பக்கங்கள்

கடல் மரங்கள் - புத்தக அறிமுகம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

நீண்ட நாட்களுக்குப் பிறகான இடுகையாக புத்தக அறிமுகம் ஒன்றை இடலாம் என்றிருக்கிறேன். இந்த அமீரக வாழ்க்கையில் மிகச் சில நாட்களாகக்  கிடைத்த அமீரக தமிழ் நண்பர்களின் அறிமுகத்தினால் தமிழ் இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதன் பலனாக மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அவர்களின்  புத்தகம்  ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைத்தது.
புத்தகத்தின் பெயர் கடல் மரங்கள். மூல புத்தகம் எழுத்தாளர் வெள்ளியோடன் அவர்களால் எழுதப்பட்டு மலையாளத்தில் வெளிவந்தது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு ஆர். முத்துமணி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு பொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் கடல் மரங்கள் என்ற பெயரிலேயே வந்துள்ளது. 
வெள்ளியோடன் 
கடல் மரங்கள் சிறுகதைத் தொகுப்பானது 91 பக்கங்கள் கொண்ட  பத்து சிறுகதைகளின் தொகுப்பு. புத்தகம் அளவில் மிகச்சிறியது தான் ஆனால் என் பார்வையில் இது ஒரு காலத்தின் பதிவேடு. சமகாலத்தைப் பதிவு செய்யும் எழுத்துக்கள் தற்போது தமிழில் இல்லை என்பது குறித்து சமீபத்தில் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்தக் குறையை இந்த புத்தகம் சற்றேனும் நிறைவு செய்துள்ளது என்று சொல்லலாம். மூலம் தமிழாக இல்லை என்றாலும் அதைத் தமிழ் படுத்த வேண்டும் என்ற மொழி  பெயர்ப்பாளரின் எண்ணத்திற்கு முதலில் என்னுடைய பாராட்டுகள். பத்துக் கதைகளில் பல சமீப காலங்களில் உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் பதிவாகவே அமைந்துள்ளது. ஈழப்போர் தொடங்கி சிரியப் போர், வியட்நாமின் பகுதிகளில் சீன ஆதிக்கம் அது தொட்டு சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தின் பிரச்சினைகள், சந்நியாசம் என்ற பெயரில் சிறு குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அந்த விஷயத்தில் உலகமே கொண்டாடிய, விடுதலைக்காக குரல் கொடுத்த ஆங்க் சான் சூயியின் மொளனம் என்று நிறைய விடையங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார். 

ஆர்.முத்துமணி 
எழுத்தாளர் உலகின் பிரச்சினைகளை மட்டுமே கருவாகக் கொண்டு மொத்த புத்தகத்தையும் எழுதியிருக்கிறாரா என்றால் இல்லை என்பதே பதில். அவரின் கதைகள் அதைத் தாண்டி மனிதர்களின் உணர்வுகளுடனும் உறவு கொண்டிருக்கின்றன. இது நாள் வரை நான் கேள்வியேபட்டிறாத முத்அஃ என்னும் வார்த்தையை முதன் முதலாக இந்த நூலின் வாயிலாகத்தான் கேள்விப்பட்டேன். முத்அஃ இந்த வார்த்தை பார்ப்பதற்கு வெறுமனே நாலு எழுத்து வார்த்தையாகப் தெரியலாம். ஆனால் இதன் அர்த்தம் என்ன என்று இவரின் சிறுகதையைத் தாண்டி இணையத்திலும் தேடும்போதுதான் அதன் ஆழமும், வலியும் வெளிப்படுகிறது. இதுவரை இஸ்லாத்தில் இருக்கும் நிறைய வழக்கங்கள் குறித்து நாம் ஊடகங்கள், சினிமா, நட்பு வட்டம் என்று பல வழிகளில் அறிந்திருக்கலாம் ஆனால் இது போன்ற ஒன்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். சில காலங்கள் முன்பு பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இளம் பெண்கள் காசிற்காக திருமணம் என்ற பெயரில் வளைகுடாவைச் சேர்ந்த அரேபியர்களுக்கு விற்கப் படுகிறார்கள் என்ற செய்தியை வாசிக்க நேர்ந்தது. மேலோட்டமாக அதைப் படிக்கும் போது இந்தியர்களின் ஏழ்மை நிலை இத்தனை தூரத்திற்கு கொண்டு சென்று விட்டதே என்ற கொதிப்பு மட்டும்தான் இருந்தது. ஆனால் இந்த முத்அஃ முறையைப் பற்றிப் படிக்கும் போதுதான் இது இந்தியர்களுக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல என்பது தெளிவாகியது. 

முத்அஃ நிக்காஹ்வின் மற்றொரு வடிவம். முகமது நபிகளால் பன்னெடும் காலத்திற்கு முன்பே தடை செய்யப்பட்ட ஆனால் ஷியா பிரிவில் இன்னமும் இருக்கும் தொடரும் வழக்கம் இது. இதன் வாழ் நாள் என்பது அரை மணி நேரம் முதல் 60 ஆண்டுகள் வரை மணமகன் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் தொகைக்கு ஏற்ப அமையும். இந்த முறையின் மூலம் பிறக்கும் குழந்தைகள் அவர்களின் தந்தை என்ற உரிமைக்கோ அல்லது அவரின் மூலம் வேறு எந்த உரிமைக்கோ எவ்வகையிலும் உரிமை கோர முடியாது என்பதே இதன் கோர வடிவம். எத்தனை ஆண்டுகள் அந்த தாயும் தகப்பனும் சேர்ந்திருந்தாலும் தகப்பனிடத்தில் குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அதே போல அவர்களின் பிரிவின் பின்பு மனைவிக்கு கணவனிடத்தில் எந்த உரிமையும் இல்லை. அவர்களின் உறவு என்பது முத்அஃ எத்தனை காலத்திற்கோ அத்தனை காலத்திற்குத்தான். எத்தனை பெரிய கொடுமை இது. 


இந்த உணர்வை மிகச் சரியாக தன்னுடைய எழுத்தின் மூலம் வெள்ளியோடன் வாசகனிடத்தில் கடத்துகிறார். என்னைப் பொறுத்த வரை ஒரு எழுத்தும் எழுத்தாளனும் வெற்றி பெருவதென்பது இந்த இடத்தில்தான், அதாவது உணர்வுகள் சரியாக வாசகனுக்குக் கடத்தப்படும் இடத்தில்தான். இந்த கதையின் இறுதிப் பகுதியைப் படித்து முடித்த போது என்னால் அந்த புத்தகத்தை சற்று நேரத்திற்கெல்லாம் தொடர முடியவில்லை. மூடி வைத்துவிட்டேன். புத்தகத்தின் இரண்டாவது கதை முத்அஃ. இந்த ஒரு கதையில் மட்டுமல்ல புத்தகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது உணர்வுகளின் கட்த்தலாய். வெள்ளியோடன் நிச்சயமாய் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி. அடுத்ததாக களிமண் பட்டாம்பூச்சிகள். கதையின் இறுதியில் அனந்தன் வாத்தியாரின் உடம்பில் ஏற்பட்ட நடுக்கம் அதைப்படிக்கும் நமக்கும் ஏற்படுகிறது. கழுகு பட்டங்கள் சிறுகதையைப் படிக்கையில் தோன்றியது வயதாகி சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற பின்னும் அஜ்மன் கடற்கரையைத் தேடும் அந்த நாயகனைப் போல இந்த அமீரகத்தின் எத்தனை நினைவுகள் நம்மையும் துரத்தப் போகிறதோ என்று. அடுத்ததாய் சின்ரெல்லா மற்றும் ஆத்மாவிற்கு ஒரு ஆகாயப் பயணம் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்வைப் பிரதிபலிக்கும் இரட்டைக் கதைகள். இரண்டுமே ஏமாற்றம் ஏமாற்றம் இதை மட்டுமே சந்திக்கும் இரண்டு நாயகர்களின் கதை. இவ்வாறு தொகுப்பு முழுவதும் வேறுபட்ட உணர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. 

மொத்த புத்தகமும் ஆகச் சிறந்த எழுத்தின் வெளிப்பாடாய் இருக்க அதற்கான நன்மதிப்பு என்பது மூல ஆசிரியர் வெள்ளியோடனுக்கு மற்றுமின்றி மொழிபெயர்ப்புச் செய்த ஆர். முத்துமணி அவர்களுக்கும்  சேர வேண்டுமென்பது என்னுடைய கருத்து. என்னதான் மூலத்தில் எழுத்தாளர் உணர்வுகளைச் சரியாகக் கடத்தியிருந்தாலும் மொழிபெயர்ப்பிலும் அதன் தரமும், சுவையும் கொஞ்சமும் குன்றாமல் செய்திருப்பது முத்துமணி அவர்களின் திறமை. ஏனெனில் நிறைய மொழி பெயர்ப்புகளில் மூல புத்தகம் எத்தனை சிறப்பாக இருந்தாலும் மொழிபெயர்ப்பாளர் அவரது வேலையைச் சிறப்பாக இல்லாமல் தொய்வாகச் செய்தால் மொழி பெயர்க்கப்பட்டதற்கான தேவையை அது நிறைவேற்றாமல் விட்டதாய் இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் அந்தக் குறை இல்லை. எழுத்தாளர் இது போல சிறந்த புத்தகங்கள் பலவற்றைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் வாழ்த்தும்.

அனைவருக்கும் நன்றியும், அன்பும் 

பிரியா .

குறிப்பு:

புத்தகம் வேண்டுவோர் கீழ்கண்ட  எண்ணில் அழைத்துப்  பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இது பதிப்பாளரின் எண். 

குணா : +91-70104 84465

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக