பக்கங்கள்

நீ

நீ என்பது நிஜமா
நீ என்பது பொய்யா
நீ என்பது சொரூபமா - இல்லை
நீ என்பது அரூபமா

நிதமும் பிறக்கிறாய்
நிதமும் மலர்கிறாய்
நிதமும் வடிக்கிறாய்
நிதமும் உதிர்ந்தும் போகிறாய்

இருப்பினும் இடைவெளியின்றி
அனைத்துமாய் அனைத்திலுமாய் - இதில்
நீ என்பதைத் தேடித்தேடி
தொலைந்து மறைந்து
அலுத்துப்போய் இறுதியில்
ஒன்றை உறுதிசெய்தபின் - நீ என்பது
ஏதுவாகவோ ஆகிப்போனாய்......


--பிரியா


இலையைப்போல....

ஒற்றைக் காலில்
சுற்றி சுழன்று
ஆடிக் கொண்டிருக்கும்
அந்த இலையின்
நடனத்தில் இலயித்திருக்கிறேன்....

தன்  தாளங்கள் பற்றிய கவலையில்லை
தன் அசைவுகள் குறித்து பிரங்ஞையில்லை
எவர் பார்ப்பார், எவர் என்ன சொல்லுவார்
எதுவுமே இல்லை
அந்த இலைக்கு....

காற்றுடன் கைகோர்த்து
தானாக கோர்த்த தாளத்தில்
தடம் பிடித்து செல்கிறது
இயல்பு மாறாமல்...

வாழ்ந்திட வேண்டும்
ஒரு நாளாகினும்
அந்த இலையைப்போல.....

--பிரியா 

கனவிலொன்று...

நேற்று கனவில்
கவிதை ஒன்று கண்டேன்
ஒய்யாரமாய்
வார்த்தைகள் கோர்க்கப்பட்டு
பொய்யும், புனைவுமாய்
மெய்யும், உணர்வுமாய்
அத்தனையும் கலந்து
அந்தரத்தில் தொங்கியபடி....

பாவம் அது
தொங்குவதை சகியாமல்
அதற்கென்று ஓரிடம்
அமைத்திட எண்ணி
வேகமாய் தேடி ஓடினேன்
அங்கிங்கு என்று
எங்கும் தேடி
கச்சிதமாய் ஓரிடம்
அதற்கென்று பிடித்து
மகிழ்வுடன் வருகையில்
காணாமல் போயிருந்தது
அவ்விடமிருந்த கவிதை.....


--பிரியா