பக்கங்கள்

இளமனசு


எத்துனைதான் முயன்றும்
எட்டியே நிற்கிறது
உறக்கம் இப்போ

குறுக்கும் நெடுக்குமாய்
ஓடி பயங்காட்டுது
பூச்சியும் பூரானும்

பக்கத் துணையாய்
பாட்டி படுத்திருந்தும்
பயம்மட்டும் விடாமல்

சின்ன மனசில்
யோசனைகள் பல
அலையாய் அடித்தது

பள்ளிக்கூடம் போகவேணும்
வீட்டுப்பாடம் எழுதவேணும்
பரீட்சையும் நெருங்குது

புத்தகத்தைத் தொட்டே
பத்துநாள் ஆயிடுச்சு
பதைக்குது நினைக்கையிலே

கையிலே பிரம்புடன்
கணக்கு வாத்தியார்
கண்முன் திரிகிறார்

போடையில பாத்தாலே
ஒண்ணுமே புரியாது
வெளங்காத கணக்கு

எப்படித்தான் போடுவனோ
இத்தனைநாள் கணக்கும்
ஒன்னாக சேர்த்து

புளியந் தோப்பிலே
ஆடிய ஆட்டம்
பாதியில நிக்கிது

சோடிகள கூட
பாத்து நாளாச்சு
ஆடுறது எப்போ

என்னதான் செஞ்சனோ
எனக்கும் தெரியல
இப்ப வரைக்கும்

புதுக்குச்சு கட்டி
அடச்சு வெச்சுட்டாங்க
வாரம் ரெண்டாச்சு

கேட்டதெலாம் கிடைக்குது
வயிறும் நிறையுது
குறைச்சலே இல்லாம

கூட்டாளிகள பாக்காம
கூட்டஞ்சோறு ஆக்காம
மனசுதான் மருகுது

ஏந்தான் சமஞ்சனோ
எனக்கும் தெரியல
ஏக்கத்தில் இளமனசு--பிரியா

4 கருத்துகள்:

 1. இறுதி வரியினைப் படித்தததும்
  சட்டெனா மகிழ்ந்து மீண்டும்
  முதலில் இருந்து படிக்கத் துவங்கினேன்
  மனம் தொட்ட அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  சொல்சரிபார்ப்பை நீக்க முயலவும்
  பின்னூட்டமிட சிரமமாயிருக்கிறது

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி... சொல்சரிபார்ப்பை நீக்கி விட்டேன், தங்கள் கருத்துக்கு நன்றி... :)

  பதிலளிநீக்கு
 3. ஏந்தான் சமஞ்சனோ
  எனக்கும் தெரியல
  ஏக்கத்தில் இளமனசு///பருவம் என்பது இதுதான் .இனிமேல் எல்லாமே விரும்பியபடி நடக்கும்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. கடக்கவேண்டிய சில பாதைகள் கொடுக்கும் சிரமங்களின் வெளிப்பாடே இது. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு... :)

  பதிலளிநீக்கு