பக்கங்கள்

தொடருதல்....

தனித்த அறையினுள்
வீசியெறியப்பட்டிருந்த
காகிதம் ஒன்றினைக்
கண்டெடுத்தேன்

சிதறல் - 20

விட்டுவிடுங்கள்
---------------------------

பிரித்துவிடாதீர்கள்
விடியும் வரை
அந்த இமைகளை - அதனுள்
பத்திரமாய் இருக்கிறது
இருதுளிக் கண்ணீர்....

புழுதி படிந்த தெருக்களில்....

புழுதி படிந்த தெருக்களின்
முகங்கள் அத்தனை எளிதாய்
மறக்கக்  கூடியதாய் இல்லை....
கால்களை எண்ணிக்கைக்குள்
அடக்கும் முயற்ச்சியினை -எப்பொழுதோ
விட்டொழித்தாகி விட்டது...


புழுதி படிந்த தெருக்களின்
கட்சி, சாதி, மதம் எதுவென்று
யாரும் அறிந்திருக்கவில்லை...
அதன் மொழி கூட
அதீத இரகசியமாயிருந்தது!

புழுதி படிந்த தெருக்களின்
திண்ணைகள்  எப்பொழுதும்
வெறுமையாய்  இருப்பதேயில்லை....
அந்த ஜன்னல்களில்  நிதமும்
செய்திகளிருக்கின்றன புதியதாய்
கண்டோ கேட்டோ !

புழுதி படிந்த தெருக்களில்
வானம் அத்தனை
வெண்மையாய் இருந்தது
வியப்புக்குரியதாய் !
காற்று இயல்பாய் வீசியது
அனைவருக்கும் பொதுவாய்.....

புழுதி படிந்த தெருக்களை
இப்பொழுது பார்க்கவே முடிவதில்லை...
அவை காணாமல் போனதனால்....



--பிரியா

சிதறல் - 19

முடிவற்ற 
==========
வாடிய பூக்களின் 
இதழ்களைக் கோர்கையில் 
விரலின்வழி பரவிச் செல்கிறது
மகரந்த வாசம்


இருப்பு 
=======

உதிர்ந்த கிளையொன்றின்  
வாசம் பரவிச்  செல்கிறது 
காற்றின் வழி - அதன் 
இருப்பை சொல்லியபடி 

மாற்றம் 
=======

மெலிதாய் தலையாட்டும் 
பூவிதழ்களுக்கு தெரிவதேயில்லை 
தன்னை தாலாட்டும் 
இந்த காற்றுதான் - சில 
மலைகளைப் புரட்டிப்  போட்டதென்று'

முரண் 
=======

குளிரூட்டப்பட்ட 
அறையில் அமர்ந்தபடி 
இரசித்துப் படிக்கின்றேன் 
மழையின் கவிதைகளை 



--பிரியா 

நூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)

நூலின் பெயர் : விலங்கு பண்ணை 
மூலம் : ஆங்கிலம் (Animal  Farm)
எழுத்தாளர் : ஜார்ஜ் ஆர்வெல் 
தமிழில் : பி.வி. ராமசாமி 
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் 

மேலோட்டமாக பார்க்கையில் இது ஒரு சாதாரண பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகம் போன்று தோன்றினாலும் சற்று கம்யூனிச ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் இதன் ஆழம் புரியும். 1945-ல் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் இது.


ஒரு பண்ணையில் பண்ணை வேலைக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் வளர்க்கப்படும் பன்றி, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, காகம் போன்ற பண்ணை மிருகங்களும், பறவைகளும் எஜமானர் தங்களுக்கு  இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு புரட்சியின் மூலம் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்று திட்டமிடுகின்றன. 





சரியான அளவு தீவனம் மற்றும் ஓய்வு வழங்கப்படாதது , கோழிகளின் முட்டைகளை முழுவதுமாக சந்தைக்கு அனுப்பி விடுவது, இளம் பன்றிகளும் ஆடுகளும் இறைச்சிக்கு விற்கப்படுவது, மாடுகளின் பால் கன்றுகளுக்கு வழங்கப்படாமல் வெளி சந்தையில் விற்கப்படுவது இதுவே அவைகளின் வெறுப்புக்குக் காரணம். 

ஒரு நாள் விலங்குகளில், வயதில் மூத்த ஓல்ட் மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி அனைவரையும் தான் கண்ட ஒரு கனவு குறித்து கூற இருப்பதாகக்  கூறி அழைக்கிறது . அனைத்து விலங்குகளும் இரவில் எஜமானருக்குத்  தெரியாமல்  ஒன்று கூடுகின்றன. கூட்டத்தில் ஓல்ட் மேஜர் தான் கண்ட கனவில் இங்கிலாந்தில் புரட்சி வெடித்ததாகவும் இங்கிலாந்து முழுவதிலும் பண்ணைகள் மனிதர்களின்  வசமிருந்தது முழுவதுமாக விலங்குகளின் வசம் வந்ததாகவும் மனிதர்களின் காலடியே படாத சொர்க்க பூமியாக இங்கிலாந்து மாறி விட்டதாகவும் கூறியது.

இதன் மூலம் விலங்குகளின் மனதில் புரட்சிக்கான விதையையும் தூவிவிட்டு தனக்கு தன் முன்னோர்கள் கற்று தந்ததாகக்  கூறி இங்கிலாந்தின் விலங்கினமே என்ற பாடலையும் அனைவருக்கும் கற்றுக்  கொடுக்கிறது. இது நடந்து சிறிது நாட்கள் கழித்து அந்த வெள்ளை பன்றி வயோதிகத்தின் காரணமாக இறந்தும் விடுகின்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து   எதிர்பாராத விதமாக எதிர்பாராத  நேரத்தில் நடந்த ஒரு புரட்சியின் மூலம் பண்ணையை எஜமானரிடமிருந்து பறித்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து  விரட்டி விட்டு விலங்குகள்  பண்ணையைக் கைப்பற்றி  தாங்களே நிர்வகிக்கத்  தொடங்குகின்றன. 



முதலில் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது அங்குள்ள விலங்குகளில் அதிகம் புத்தி கூர்மை உள்ள விலங்குகளாக அறியப்பட்ட பன்றிகளிடம் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. பண்ணையின் பெயர் "மேனார் பண்ணை " என்பதிலிருந்து  "விலங்குப்  பண்ணை" என்று மாற்றப்படுகிறது.ஸ்நோபால், நெப்போலியன் என்ற இரண்டு  பன்றிகளும் நிர்வாகப்  பொறுப்பை ஏற்று நடத்துகின்றன. 

விலங்கு பண்ணைக்கான ஒழுங்கு விதியாக சில கட்டளைகள் வகுக்கப்பட்டு அவை 7 கட்டளைகளாக அனைவரின் கண்ணிலும் படும் விதமாக அங்குள்ள உயரமான சுவற்றில் எழுதப்படுகிறது.(இடைப்பட்ட காலத்தில் பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எஜமானரின் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பன்றிகள் எழுதப் படிக்க கற்றுக் கொண்டன). ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டம் கூட்டப்பட்டு பண்ணைக்குத் தேவையான தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. கூட்ட இறுதியில் கொடி ஏற்றப்பட்டு 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் பாடப்படுகிறது.



சில நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து அக்கம் பக்கம் பண்ணைகளில் விலங்குப் பண்ணையின் புகழ் பரவத் தொடங்குகிறது.  ஸ்நோபால்  நிறைய நல்ல திட்டங்களைத் தொடங்க தீர்மானங்கள் கொண்டு வருகிறது . விலங்குகளுக்கு எழுத படிக்கக்  கற்றுக் கொடுப்பது, பண்ணையில் காற்றாலை தொடங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் நெப்போலியனுக்கும் ஸ்நோபாலுக்கும்  ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை. இதனிடையில் மேனார் பண்ணையின் உரிமையாளர்  சில ஆட்களைத் திரட்டிக் கொண்டு பண்ணையைத் தாக்க வருகிறார். இறுதியில் விலங்குகளால் வெற்றியடையப்பட்ட "மாட்டுத் தொழுவ யுத்தம்" என்று பெயரிடப்பட்ட அந்த யுத்தத்தில் ஸ்நோபால் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அதற்கு 'விலங்கு நாயகன் முதல் வரிசை' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.



 இதன் பிறகு காற்றாலை விவகாரத்தில்  வேற்றுமை வெடித்து ஸ்நோபால் நெப்போலியனால் பண்ணையை விட்டே விரட்டப்படுகிறது.
இது நடந்த பிறகு நெப்போலியனின் நடவடிக்கையில் மாற்றம் வரத் தொடங்குகிறது. சிறிது சிறிதாக தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி சர்வாதிகாரியாக மாறுகிறது. சுவற்றில் எழுதப்பட்ட 7 கட்டளைகளும் மீறப்படுகின்றன. பண்ணையில் பன்றிகளையும் நாய்களையும் தவிர மற்ற 
விலங்குகள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முந்தைய எஜமானரிடம் இருந்ததை விட விலங்குகளின் நிலை இன்னும் மோசமாகிறது. 

இதனையடுத்து 'காற்றாழை யுத்தம்' என்ற இரண்டாவது யுத்தம் பக்கத்து பண்ணையாளருடன் நடக்கிறது இதில் விலங்குகள் வென்றாலும் பல விலங்குகள் பலத்த காயமடைகின்றன.  ஆனால் தாங்கள் விலங்குப் பண்ணையின் அங்கத்தினர், மனிதர்களின் அடிமை இல்லை என்ற எண்ணம் அந்த விலங்குகளை அனைத்து துயரங்களையும் தாங்கிக் கொள்ளச் செய்கிறது. ஆனால் சிறிது சிறிதாக மாறிய நெப்போலியன் இறுதியில் அனைத்து வகைகளிலும் மனிதனைப் போலவே நடந்து கொள்கிறது. 

பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்குகிறது. கோழிகளின் முட்டைகள் விற்கப்படுகின்றன. விலங்குகளுக்கு ஒய்வு பெரும் வயது அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் விடப்படுகிறது. அதிகமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட தீவனத்தின் அளவும் முன்பை விட குறைக்கப்படுகிறது. ஆனால் பன்றிகளுக்கான தீவனம் மட்டும் அதிகரிக்கப்பட்டு அவைகள் கொழுத்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில் பன்றிகள் இரண்டு கால்களால் நடக்கவும் மனிதர்களைப் போல மது அருந்தவும் கூட கற்றுக் கொள்கின்றன.பார்லி அதிகம் பயிரிடப்பட்டு பண்ணை  வீட்டின் ஒரு பகுதியில் பியர் காய்ச்சப்படுகிறது.

இறுதிப் பகுதியில் ஒரு நாள் பண்ணையில் பக்கத்து பண்ணைகாரர்களுக்காக சிறப்பான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விருந்து நிகழ்ச்சியினை அறையின் வெளியிலிருந்து ஜன்னலின் வழியாக  மறைந்து நின்று காணும் அனைத்து விலங்குகளும், பன்றிகள் முற்றிலும் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைப் பார்த்தும் அவைகளின் முகம் சிறிது சிறிதாக மனிதர்களைப் போல மாறுவதைக் கண்டும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன......



கதைக்கு என் புரிதல்:
புரட்சிகள் எத்தனை வந்தாலும் போனாலும் அடி மட்ட மக்களின் நிலை என்பது எப்போதும் ஒன்று போலவே இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை எப்போழுதும் இக்கரைக்கு  அக்கரை பச்சை அத்தனையே. கரங்கள் மட்டுமே மாறுகின்றன அதன் உள் இருக்கும் பொருட்கள் எப்பொழுதுமே சுழட்டப்படும் சாட்டைகள் தாம். தலைவர்கள் மாறுவதிலும் சில வார்த்தை மாயங்களிலும்  நம்மை தொலைத்து கொண்டே இருக்கிறோம் காலங்கள்  தோறும். அதைத்தவிர வேறு வாழ்வியல் மாற்றங்கள் என்பது எப்பொழுதும் ஒரு கேள்விக் குறியே.  


--பிரியா   

சிதறல் - 18

பூக்கள்
======
பச்சைப் புல்வெளியில்
சிதறிக் கிடக்கின்றன
பூக்கள் - என் மனதின்
எண்ணங்களைப் போலவே
எத்தனை முயற்சித்தும்
முடியவே இல்லை
ஒரு நிலைப்படுத்த....

சிதறல் - 17

வாழ்தல்
---------------
கிளைகளையும்
இலைகளையும் தாண்டி
பரவிக் கிடக்கிறது
அந்த மரம்
நிழலின் வழி

சிதறல் - 16

ஒரு இலையாய்
-------------------------

நான்
முன் ஜென்மத்தில் - ஒரு
இலையாய் இருந்திருக்கக்கூடும்
எப்பொழுதும்
எதனுடனாவது ஒட்டிக்கொண்டேX
காற்றில் அலைந்தபடி....

                            ---X---

ஒரு கணக்கு
---------------------

நானென்பது
எத்தனை நானென்று
கணக்கிட்டுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணிக்கை முடிந்தபாடில்லை....

                           ---X---

என்னுள் 
-------------

விட்டுக்கொடுக்கவும் இயலாத
தொட்டுக்கொள்ளவும் இயலாத
எண்ணங்களைக் கொண்ட
வினோத கலவையொன்று
செயல்படுகிறது என்னுள்
என்னை இயக்கியபடி.....

                          ---X---

மரத்தினிடையில் 
----------------------------

அடர்ந்த மரங்களுக்கிடையில்
என்னை ஒழித்துக்கொள்கிறேன்...
சில மரங்களில்
கிளைகள் மட்டுமே அதிகம்
தண்டுகள் - அத்தனை
பெரிதாய் இருப்பதில்லை...



--பிரியா 

மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது?

இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம். வழக்கம் போல் பல்வேறு பட்ட முகநூல் மற்றும்  சமூக வலைத்தளங்களின் வாழ்த்துக்களுடன் விடிந்தது பொழுது. நானும் ஒரு வாழ்த்து பதிவிட்டேன் நள்ளிரவிலேயே, விடிந்தவுடன் அனைவரின் கண்களிலும் படும்படி. ஆனால் காலை நான் முகநூல் வந்ததும் பார்த்த முதல்  செய்தியே இன்றைய நாளைக் குறித்தான முடிவுடன் இருந்தது.

செய்தி இதுதான்அகமதாபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறாள் அவளது உறுப்பில் ஒரு இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டு. இப்படியான செய்தியை பார்த்த பின்பு வரும் மகளிர் தின வாழ்த்துக்களை எப்படியானதாக பாவிப்பது. 

பெண்களுக்கானதாகவும் குழந்தைகளுக்கானதாகவும் இல்லாமல் போன இந்த சமூகத்தில் மகளிர் தினம் என்ற ஒன்று எதற்காக? இன்னும் எத்தனை குழந்தைகள் இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகப் போகிறார்கள். யாரிடமேனும் விடை உண்டா? பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களின் மீதே ஆயிரம் குற்றங்களுடன் வாதிடும் கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன விடையளிக்கப் போகிறார்கள்? பெண்கள் எனில் இரவில் வெளியே போவது குற்றம், ஆடை அணிவதில் குறை, அதீதமான அழகுபடுத்துதல் இன்னும் இன்னும் என காரணங்கள் சொல்லலாம், குழந்தைகளுக்கு உங்களிடம் உள்ள காரணம் என்ன? அவர்களின் ஆடையா? தெருவில் விளையாடுவதா? பள்ளிக்கு செல்வதா? என்ன கூறுவார்கள் இவர்கள்?



இதிலும் சிலர் சொல்வதுண்டு, வளர்ந்த பெண்கள் உணர்வுகளைத் தூண்டும்படி நடப்பதால்தான் அதன் வடிகால்களாக குழந்தைகள் மாறுகிறார்கள் என்று. அவர்களுக்கு ஒன்று தெரியாமல் இருக்கலாம் இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் சிறார்களில் 60% ஆண்  குழந்தைகள், அதுவும் அதே ஆண்களால்தான். நம்ப முடிகிறதா உங்களால். இதற்கு என்ன வகையான காரணங்களைச் சொல்லாம்? ஒன்று செய்யலாம் ஆண் குழந்தைகள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளானதற்கு வளர்ந்த ஆண்கள் அணியும் உடையும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் தினசரி செல்லுவதுமே காரணமாய் இருக்கும், ஆதலால் இனி ஆண்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே இருக்கட்டும், ஆண்கள் சரியானபடி ஆடை அணியட்டும், அவர்கள் தெருவினுள் இறங்கி நடக்காம இருக்கட்டும். இப்படியான யோசனையைத்தான் கலாச்சாரக் காவலர்கள் சொல்லக் கூடும், இப்படித்தான் சொல்லவும் வேண்டும் ஏனெனில் இவர்கள் பெண்களுக்கு இப்படியான யோசனையைத் தானே வழங்கினார்கள்.


இவர்களின் யோசனைப்படி பார்த்தால் ஆண்,  பெண், குழந்தைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கட்டும், எங்கும் செல்லாதிருக்கட்டும்.அலுவலகங்கள் தேவை இல்லை, பள்ளிகள் தேவை இல்லை, அரசியல் சாசனங்கள் தேவை இல்லை, நாகரீகம் தேவை இல்லை, நாடு, சமூகம், மதங்கள், வழிபாட்டுத்தலங்கள், கட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சடங்குகள்  எதுவும் தேவை இல்லை. அனைவரும் எதுவுமற்ற ஆதி மனிதர்கள் ஆவோம். கலாச்சாரக் காவலர்களும் சில முற்போக்கு வியாதிகளும் சொல்லும் தீர்வுகள் இப்படியான சூழலுக்குத்தான் நம்மை இட்டு செல்லும்.


பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வென்பது எதையும் தடை செய்வது அல்ல. மாறாக உணர வைப்பது. ஆண் என்பதும் பெண் என்பதும் யாரென்பதை உணர வைப்பது. பெண் உடலோ ஆண் உடலோ போகப் பொருளல்ல என்பதை உணர வைப்பது. குழந்தைகள் நிச்சயம் உணர்ச்சிகளின் வடிகால்கள் அல்ல அவர்கள் சமூகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிசங்கள் என்பதை உணர வைப்பது. இது வளர்ப்பு முறைகளாலும், சரியான வாழ்க்கைக் கல்வியினாலும் மட்டுமே சாத்தியம் மாறாக தண்டனைகளாலோ மறைத்து வைப்பதினாலோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுவரை மாற்றங்கள் நிகழ்வது கேள்விக்குறியே.

முடிவில், இத்தகைய கொடும் செய்திகளற்ற ஒரு மகளிர் தினம் விரைவில்  வரும், உண்மையான கொண்டாட்டத்துக்குறிய ஒரு நாளாக அது அமையுமென்ற நம்பிக்கையில் இன்றைய நாளும் கடந்து போகிறது  மற்றுமொரு நாளாக.

--பிரியா 

சிதறல் - 15

நிரம்பாத...
--------------

நேற்றைய மழைக்கு
முற்றத்தில் வைத்திருந்த
பாத்திரங்கள் அனைத்தும்
நிரம்பி விட்டன - ஆயினும்
இன்னமும் இருக்கிறது
நிரப்பப்படாத பானைகள்
வீட்டினுள்...


மழை சுத்தம்
--------------------

நேற்றைய மழையால்
தெரு முழுவதும்
சுத்தமானதாய்
பேசிகொண்டனர் அனைவரும்
எனக்கு தெரியும்
அது நிச்சயமாய்
அனைத்தையும் கழுவி செல்லவில்லையென்று.....


நானும்...
-------------

ஒரு
மழை நாளின் இறுதியில்
அவள் யாரிடமும்
எதுவும் சொல்லாமல்
திடீரென சென்றுவிட்டாள்....
அவள் ஏன்
அப்படிச் சென்றாள்
நீண்ட நேரத்திற்கு
யோசித்துக் கொண்டேயிருந்தேன்
ஒரு நாள்
நானும் கூட
அப்படிச் செல்லக் கூடும்....


மறைந்த..
--------------
ஊமையாகிப் போன
மழையின் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
கேட்கும் வகையிலேனும்
அது பேசக்கூடும்....


--பிரியா