பக்கங்கள்

மழைத் தோழி (ஒரு தொடர்)

மழை - ஒரு வார்த்தையாகப் படிக்கும் போது கூட அது வெறும் வார்த்தையாக இல்லாமல் பல்வேறுபட்ட சிந்தனைகளையும், நியாபகங்களையும் , உருவகங்களையும் தூண்டி செல்லும் தன்மை வாய்ந்த ஒரு இயற்கைப்  பேரதிசயம். மலை, நிலம்,காற்று என இயற்கையின் அத்தனை படைப்புகளுமே அதிசயந்தான். ஆனால், அதில் மழை ஒரு தனி ரகம்.

என்னைப் போன்ற பலரது  வாழ்கைப்  பயணத்தில்  மழையென்பது வெறும் மழையாக மட்டுமே இல்லாமல் வேறொன்றாகவும் மாறி இருக்கும். சிறு வயதில் மழை நீரில்  படகு விடுவதாகட்டும், சுற்றி சுற்றி ஆட்டம் போடுவதாகட்டும், அம்மாவின் திட்டுக்களுடன் சேர்ந்து மழையுடனும் நனைவதாகட்டும் அனைத்துமே பேரானந்தம் கொடுக்கும் செயல்கள்.


அவ்வகையான வெளிப்படையான பேருவகை என்பது பதின்ம வயதுகளின் பின் மெல்ல மெல்ல மாறத் தொடங்கி உணர்வுகளுடன் கூடிய, மனதினுள் தொட்டு விட்டு செல்லும் நினைவுகளை ஆர்ப்பரிக்கும் வேறொன்றாக, பேரின்பமாக மாறிப் போகிறது.இதன் வழி  என் மனதின் நெருங்கிய தோழியாக மாறிவிட்ட மழை குறித்த என் அனுபவங்களும் புரிதல்களும் வித்தியாசமானவை.

இயல்பாகவே வருடத்தில் மழை நாட்களின் எண்ணிக்கையை சற்றே அதிகம் கொண்டிருக்கும் பொள்ளாச்சி எனது சொந்த ஊர் என்பதால், மழைக்கும் எனக்குமான கூடல் ஊடல் பொழுதுகளும் அதிகம்தான்.அடிக்கடி மழையைப் பார்த்து பழகி வளர்ந்த கண்கள் என்னுடையவை. கண்களைத் தாண்டி மழை என் மனதுடன் உறவாடிய தருணங்களும் மிகவும் அதிகம். அடிக்கடி தென்பட்டவள் சில காலம் தென்படாமலே போக அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அதிகமே. வாழ்வின் இரு பகுதிகளையும் எனக்கு காட்டிச்  சென்றவள் இந்த "மழைத் தோழி".

"மழைத் தோழி" உச்சரிக்கையிலேயே ஒரு போதை தரும் பேரின்பம். ஆம் அவள் நிட்சயம் என் தோழிதான் என் உயிர்த் தோழி.....


(மழை இன்னும் வரும்.....)


-பிரியா 

1 கருத்து: