பக்கங்கள்

நான் ஒருநாள்....நான் ஒருநாள்,

      மிதந்து செல்லும் 
      வானத்து மேகங்களின் 
      பஞ்சுக் கூட்டங்களில் 
      ஒற்றைப் பொதியாய்
      கலந்திருக்கக் கூடும் 


நான் ஒருநாள்,

       பறந்து செல்லும்
       பட்டாம் பூச்சியின்
       சிறகினில் மிளிரும்
       வர்ணங்களில் ஒன்றாய்
       மாறியிருக்க கூடும்


நான் ஒருநாள்,

        ஆர்ப்பரிக்கும் கடலின்
        அலைகளில் எழும்பும்
        சங்கீத ஜாலங்களின்
        சக்தியுற்ற ஒலிகளில்
        சங்கமித்திருக்க கூடும்


நான் ஒருநாள்,

       மரங்கொத்திப் பறவை
       கொத்திவிட்டு மிச்சம்வைத்த
       எச்சங்களின் தொகுப்பாய்
       மரங்களின் வழியே
       மறைந்திருக்க கூடும்


நான் ஒருநாள்,

       கரைகள் தொட்ட
       நதிகளின் ஓடே
       துருத்திச் செல்லும்
       படகின் வனப்பில்
       ஒளிந்திருக்க கூடும்


நான் ஒருநாள்,

       நில்லாமல் ஜொலிக்கின்ற
       நட்சத்திர கூட்டத்தின்
       ஒற்றை பவனிவழி
       பீய்ச்சிடும் ஒளிக்கற்றைகளில்
       வியாபித்திருக்கக் கூடும்


நான் ஒருநாள்,

       நிஜங்களற்ற நிழலின்
       தடங்கள் விட்ட
       ஒற்றைப் பிரதிநிதியாய்
       காத்திருக்கும் நினைவுகளுடன்
       கலந்திருக்கக் கூடும்


அதுவரையில்,

       காலத்தின் கணக்கில்
       கரைகின்ற துளியாய்
       நான் நானாகவே
       உங்களுடன்...


---பிரியா

10 கருத்துகள்:

 1. அருமை
  ஆழமாக யோசிக்கிறீரீர்கள்
  எளிமையாக அற்புதமாகப் பதிவு செய்கிறீர்கள்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமான சிந்தனை வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமை! அழகிய அற்புதமான சிந்தனை!
  மிகமிக ரசித்தேன் தோழி! வாழ்த்துக்கள்!..
  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு