நீலகண்டம் ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் நிறைய நிறைய துணைக்கதைகளைக் கொண்ட ஒற்றை நாவல். ஆனால் துணைக்கதைகள் அனைத்தும் நாவலுடனும், அதன் கதாபாத்திரங்களுடனும்
ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவை. தமிழில் இப்படியான ஒரு நாவலை வாசித்ததாக பெரிதாக நினைவில்லை. நாவலின் முதல் அத்தியாயமே விக்கிரமாதித்தனும் வேதாளமும் என்றிருப்பதால் நாவலுக்குள் நுழைவதற்கு முன்னமே நாம் நம்முடைய கடந்த கால பால்யத்தினுள் நுழைந்துவிடுகிறோம். அதுவும்
கூட காரணமாகத்தான் என்பது நாவலுக்குள் நாம் நுழைய நுழையத்தான் புரிகிறது.
நுகர்வுக் கலாச்சாரத்தில் வாந்துகொண்டிருக்கும்
நம்முடைய வாழ்வென்பது பெரும்பாலும் பணமென்ற ஒன்றையே சார்ந்திருக்கிறது. தங்குதடையில்லாத அதன் வரவு மட்டுமே நம் இன்பம் துன்பம் அனைத்தையும் தீர்மானிக்கிறது. எந்த ஒரு கணத்தில் அதன் வரவென்பது தடைபடுகிறதோ, அல்லது தடைபடப்போகிறதோ என்ற எண்ணமும், பயமும் தலை தூக்குகிறதோ அங்கே அக்கணத்தில் அனைத்தும் சூன்யமாகிறது. நம்முடன் இருப்பவர்களின் மீதும், அவர்கள் அன்பின் மீது கரிசனத்தின் மீதும் மனம் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறது. அவர்கள் எப்பொழுதும் போல இயல்பாக இருந்தாலும் நம்மால் அதை நம்ப முடிவதில்லை. ஏதோ ஒரு சந்தேகத்தை ஏதோ ஒரு குழப்பத்தை அது நம்முள் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் அதுதான் நீலகண்டத்தின் மையப்புள்ளியும் கூட. பிரச்சினைகள் ஏற்படுத்தும் குழப்பமும் அதன் தீர்வுகளும், மையக்கதையாக நகர்கிறது. அதன்
சம்பவங்களின் நீட்சி ஆங்காங்கே கிளைக்கதைகளாக முளைத்துக் கிடக்கிறது.
கதை நாயகியான வரு என்னும் சிறப்புக் குழந்தை கதாசிரியராகி நாவலுக்குள் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகள் அனைத்துமே அந்த சிறப்புக் குழந்தைகளின் மனதை,
அதன் ஏக்கங்களை, ஏமாற்றங்களை வாசிப்பருக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அப்படியானால் இது சிறப்புக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கான நாவலா என்றால் என் வரையில் நான் இல்லை என்பேன். ஆம் இது அவர்களைப் பெற்றவர்களுக்கானது அல்ல ஏனெனில் அவர்களுக்கு அந்தக் குழந்தைகளைக் குறித்துத் தெரியும். இது அக்குழந்தைகளைச் சுற்றி இருப்பவர்களுக்கானது. அக்குழந்தைகளின் மன நிலை, பெற்றவர்களின் சூழ்நிலை எதுவும் புரியாமல் போகிற போக்கில் கருத்துக்களையும், அறிவுரைகளையும் உதிர்த்துச் செல்பவர்களுக்கானது, அவர்களைக் குறித்தான புரிதல் சற்றேனும் இல்லாதவர்களுக்கானது. நாவலில் குறிப்பிடுவது போல “ தாரே ஜமீன் பர்” படத்தை மட்டும் பார்த்து (அதிலும்
அது அமீர்கான் படமென்பதால்) அதில் சொல்வதைக் கொண்டு மட்டுமே சிறப்புக் குழந்தைகளின் பெற்றவர்களிடத்தில் பெரிய அறிவாளி போலவும், அனுபவம் பெற்ற மருத்துவரைப் போலவும் நடப்பவர்களுக்கானது இந்த நாவல்.
சுனில் கிருஷ்ணன் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீருபித்திருக்கிறார். ரம்யாவின் கர்ப்பகாலத்தைக் குறித்தும் அதற்கு முன்பு உடல் எடையால் அவள் பட்ட அவஸ்தைகள் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்தெல்லாம் விவரிக்கும்போது மனம் தன்னிச்சையாக என் கடந்த காலத்தையும் அசைபோட்டது. அந்த எழுத்து குடுத்த அழுத்தம் இடையில் இரண்டு மூன்று நாட்களுக்கு நாவலை என்னை விட்டு விலக்கி வைத்ததும் அதன் பிறகு ஒரு சமாதானத்தை அடைந்து அதை தொடர்ச்சியாய் படித்ததும் தனிக்கதை. நான் மட்டுமல்ல இந்நாவலை வாசிக்கும் பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பகுதியாகவே இப்பகுதி அமையும். முன்னுரையில் எழுத்தாளர் இந்நாவலை எழுதும்போது அவரின் மனைவியும் கர்ப்பமாக இருந்ததைப் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேளை அதுவே அவரின் கர்ப்பகாலம் குறித்தான தேர்ந்த நடைக்கு ஒரு காரணமாய் அமைந்திருக்கக் கூடும்.
வருவின் எழுத்துக்களில் விரியும் அக்குழந்தையின் அக உலகம் அத்தனை அழகு. தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் கதா பாத்திரங்கள் எல்லாம் அவளின் கதைகளில் உயிர்பெற்று எழுந்து வருவின் அக உலகின் அழகியலை வாசிப்பவருக்கு வடிவாய் சொல்லிச் செல்கின்றன. பொது வாழ்க்கையோடு ஒட்டாமல், உள்ளதை உள்ளபடி பளிச்சென்று பேசும் ஹரியின் கதாபாத்திரம் அழகு. வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளாமால் மிக இயல்பாய் எந்த விதமான அழுத்தங்களுக்கும் உட்படாமல் வாழ்பவர்கள் கடைசி வரையில் அப்படியே இருந்து முன்னோர்கள் முட்டாள்களில்லை என்று சொல்லிக்கொண்டே மாண்டுபோகிறார்கள் ஆனால் அழுத்தங்களுக்கு உட்படுபவர்களே இயல்பிலிருந்து மீறி தனக்கான உலகத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்றொரு கருத்து எனக்கு உண்டு. அது ஹரியின் கதாபாத்திர வடிவமைப்பில் உண்மை எனும்படி ஒத்துப் போகிறது. அவன் எதற்கும் யாருக்கும் பயப்படாதவனாய், சுயம்புவாய் எழுந்து நிற்கிறான். இருப்பினும் இதைப் படிக்கையில் இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு ஹரியைப் போன்றவர்களின் வாழ்வின் இறுதியென்பதும் வந்து போன தடமென்பதும் எதுவாக இருக்கும்?
நந்த குமார்களை நிச்சயம் நாம் நிறைய கடந்திருப்போம். அவர்கள் சில நேரம் சமூகத்தின் சாபம் எனலாம். அந்த
சாபத்திற்கும் இச்சமூகமே காரணமென்பதும் வேறு கதை. ஆனால் ஹரி போன்றவர்கள் அறிதானவர்கள். நம்மைக் குறித்தான நம் கற்பனைகள் மேலெழும்போதெல்லாம் அவற்றை உடைத்து நாம் யார் என்பதை நமக்கே காட்டுபவர்கள். அவர்கள்தான் நம் அனைவரின் நிறைவேறாத தேவையும் கூட.
--பிரியா
I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News
I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News