ஓநாயால் குதறப்பட்ட - அழகிய
சரீரமொன்றைக் கண்டேன்
ஒரு நாள் !
ஏராள குரல்கள் ஒலித்தன
வீழ்ந்து கிடந்த
சரீரத்தைச் சுற்றிலும்...
ஓநாய் குதறியதான் காரணம் என்ன?
விவாதித்தன குரல்கள்
தத்தம் பாணியில்
"உடை" என்றது ஒரு குரல்
"நேரம்" என்றது ஒரு குரல்
"அழகு" என்றது குரல்
"அலங்காரம்"என்றது ஒரு குரல்
இத்தனை குரல்களிடையே,
குதறிய "ஓநாயைப்" பற்றியும்
பேசியது ஒரு குரல்
பாவம் அது கூச்சல் குழப்பத்தில்
மறைந்தது காற்றுடன் கலந்து ...
"சரீரம் எத்தனை அடி
சரீரத்தின் உடை என்ன
சரீரத்தின் நிறம் என்ன"
ஆராய்ந்து ஆராய்ந்து - உலகிற்கு
உரைத்தபடி சில குரல்கள் ...
அனைவரையும் அடக்கி அசரீரி ஒலித்தது
"அடப் பிணந்தின்னிப் பேய்களே!
ஆராய்ந்தது போதும் சரீரத்தை
பிடியுங்கள் அந்த ஓநாயை
மற்ற சரீரங்களாயின் தப்பிக்கலாகட்டும்!"
இரத்தவெறியேறிய கண்களுடன்
கூட்டத்தைப் பார்த்து
குரூரமாய் சிரித்தது
மறைந்திருந்த ஓநாய்!
--பிரியா
இன்று உலக மகளிர் தினம்... இத்தினத்தில் அனைவருக்காகவும், எனக்காகவும்.....