற்ற கொடுமை குறித்து உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.. அதே பகுதியை சேர்ந்தவளாய் என் எண்ணங்களையும் சந்தேகங்களையும் கேள்விகளையும்  பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

பொள்ளாச்சியில்  தனியார் விடுதியில் தங்கியிருந்த இரு மாணவிகள் கடத்தப் பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதுவே செய்தி. இப்பொழுதெல்லாம் செய்தி தாள்களில் இது போன்ற செய்திகள் தினமும் இடம் பெறுகின்றன. இப்படியான செய்திகள் ஏதேனும் ஒரு நாளில் இடம் பெறவில்லை என்றால் தான் அது குறித்து நாம் ஆச்சர்யப்படவேண்டும் என்ற நிலையில் இன்று உள்ளோம்.  நம்மை சேர்ந்தவர்களுக்கோ,  நம் பகுதியிலோ  இப்படியான சம்பவங்கள் நடைபெறாத வரையிலும் இதை நம்மில் பலர் இயல்பாக கடக்கவும் பழகிவிட்டோம்.

பொள்ளாச்சி பகுதியில் கடந்த  சில நாட்களாய் இப்படியான நிகழ்வுகள் தொடர் கதையாகிவிட்டன. காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்முறை, 35 வயது காமக் கொடூரனால் 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக்  கொலை அதைத்தொடர்ந்து இந்த செய்தி. இவை  இப்பகுதியில் எனக்குத் தெரிந்த செய்திகள் தெரியாதவை இன்னும் எத்தனையோ, இது போன்றே பிற பகுதிகளிலும். கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேசத்தில் இதே போன்று சிறுமிகள் தொடர்ச்சியாய் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவமும் அதனைத் தொடர்ந்து நம் அண்டை மாநிலமான கேரளாவில் பெண்கள் இயக்கமொன்று நடத்திய போராட்டமும் உங்களுக்கு லேசாய் இன்னும் நினைவிலிருக்குமென்று நம்புகின்றேன். (என்ன செய்ய நம் வேலைப்பளு அப்படி).

தொடர்ச்சியாய் சிறுமிகள் அனைத்துப்  பகுதிகளிலும் குறி வைக்கப் பட்டு குதறி எறியப்  படுகின்றனர். பாவம் பிஞ்சுகள் தன்னை விட உடல் பலத்திலும் வயதிலும் பலமடங்கு மூத்த ஒருவன்(?)  தன் மீது நடத்தும் வன்முறையை எதுவென்றும் புரியாமல் எப்படி எதிர்ப்பதென்றும் தெரியாமல் கருகிப் போகின்றன. இச்சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எத்தனை தூரம் நம்பிக்கைக்குறியதாய் இருக்கிறது. விடிகின்ற பொழுதுகளில் வெளியில் செல்லும் எத்தனை குழந்தைகள் பத்திரமாய் வீடு திரும்புகின்றன. 

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் மிகச்சிறு வயதில் இப்படியான விடையத்தினை எதிர் கொள்ளும் ஒரு சிறுமியின் மனது எத்தனை பயங்களை கேள்விகளை தன்னுள் தாங்கியதாய்  இருக்கும்? எதிர் காலத்தில் தன் வாழ்வில் ஒரு ஆணை அந்தச் சிறுமி எங்கணம் எதிர் கொள்ளுவாள்? உடல் காயங்களை மருந்து மாத்திரைகள் குணப்படுத்தி விடலாம், மனம் கொண்ட வேதனைக்கு மருந்தென்ன, அவளின் பெற்றவர்கள் கொண்ட துயருக்கு வடிகாலென்ன?

தலைக்கேறிய போதையின் தாக்கத்திலும், நிலை கொள்ளாத மனதினையும் கொண்ட இந்த சில ஆண்களின் ஒரு சில நேர வேகத்தினால் இச்சிறுமிகளின் வாழ்வு மொத்தமுமாய் பறிக்கப்பட்டு விட்டது. 


எனக்கான கேள்வி இதுதான் முன்னேற்றத்தின் பாதையில் செல்வதாக நம்பப்படும் நம் சமூகம்  எதை நோக்கிச்  செல்கிறது, உண்மையில் முன்னேறுகிறோமா? கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்றல்லாம் நம்மில் பலர் தினந்தோறும் கூவி கொண்டிருக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை உண்மையில் அனைவரின் மனதிலும் விதைக்கிறோமா? தெய்வ வழிபாடுகளில் பெண் தெய்வ வழிபாட்டினை அதிகமாகக் கொண்டிருக்கும் இந்திய சமூகம் உண்மையில் தன் தலைமுறைக்குப் பெண்களைக் குறித்து கற்பித்ததும் கற்பிப்பதும் என்ன? ஒரு சில ஆண்களின் மனம் இத்தனை தூரம் வக்கிரமானது ஏன்? 

எழுத்தறிவிலும்  நாகரீகத்திலும் முன்னேறியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் மட்டும் தினந்தோறும் கூறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையான நாகரீகம் என்பது உடையணிவதிலும் மேற்பூச்சு வார்த்தைகளிலும் நிச்சயமாய் இல்லை. அது நாம் நடந்து கொள்ளும் முறைமைகளிலிருக்கிறது. வீட்டிலும் பள்ளியிலும் ஒரு ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் எதிர் பாலினத்தைக் குறித்து எத்தகைய கருத்துக்களை  நாம் விதைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவர்களின் செயல்களும் அமைத்து விடுகின்றன. பெண்களை தெய்வங்களாயும்யும் வேறு வடிவிலும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன் முதலில் ஒரு பெண்ணாய் அவளை உங்கள் மகனுக்கு அறிமுகப்படுத்துங்கள். பெண் என்பவள் குழந்தை பெரும் இயந்திரமோ அல்லது  பசி தீர்க்கும் இடமோ  மட்டுமே அல்ல அவளும் ஒரு சக உயிர் என்பதை உணர வையுங்கள். 

இன்றைய ஊடகங்களும் பெண் உடலை கவர்ச்சி பிண்டமாக்கும் செயல்களை நிறுத்திட முயல வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்       ஆண்கள் வகை வகையாய் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்களுக்காய் எந்த பெண்ணும் ஆணின் பின்னால் ஓடி வர மாட்டாள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் தரத்தினை சோதிக்க ஓடும் லாரியின் முன் குருட்டுத்தனமாய் எவளும் சென்றிட விரும்ப மாட்டாள். ஆண்களுக்கான பொருட்களை விற்பனை செய்வதில் எதற்காக அய்யா ஒரு பெண் தேவைப் படுகிறாள்? விடை கூறுங்கள். ஒன்றைத் தெளிவாய் உணர்ந்து கொள்ளுங்கள் பெண் என்பவள் போகப் பொருளல்ல அவள் உங்களின் ஒரு சக உயிர், உங்களுடன்அனைத்துமாயாகி உங்களுடன் உங்களை போலவே வாழ்ந்து மறைபவள்.


என்றைக்கு பெண் போகப் பொருளாயும், கவர்ச்சிப் பிண்டமாயும் பார்க்கப் படுவது நிறுத்தப் படுகிறதோ அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் அதுவரை இப்படியான சம்பவங்களை தினத்தோறும் செய்திதாள்களில் வாசித்தபடி நம்மை அது பாதிக்காத வரை முடிந்தவரை இயல்பாக நாம் இப்படியேதான் கடந்து கொண்டிருப்போம். ஏனெனில் நம்மிடம் இப்போதைக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கான எந்த ஒரு திட்டமோ உத்திரவாதமோ நிச்சயமாய் இல்லை.




இறுதியாய் அனைத்திற்கும் பெண்ணையே காரணம் கூறும் கலாச்சாரக் காவலர்களிடம் ஒரு கேள்வி. ஒரு வளர்ந்த பெண்ணிற்கு இப்படியான நிலை ஏற்ப்படுகையில் அவள் உடை அணியும் முறையே பெரும்பாலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கிறது, அதுவே ஆண் அப்பெண்ணை நெருங்க காரணம் என்று கூறும் நீங்கள் இச்சிறுமிகளின் விடையத்தில் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? இச்சிறுமிகளிடத்தில் எத்தகைய கவர்ச்சியை உங்கள் காம கண்கள் கண்டன. மழலை மாறாத ஒரு சிறுமியின் உடலிலும் உங்களால் காமத்திற்கான காரணங்களைக் கண்டறிய முடியுமெனில்...... நீங்களெல்லாம் இருப்பத்தைக் காட்டிலும்..........................



--பிரியா 

ஒரு வெளிச்சப் பறவை


எங்கிருந்தோ வந்ததொரு 
வெளிச்சப் பறவை 
இருட்டினுள்  நானடைய 
நினைக்கும் பொழுதுகளில் - என் 
திசை மாற்றிச் செல்ல 

சிதறல் - 12


புரியாத புதிர்
-------------------

எத்தனை முறைதான் எரிப்பது
துளிர்க்காத மரத்தின்
நனையாத வேர்களை....

காலமாற்றம்

ஒரு மிகப்பெரிய
காத்திருப்பின் முடிவு
இத்தனை அழகாய்
இருக்குமென்று
நினைத்ததில்லை
ஒரு போதும்!

முன்பை போலவே .....

ஒரு சிறிய
அலட்சியத்தின் வழியே
கடந்துசெல்ல முடிந்திடும்
மணித்துளிகளின் எண்ணிக்கைகள்
குறைந்து கொண்டே
வருகின்றன....

இங்கே
எதனையும் எப்பொழுதும்
இயல்பானதாய் - அதனதனாய்
விட்டுவிட்டு - கடக்கவே
முடிவதில்லை

அனைத்திலும் பொதிந்திருக்கும்
அதற்குறித்தனவல்லாத ஏதோ
ஒன்றினை தேடிக்கொண்டே
அலைகின்றன
மனதின் கண்கள்

அதனால்தானோ என்னவோ
இப்பொழுதெல்லாம்
எதனையும் இயல்பாக
கடக்க முடிவதேயில்லை
முன்பை போலவே




--பிரியா 

சிதறல் - 11

ஒரு கணம்
---------------

சமீபத்தில்
ஒரு புதிய கணமொன்றை
உணர்ந்து கொண்டேன்  - அதில்
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறியிருந்தோம்!

நிலவும் மீனும்

முதல் முதலாய்  
     விடிகாலைப் பொழுதின் 
வானதனை இரசித்திருந்தேன் 
     முற்றிலும் மறந்து 

வெல்வோம் வா




இருளும் ஒளியும்
இணைகின்ற காலமதில்
வெளிச்சத்தை பிடித்து
நிறுத்திடும் முயற்சியிது

நிலமென்ன கடலென்ன
எங்கும் வெல்லலாம்
வித்தியாசங்கள் ஏதுமில்லை
உயர்வொன்றே குறிக்கோளாய்

துள்ளட்டும் கால்கள்
துயரங்கள் நீங்கி
நீளட்டும் கைகள்
நீலவானையும் தாண்டி

தகிக்கும் ஆதவனோ
குளிரும் மாலையோ
என்னதான் செய்திடும்
எம்மான் உன்னை

உறுதி கொண்ட
உள்ளமது - உனக்கென
வாய்த்திருக்கும் வரையில்
தடைகளென்று ஏதுமில்லை...
வாழ்வோம் வா!



---பிரியா 


குறிப்பு : இது சித்திரம் பேசுதடி முகநூல் பக்கத்திற்காக எழுதிய கவிதை

சிதறல் - 10


கணப்பொழுதுகள்
-------------------------

அலைகளின்
ஒலியின் வழியே
நீந்திச் செல்கிறது - வாழ்க்கை
சில பயணங்களில்


                          ----X----


நானாகிய....
--------------

அனைவரையும் காட்டும்
முகவரிக் குறிப்பேட்டில்
தேடித்தேடி சலிக்கிறேன்
தொலைத்துவிட்ட
என்னை


                          ----X----


யாதுமாகி

-----------------

ஏதுமற்ற நாட்களில்
எல்லாமுமாய் ஆகிறது
பல நேரங்களில்
உன் நினைவுகள்

                          ----X----


வழிகாட்டி
--------------

சகுனங்கள் ஏதுமற்ற
இருட்டின்
காலடித்தடத்தின் வழியே
அழைத்துச் செல்கிறது
நம்பிக்கையின் ஒளிக்கீற்று



-- பிரியா 

எண்ணங்கள்


சாலைகளில்
என் பயணங்களில்
ஒரு கணம்
என்னை நிலைநிறுத்தி
செயலறுக்கச்  செய்கின்றன
சில எண்ணங்கள்

ஓநாயும் ஒரு சரீரமும் - மகளிர்தினத்திற்க்காக


ஓநாயால் குதறப்பட்ட - அழகிய 
சரீரமொன்றைக் கண்டேன்
ஒரு நாள் !

ஏராள குரல்கள் ஒலித்தன 
வீழ்ந்து கிடந்த
சரீரத்தைச் சுற்றிலும்... 

ஓநாய் குதறியதான் காரணம் என்ன?
விவாதித்தன குரல்கள் 
தத்தம் பாணியில் 

"உடை" என்றது  ஒரு குரல் 
"நேரம்" என்றது  ஒரு குரல் 
"அழகு" என்றது  குரல் 
"அலங்காரம்"என்றது ஒரு குரல்

இத்தனை குரல்களிடையே, 

குதறிய "ஓநாயைப்" பற்றியும்
பேசியது ஒரு குரல் 
பாவம் அது கூச்சல் குழப்பத்தில்  
மறைந்தது காற்றுடன் கலந்து ...

"சரீரம் எத்தனை அடி
சரீரத்தின் உடை என்ன 
சரீரத்தின் நிறம் என்ன"
ஆராய்ந்து ஆராய்ந்து - உலகிற்கு 
உரைத்தபடி சில குரல்கள் ...

அனைவரையும் அடக்கி அசரீரி ஒலித்தது 
"அடப் பிணந்தின்னிப் பேய்களே!
ஆராய்ந்தது போதும் சரீரத்தை 
பிடியுங்கள் அந்த ஓநாயை
மற்ற சரீரங்களாயின் தப்பிக்கலாகட்டும்!"

இரத்தவெறியேறிய கண்களுடன்
கூட்டத்தைப் பார்த்து 
குரூரமாய் சிரித்தது 
மறைந்திருந்த ஓநாய்!



--பிரியா 


இன்று உலக மகளிர் தினம்... இத்தினத்தில் அனைவருக்காகவும், எனக்காகவும்.....


நூல் விமர்சனம் - ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் முழங்காலும்

புத்தகங்களுக்கான அறிமுகத்தில் இம்முறை இரண்டு புத்தகங்கள். ஒன்று கவிதை புத்தகம் மற்றொன்று நகைச்சுவை சிறுகதைகளின் தொகுப்பு. இரண்டு புத்தகங்களுக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை இரண்டுமே நம் பதிவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்.

ஒன்று "கோவை ஆவிஅவர்களின் "ஆவிப்பா" கவிதை தொகுப்பு, மற்றொன்று சேட்டைக்காரன் அவர்களின் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற சிறுகதைகளின் தொகுப்பு.

சிதறல் - 9

அச்சாரம்
------------
                 
என் அத்தனை
நகர்வுகளிலும் என்னுடன்
சுற்றி சுழல்கிறது - உன்
அன்பெனும் அச்சாரம்

                                     -----X-----


புன்னகை
-------------

ஒரு
மந்திரக் கோலாய்
எப்பொழுதும்
எனக்கான புன்னகையை
தாங்கி வருகிறது
நீ அனுப்பும்
குறுஞ்செய்தி

                                     -----X-----




தூறலிலும் ....
--------------

எனக்கான
அத்தனை தூறல்களிலும்
ஒளிந்திருக்கிறது
உனக்கான எதிர்பார்ப்பு...

     
                                     -----X-----
 


தெரியுமா?
--------------

இறுதியாக கேட்க்கிறேன்..
எனக்கு
காதல் கவிதைகள்
எழுத வருவதில்லை
என்ற இரகசியம்
உனக்கு தெரியுமா?


--பிரியா 

நூல் அறிமுகம் - அபிதா


புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும்  அவ்வாறே  அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான்  இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.

காகிதக் கசங்கல்கள்


கசக்கிப் போட்ட 
காகிதக் குப்பைகளின் 
கசங்கல்களின் 
இடைவெளியின் வழியே 
ஒரு எழுத்தோ 
ஒரு சொல்லோ 
ஏதோ ஒன்று 
ஏக்கப் பார்வையுடன் - என்னை 
எட்டிப் பார்க்கிறது

கூண்டுப் பறவை


"பறப்பது பறவையின் சுதந்திரம்"
பதாகையை
மீண்டும் மீண்டும்
படித்தது
கூண்டிலிருந்த
பறவை ஒன்று

சிதறல் - 8


மரணம் 
-----------

முன் என்பதும் 
பின் என்பதும் 
யாரென்று 
அறியாத வரையில் - மரணம் 
என்னிடம் 
மரணித்தே கிடக்கிறது  

கிழிகிறதா இந்தியாவின் முகமூடி?


பாரத நாடு பழம்பெரும் நாடென்றும்,நாகரீகத்தில் உலகோர்க்கு மூத்தோர் என்றும், அன்னை தேசமென்று வணங்கி பெண்களுக்கு மதிப்பளிக்கும் தேசமென்றும் உலகில் பரப்பிய (பொய் )உரைகள் அனைத்தும் மதிப்பழிந்து போய்க்கொண்டிருக்கின்றன அடுத்து அடுத்து வாசிக்கும் செய்திகளைப் பார்க்கையில்.

முதலாவது செய்தி மேற்கு வங்காளத்தின் கோல்கத்தா அருகிலுள்ள ஒரு பழங்குடியினர் பிரதேசத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆணுடன் காதல் கொண்டதால், அவருக்கு எதிராக காப் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட தண்டனைதான். அந்த ஆணுக்கு 50,000 ரூபாய் பெண்ணிருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அந்த பெண்ணால் பணத்தை கட்ட முடியாத சூழ்நிலையில், அபராததிர்க்கு மாற்றாக அப்பெண்ணை 14 பேர் சேர்ந்து வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்க்கு பஞ்சாயத்தும் அந்த ஊர் பொதுமக்களும் ஆதரவு. அந்த 14 பேரில் அப்பெண்ணின் தந்தையின் வயதுடையவர்களும் அடக்கம் என்பது உச்சம். 

நம்முடைய சமூகம் எத்தகைய காட்டுமிராண்டி சமூகம் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம் அல்லவா. இது ஒன்று இது போல் எத்தனை சம்பவங்கள் சொல்லப்படாமல். இந்திய சமூகத்தின் கண்களில் காதல் ஏன் இத்தனை  பெரிய குற்றமாக கருதப்படுகிறது? காதலே குற்றமெனில் அதற்கான தண்டனை என்று இவர்கள் விதித்தது எத்தனை பெரிய கொடூரம். பெண் எப்பொழுதும் உடலாக மட்டுமே பார்க்கபடுகிராளா? அவளின் உடலை சிதைப்பதன் மூலம் எத்தகையொதொரு நீதியை இவர்கள் நிலைநாட்டி உள்ளார்கள். இது யாருக்கான நீதி? 

அடுத்தது தலைநகர் தில்லியில் ஆப்பிரிக்க பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. கறுப்பின பெண்கள் என்றாலே அவர்கள் விலை மாதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை  டெல்லி அமைச்சருக்கு சொல்லித்தந்தவர் யாரென்று  தெரியவில்லை. சாதி வெறி மட்டுமல்ல இந்தியர்கள் இனவெறியிலும் சலித்தவர்கள் அல்ல என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர் வெட்கம் கெட்ட டெல்லி அதிகாரிகள். தென்னிந்தியர்களின் இயல்பான நிறமும் கூட கருப்புதான். அப்பொழுது இவர்களுடைய பார்வையில் தென்னிந்திய பெண்களின் நிலை என்ன?  ஒரு நாட்டின் தலை நகரத்தில் உள்ளவர்களுக்கே மனித உரிமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோம் மனிதனின் இயல்பு அவர்களின் நிரத்தையோ  சமூகத்தையோ சார்ந்தது அல்ல என்பதை..


வடக்கில் மட்டும்தான் இப்படி, நம்மூரில்  அனைத்தும் அருமை என்று நினைக்க வேண்டாம். சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நடைபெற்ற  சம்பவம். ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி அவளின் ஒழுக்கத்தை சந்தேகத்திற்கிடமாக்கி பிரச்சினையை முடித்தாயிற்று ( இதில் அப்பெண்ணின் ஒழுக்கத்தை குறித்து சொல்லப்பட்டவை அனைத்தும் பொய்யுரைகள் என்பது அவ்வழக்கை விசாரித்த பெண் போலிஸ் அதிகாரியின் வாக்குமூலம்). ஆனால் விஷயத்தை அப்படியே மூடி மறைத்தாயிற்று. 


இவர்களுக்கு ஒரு கேள்வி , ஒரு பெண் விலை மாதே ஆயினும் அவளின் அனுமதியின்றி அவளை தொடுவதற்க்கான உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு?  அனைத்து சமூக கேடுகளுக்கும் சீரழிவிற்க்கும் பழியாவது பெண் உடல் தானா? பெண் என்பவள் அத்தனை இலப்பமாக போய்விட்டாளா? அப்பெண்ணை விலை மாது என்று கூறி யாரென்று  தெரியாத அவளுடன் வல்லுறவு கொண்ட அந்த ஆண்களுக்கு என்ன பெயர்? வேற்று சமூகத்து ஆணை காதலித்த குற்றத்திற்காய் அவளை புணர்ந்த இந்த ஆண்களுக்கு என்ன பெயர்? இவர்களுக்கான தண்டனை என்ன? இங்கு ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் பெண்ணிற்கு மட்டும்தானா? ஆண்  அதற்க்கு கட்டுப்படமாட்டனா? எனில் அப்படியான ஆண்களை எதற்காக சமூகம் மதிக்க வேண்டும்? அவர்களுக்கு இந்த சமூகத்தில் எதற்கு ஒரு இடம்? 

நட்சத்திரக் கூரையினடியில்



உங்களில் எவரும்
இரவு வானில்
மின்மினியாய் மின்னும்
நட்சத்திரங்களை இரசித்ததுண்ட
என்றாகிலும்?
இந்த நட்சத்திரக் கூரைக்கடியில்
என்னவெல்லாம் நடக்கும்
யோசித்ததுண்ட
எந்நாளும்?


இந்த நட்சத்திரக் கூரைக்கடியில்,

போர்களால் நசிந்த
ஒரு தேசத்தின் குடிமகன்
விடியலுக்கான ஒளியை
தேடிக்கொண்டிருக்கலாம்

ஒரு அகதி முகாமில்
காரணமே அறியாமல்
யாரோ ஒருவர்
தன்நாட்டவராலே
துன்புறுத்தப்படலாம்


இந்த நட்சத்திரத்தின் பார்வையில்,

மனைவியெனும் பேரில்
தன்  நிலைகளைக் கடந்து
பெண்ணொருத்தி கணவனின்
"பசியாற்றிக்" கொண்டிருக்கலாம்

குடும்பத்தின் நிலைகருதி
காலநேரம் கடந்து
கணவனொருவன்
கடமையாற்றிக் கொண்டிருக்கலாம்



இந்த நட்சத்திரம்,

பிழைப்பின் காரணம்
தேசாந்திரம் செல்லும்
தலைவனின் மனதில்
தலைவியின் காதலை
வருத்தத்துடன் விதைத்துச்
செல்லலாம்

காதல் கொண்ட
இளம் நெஞ்சமொன்றில்
பல வரிகளை விதைத்து
புது கவிஞர்களை
உருவாக்கிச் சிறக்கலாம்

கண் கூசும் இதன்  ஒளியினடியில்,

வாழ்வின் வெளிச்சம்
சிறிதுமற்ற யாரோஒருவர்
வாழ்க்கைத் தூண்டிலுடன்
விதியை வளைக்கலாம்

காலத்தின் பிடியான
மரணத்தில் பிழைக்க
யாரோ ஒருவர்
விளக்கின் வெளிச்சத்தை
துணைக்கு அழைக்கலாம்......


எது எப்படியோ
இந்த நட்சத்திரம் - நிதமும்
ஒளி வீசிக் கொண்டிருக்கிறது
அனைவருக்கும் பொதுவாய்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து...

இன்றேனும் நிமிர்ந்து பாருங்கள்-
ஒளித்தெறிப்பில் உங்களின்
உணர்வுகளும் மறைந்திருக்கும்
"உயிரோட்டமாய்"


--பிரியா




புல்வெளி


தலைச்சுமையாய் 
தான் சுமந்த 
பனித்துளியை 
என்னிடத்தில் 
தந்து செல்ல 
பனி இரவில் 
தவமிருக்கும் 
பச்சைப் புல்வெளி

சிதறல் - 7

கவிதையின் பிறப்பு 
-------------------

ஒற்றைக் கோப்பை 

கொஞ்சம் தேநீர் 
நிறைய கண்ணீருடன் 
பிறக்கின்றன 
பல கவிதைகள்