பக்கங்கள்

கள்ள மழை




ஆயிரமாயிரம் துளிகளில்
இரவினைக் கிழித்து
பூமியில் வந்திறங்கியது
மழையின் பட்டாளம்

துளியெல்லாம் ஒன்றாகி
பெருவெள்ளமென உருமாறி
துள்ளிக் குதிக்குது
மண்ணின் வீதியெங்கும்

பொழுது புலரும்முன்
அனைத்தையும் முடித்து
சடுதியில் திரும்புது
வந்த இடம்

இரவின் இருளில்
கன்னமிட்ட மழை
விட்டுச் சென்ற
களவுத் தடமாய்

விடிந்த பொழுதினில்
புல்லின் நுனியில்
மெல்லச் சிரித்தது
ஒற்றை மழைத்துளி

இரவுக் கள்ளனாய்
வருவதை சொல்லாமல்
வந்தபின் உரைத்து
இரவுடன் கரைந்தது

கள்ள மழை...


-- பிரியா

12 கருத்துகள்:

  1. கள்ள மழை மின்னலின்றி
    மெள்ள வரும் போது
    துள்ளல் கொளும் புல்லினமும்
    வெள்ளமதில் நனைந்தே
    கிள்ளை மொழி கூறும்
    பிள்ளைதமிழ் போலே
    நள்ளிரவு விடியத்
    தள்ளி நின்று சிரிக்கும்..!

    அழகிய கவிதை
    கள்ள மழை அழகு
    ப்ரியா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அண்ணா... என் கவிதையை காட்டிலும் உங்கள் கமெண்ட் அழகு... நன்றி அண்ணா :)

      நீக்கு
  2. உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்ள மழை கவித்துவம் அழகான அழகு வாழ்த்துக்கள் சகோதரி கவிநாகா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவி நாகா சார்... வலைபூவிற்கு தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

      நீக்கு
  3. இரவில் மண் நனைத்து
    விடியலில் வந்த சுவடு கூட இல்லாது
    காணாமல் போகும் மழை !!!

    கவிதை மிக அருமை தோழி !!!

    பதிலளிநீக்கு
  4. கள்ள மழை... திருட்டுத்தனமாய் இரவில் பெய்து இரவோடு மறைந்த மழையை கள்வனாய் உவகைப்படுத்தி எழுதியிருப்பது வித்தியாசமான சிறப்பு...

    அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. சாரலில் நனைவதில் சந்தோசம் !! எனக்கு தெரிந்து எங்கள் ஊர்ப்பக்கம் சூரியனும் இருந்து மழையும் இருந்தால் கள்ள மழை என்று சொல்வார்கள் ... என்னடா இது வெயிலடித்துக்கொண்டே மழை பெய்யுது என்று! இரவு மழையை கள்வனாக்கியுள்ள கற்பனைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விஜயன் சார்... நன்றி தங்கள் முதல் வருகைக்கு தொடர்ந்து வாருங்கள்.. ஒ கள்ள மழைக்கு அப்படி ஒரு அர்த்தம் உண்டா இப்பொழுது தான் தெரிகிறேன்...

      நீக்கு