பக்கங்கள்

கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சில்லறை வணிக அரசியல்

 ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காய்கள் வாங்க சென்றிருந்தோம். வாங்கி முடித்து பணம் செலுத்துகையில் மீதி சில்லறைக்கு காசாளர் பெண் சில்லறைக்கு பதில் சாக்கலேட் கொடுத்தார். நான் அதை திருப்பி கொடுத்து எனக்கு சாக்கலேட் வேண்டாம் சில்லறை தொகை தான் வேண்டும் என்று கேட்க எனை வித்தியாசமாக பார்த்து முறைத்து கொண்டே சில்லறையைத் தந்தார்.

மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது?

இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம். வழக்கம் போல் பல்வேறு பட்ட முகநூல் மற்றும்  சமூக வலைத்தளங்களின் வாழ்த்துக்களுடன் விடிந்தது பொழுது. நானும் ஒரு வாழ்த்து பதிவிட்டேன் நள்ளிரவிலேயே, விடிந்தவுடன் அனைவரின் கண்களிலும் படும்படி. ஆனால் காலை நான் முகநூல் வந்ததும் பார்த்த முதல்  செய்தியே இன்றைய நாளைக் குறித்தான முடிவுடன் இருந்தது.

செய்தி இதுதான்அகமதாபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறாள் அவளது உறுப்பில் ஒரு இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டு. இப்படியான செய்தியை பார்த்த பின்பு வரும் மகளிர் தின வாழ்த்துக்களை எப்படியானதாக பாவிப்பது. 

பெண்களுக்கானதாகவும் குழந்தைகளுக்கானதாகவும் இல்லாமல் போன இந்த சமூகத்தில் மகளிர் தினம் என்ற ஒன்று எதற்காக? இன்னும் எத்தனை குழந்தைகள் இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகப் போகிறார்கள். யாரிடமேனும் விடை உண்டா? பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களின் மீதே ஆயிரம் குற்றங்களுடன் வாதிடும் கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன விடையளிக்கப் போகிறார்கள்? பெண்கள் எனில் இரவில் வெளியே போவது குற்றம், ஆடை அணிவதில் குறை, அதீதமான அழகுபடுத்துதல் இன்னும் இன்னும் என காரணங்கள் சொல்லலாம், குழந்தைகளுக்கு உங்களிடம் உள்ள காரணம் என்ன? அவர்களின் ஆடையா? தெருவில் விளையாடுவதா? பள்ளிக்கு செல்வதா? என்ன கூறுவார்கள் இவர்கள்?



இதிலும் சிலர் சொல்வதுண்டு, வளர்ந்த பெண்கள் உணர்வுகளைத் தூண்டும்படி நடப்பதால்தான் அதன் வடிகால்களாக குழந்தைகள் மாறுகிறார்கள் என்று. அவர்களுக்கு ஒன்று தெரியாமல் இருக்கலாம் இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் சிறார்களில் 60% ஆண்  குழந்தைகள், அதுவும் அதே ஆண்களால்தான். நம்ப முடிகிறதா உங்களால். இதற்கு என்ன வகையான காரணங்களைச் சொல்லாம்? ஒன்று செய்யலாம் ஆண் குழந்தைகள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளானதற்கு வளர்ந்த ஆண்கள் அணியும் உடையும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் தினசரி செல்லுவதுமே காரணமாய் இருக்கும், ஆதலால் இனி ஆண்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே இருக்கட்டும், ஆண்கள் சரியானபடி ஆடை அணியட்டும், அவர்கள் தெருவினுள் இறங்கி நடக்காம இருக்கட்டும். இப்படியான யோசனையைத்தான் கலாச்சாரக் காவலர்கள் சொல்லக் கூடும், இப்படித்தான் சொல்லவும் வேண்டும் ஏனெனில் இவர்கள் பெண்களுக்கு இப்படியான யோசனையைத் தானே வழங்கினார்கள்.


இவர்களின் யோசனைப்படி பார்த்தால் ஆண்,  பெண், குழந்தைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கட்டும், எங்கும் செல்லாதிருக்கட்டும்.அலுவலகங்கள் தேவை இல்லை, பள்ளிகள் தேவை இல்லை, அரசியல் சாசனங்கள் தேவை இல்லை, நாகரீகம் தேவை இல்லை, நாடு, சமூகம், மதங்கள், வழிபாட்டுத்தலங்கள், கட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சடங்குகள்  எதுவும் தேவை இல்லை. அனைவரும் எதுவுமற்ற ஆதி மனிதர்கள் ஆவோம். கலாச்சாரக் காவலர்களும் சில முற்போக்கு வியாதிகளும் சொல்லும் தீர்வுகள் இப்படியான சூழலுக்குத்தான் நம்மை இட்டு செல்லும்.


பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வென்பது எதையும் தடை செய்வது அல்ல. மாறாக உணர வைப்பது. ஆண் என்பதும் பெண் என்பதும் யாரென்பதை உணர வைப்பது. பெண் உடலோ ஆண் உடலோ போகப் பொருளல்ல என்பதை உணர வைப்பது. குழந்தைகள் நிச்சயம் உணர்ச்சிகளின் வடிகால்கள் அல்ல அவர்கள் சமூகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிசங்கள் என்பதை உணர வைப்பது. இது வளர்ப்பு முறைகளாலும், சரியான வாழ்க்கைக் கல்வியினாலும் மட்டுமே சாத்தியம் மாறாக தண்டனைகளாலோ மறைத்து வைப்பதினாலோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுவரை மாற்றங்கள் நிகழ்வது கேள்விக்குறியே.

முடிவில், இத்தகைய கொடும் செய்திகளற்ற ஒரு மகளிர் தினம் விரைவில்  வரும், உண்மையான கொண்டாட்டத்துக்குறிய ஒரு நாளாக அது அமையுமென்ற நம்பிக்கையில் இன்றைய நாளும் கடந்து போகிறது  மற்றுமொரு நாளாக.

--பிரியா 

சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150

மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - பெண்கள் பாதுகாப்புக்காக 150 கோடியும்  சர்தார் பட்டேலின் சிலையை குஜராத்தில் நிறுவ 200 கோடியும் ஒதுக்கீடு


வறுமை எழுத்தறிவின்மை சுகாதாரம் போன்ற ராட்சதப் பிரச்சினைகள் இன்னும் நீங்கப்  பெறாத சுதந்திர இந்தியாவில், இவை அனைத்தையும் விட தற்பெருமைக்காக 2500 கோடி ரூபாய் செலவு செய்து  கட்டப்படும் ஒரு சிலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் சுலபமாய் 200 கோடிரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் அதுவே இச்சமூகத்தின் சரி பாதியாய் நித்தம் நித்தம் ஏதேனும் ஒரு வகைப் பிரச்சினையில் ஆட்பட்டு வாழும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு இவர்களால் ஒதுக்க முடிந்தது வெறும் 150 கோடி மட்டுமே. பாவம் இவர்களின் வறுமை கூட பாரபட்சமானது போல. 

இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது இந்திய அரசு?.  பெண்களின் பாதுகாப்பு என்பது இந்த அரசாங்கத்திற்க்கு அத்தனை பெரிய விசயமாக படவில்லையா? இல்லை இந்த இந்திய சமூகத்தில் பெண்கள் அத்தனை அதிக பாதுகாப்பாக வாழ்கிறார்களா? எப்பொழுதும் தொலை நோக்கிகளை கையில் வைத்துக் கொண்டு கனவுலகில் வாழும் இந்த அரசாங்கத்திற்கு நிஜம் அத்தனை சீக்கிரம் புரியாதுதான்.  ஆனால் என்ன செய்ய எங்கள் கைகளில் தொலை நோக்கிகளும் இல்லை,  இவர்களைக் குறித்தான கனவுகளும் இல்லை, எங்கள் வெற்று கண்களுக்கு நிகழ்காலம் அத்தனை அப்பட்டமாய் தெரிகிறதே.



தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் தான் அதில்  நிச்சயம் மாற்றுக் கருத்தென்பதே கிடையாதுதான். ஆயினும் போராடி வாழ்ந்து மறைந்த தேசத்தலைவர்களுக்கு  ஆடம்பர சிலை அமைப்பதைக் காட்டிலும் நித்தம் நித்தம் போராட்டத்துடன் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் மிகவும் அவசியம். இதை அந்த தலைவர்களின் ஆன்மாவும் கூட உறுதியாய் ஒத்துக்கொள்ளும்(நீங்கள் கேட்டுப் பார்த்தால்). உங்கள் சிலை அமைப்பின் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கலாம். ஆனால் அதில் எங்கள் நலனைப் புறக்கணிக்காதீர்கள். நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களித்தது நிச்சயம் சிலைகளை மட்டுமே அமைக்க அல்ல.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த இந்திய வாக்காளர்களில் பெண்களும் உள்ளனர்  என்பதை மோடி அரசாங்கம் மறந்து விட்டது போலும். இவர்களால் தங்களுக்கு ஏதேனும் ஒரு நல்லது நடக்கும்  என்ற எண்ணத்தில்தான் இந்த பெண்கள் வாக்களித்திருந்தனர். அந்த வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி  நல்லதொரு பரிசை அளித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். இது போன்றதொரு நல்லாட்சியை எதிர் பார்த்துதானே வாககளித்தீர்கள் அனைவரும்???

உங்களில் யாரேனும் கேள்வி கேட்கலாம் இருக்கும் நிதி நிலைமையில் 150 கோடியாவது ஒத்துக்கினார்களே என்று, அதே நிதி நிலையிலிருந்துதான் சிலையமைக்க இந்த 200 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மட்டும்தான் மத்திய அரசு இப்படி செய்தது என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னுமொரு பிரச்சினையும் உண்டு மிகப்பெரிய திட்டங்களான லக்னோ அகமதாபாத் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை............................................. வெறும் 100 கோடி மட்டுமே. வாழ்க நமோ அரசாங்கம்


-- பிரியா 

கிழிகிறதா இந்தியாவின் முகமூடி?


பாரத நாடு பழம்பெரும் நாடென்றும்,நாகரீகத்தில் உலகோர்க்கு மூத்தோர் என்றும், அன்னை தேசமென்று வணங்கி பெண்களுக்கு மதிப்பளிக்கும் தேசமென்றும் உலகில் பரப்பிய (பொய் )உரைகள் அனைத்தும் மதிப்பழிந்து போய்க்கொண்டிருக்கின்றன அடுத்து அடுத்து வாசிக்கும் செய்திகளைப் பார்க்கையில்.

முதலாவது செய்தி மேற்கு வங்காளத்தின் கோல்கத்தா அருகிலுள்ள ஒரு பழங்குடியினர் பிரதேசத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆணுடன் காதல் கொண்டதால், அவருக்கு எதிராக காப் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட தண்டனைதான். அந்த ஆணுக்கு 50,000 ரூபாய் பெண்ணிருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அந்த பெண்ணால் பணத்தை கட்ட முடியாத சூழ்நிலையில், அபராததிர்க்கு மாற்றாக அப்பெண்ணை 14 பேர் சேர்ந்து வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்க்கு பஞ்சாயத்தும் அந்த ஊர் பொதுமக்களும் ஆதரவு. அந்த 14 பேரில் அப்பெண்ணின் தந்தையின் வயதுடையவர்களும் அடக்கம் என்பது உச்சம். 

நம்முடைய சமூகம் எத்தகைய காட்டுமிராண்டி சமூகம் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம் அல்லவா. இது ஒன்று இது போல் எத்தனை சம்பவங்கள் சொல்லப்படாமல். இந்திய சமூகத்தின் கண்களில் காதல் ஏன் இத்தனை  பெரிய குற்றமாக கருதப்படுகிறது? காதலே குற்றமெனில் அதற்கான தண்டனை என்று இவர்கள் விதித்தது எத்தனை பெரிய கொடூரம். பெண் எப்பொழுதும் உடலாக மட்டுமே பார்க்கபடுகிராளா? அவளின் உடலை சிதைப்பதன் மூலம் எத்தகையொதொரு நீதியை இவர்கள் நிலைநாட்டி உள்ளார்கள். இது யாருக்கான நீதி? 

அடுத்தது தலைநகர் தில்லியில் ஆப்பிரிக்க பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. கறுப்பின பெண்கள் என்றாலே அவர்கள் விலை மாதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை  டெல்லி அமைச்சருக்கு சொல்லித்தந்தவர் யாரென்று  தெரியவில்லை. சாதி வெறி மட்டுமல்ல இந்தியர்கள் இனவெறியிலும் சலித்தவர்கள் அல்ல என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர் வெட்கம் கெட்ட டெல்லி அதிகாரிகள். தென்னிந்தியர்களின் இயல்பான நிறமும் கூட கருப்புதான். அப்பொழுது இவர்களுடைய பார்வையில் தென்னிந்திய பெண்களின் நிலை என்ன?  ஒரு நாட்டின் தலை நகரத்தில் உள்ளவர்களுக்கே மனித உரிமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோம் மனிதனின் இயல்பு அவர்களின் நிரத்தையோ  சமூகத்தையோ சார்ந்தது அல்ல என்பதை..


வடக்கில் மட்டும்தான் இப்படி, நம்மூரில்  அனைத்தும் அருமை என்று நினைக்க வேண்டாம். சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நடைபெற்ற  சம்பவம். ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி அவளின் ஒழுக்கத்தை சந்தேகத்திற்கிடமாக்கி பிரச்சினையை முடித்தாயிற்று ( இதில் அப்பெண்ணின் ஒழுக்கத்தை குறித்து சொல்லப்பட்டவை அனைத்தும் பொய்யுரைகள் என்பது அவ்வழக்கை விசாரித்த பெண் போலிஸ் அதிகாரியின் வாக்குமூலம்). ஆனால் விஷயத்தை அப்படியே மூடி மறைத்தாயிற்று. 


இவர்களுக்கு ஒரு கேள்வி , ஒரு பெண் விலை மாதே ஆயினும் அவளின் அனுமதியின்றி அவளை தொடுவதற்க்கான உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு?  அனைத்து சமூக கேடுகளுக்கும் சீரழிவிற்க்கும் பழியாவது பெண் உடல் தானா? பெண் என்பவள் அத்தனை இலப்பமாக போய்விட்டாளா? அப்பெண்ணை விலை மாது என்று கூறி யாரென்று  தெரியாத அவளுடன் வல்லுறவு கொண்ட அந்த ஆண்களுக்கு என்ன பெயர்? வேற்று சமூகத்து ஆணை காதலித்த குற்றத்திற்காய் அவளை புணர்ந்த இந்த ஆண்களுக்கு என்ன பெயர்? இவர்களுக்கான தண்டனை என்ன? இங்கு ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் பெண்ணிற்கு மட்டும்தானா? ஆண்  அதற்க்கு கட்டுப்படமாட்டனா? எனில் அப்படியான ஆண்களை எதற்காக சமூகம் மதிக்க வேண்டும்? அவர்களுக்கு இந்த சமூகத்தில் எதற்கு ஒரு இடம்? 

இந்தியா பெண்களுக்கான தேசமா?


இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கேள்வி என்ற பெயரில் பெண்ணிய கவிதை ஒன்றை எழுதி இருந்தேன்... அந்த கவிதைக்கு இங்கே எதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முகநூலில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தேன்... நான் ஏதோ இல்லாத ஒன்றை கவிதையாய் கர்ப்பனையில் வடித்தது போல.

யாருக்காக யாரை நினைத்து ஏழுதினேனோ அந்தப் பெண் வர்க்கத்தை சார்ந்தவர்களிடமே எதிர்ப்பை சம்பாதித்தது அவர்களுக்கு என் எழுத்தின் உண்மையைப் புரிய வைக்க மிகப் பெரிய பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது... இதற்க்கும் அக்கவிதையின் மிக முக்கிய கருப்பொருள் வரதட்ச்சணைக் கொடுமையும் பெண்களின் அடிமை நிலையுமே ஆகும்.


இதை இப்பொழுது இங்கே பகிர காரணம் இணையத்தில் இன்று பார்த்த B.B.C ன் India a Dangerous Place to be a woman என்ற ஒரு மணி நேர டாகுமென்ட்ரி. இந்த படத்தைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவுகள் மீண்டெழுந்து வந்தன அதனால்தான்.. கீழே அதனுடைய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன் உங்கள் நேரத்தின் ஒரு மணித் துளியை நிச்சயம் நீங்கள் இதற்க்காக செலவு செய்யலாம் தவறொன்றும் இல்லை..

சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...




இன்னும் எத்தனை பேரை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் காவு  குடுக்க போகிறோம்.. இன்னும் எத்தனை பெரியார்கள் வேண்டும் நம்மை திருத்துவதற்கு.. மனம் துடிக்கிறது

மணிவண்ணன் என்றொரு மாமனிதர்

ஒரு திரை உலக பிரமுகரின் மறைவிற்கு மனம் மிகவும் அழுகிறதென்றால் அது நிச்சயமாக இவர்தான்... நான் அதிகம் நேசித்த மிக சிறந்த நடிகர்... காமெடியோ குணசித்திரமோ அனைத்திலும் முத்திரை பதிப்பவர்.... தமிழ் திரையுலகில் உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளித்த நல்ல மனிதர்... எந்த விதமான அரசியல் சமரசங்களுக்கும் கட்டுப் படாதவர்... இயக்குனர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், தமிழுணர்வாளர், நடிகர் என பன்முக முகங்களுக்குச் சொந்தகாரர்...