பக்கங்கள்

பழைய தோழி


நேற்றைய பேருந்து பயணத்தில்
எதிர்பாராமல் பழைய தோழி

பள்ளியிலே படித்தோம் இணைந்து
இப்போதோ இடைவெளி பெரியதாய்

பட்டம்பெற நானோ வெளியில்
பள்ளியுடன் அவளோ வீட்டில்

காலத்தின் மாற்றங்கள் அப்படியே
தோழியின் வார்த்தையிலும் வடிவிலும்

உள்ளம் மட்டும் அப்படியே
களங்கமற்ற வெண்மையாய்

சொல்லித் தெரிந்து கொண்டேன்
அவளின் திருமணமும் குழந்தைகளும்

சொல்லாமல் தெரிந்து கொண்டேன்
கலைந்துவிட்ட அவள் கனவுகள்

பயணம் முடிந்து பிரிந்தாயிற்று
மனம் மட்டும் அங்கேயே

பள்ளியில் படிக்கும் காலத்தில்
இரட்டைபிறவிகள் அவளும் புத்தகங்களும்

எதை பிடித்திருப்பாள் இப்போது
உண்மையில் புரியவில்லை எனக்கு

கேள்விகள் மட்டும் ஒலிக்கின்றன
இடைவிடாது எண்ண அலையில்

தெரிந்ததாய் இவள் - இதுபோல்
தெரியாமல் எத்தனை பேரோ

அறிந்து கொண்டவர் யார்
கணக்கில் வராத புள்ளிகளை

விலைமதிப்பற்றதாய் போகின்றன
சில கனவுகள் இங்கே - ஏனோ?


---பிரியா

12 கருத்துகள்:

  1. மனம் தொட்ட அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு மிக்க நன்றி.. நிச்சயமாய் தொடர்கிறேன் :)

      நீக்கு
  2. தெரிந்ததாய் இவள் - இதுபோல்
    தெரியாமல் எத்தனை பேரோ


    உண்மைதான் சகோ....

    காலமாற்றத்தில் கரைகின்றன
    பலரது கனவுகளும் ,உறவின் இடைவெளிகளும்

    அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. விலைமதிப்பற்றதாய் போகின்றன
    சில கனவுகள் //உண்மைதானம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வலிகளும் வேதனைகளும் வெளியே காட்டபடுவதே இல்லை அதன் வெளிப்பாடே இவ்வரிகள். நன்றி உங்கள் கருத்திற்கு :)

      நீக்கு
  4. // சொல்லித் தெரிந்து கொண்டேன்
    அவளின் திருமணமும் குழந்தைகளும்

    சொல்லாமல் தெரிந்து கொண்டேன்
    கலைந்துவிட்ட அவள் கனவுகள்

    பள்ளியில் படிக்கும் காலத்தில்
    இரட்டைபிறவிகள் அவளும் புத்தகங்களும் //


    இந்த வரிகளை ரசித்தேன் அருமை ப்ரியா..

    பதிலளிநீக்கு
  5. சொல்லாமல் தெரிந்து கொண்டேன் கலைந்துவிட்ட அவள் கனவுகளை! - அருமையான வரிகள்! நிறையப் பேருக்கு இதுதான் நேர்கிறது. தங்களின் கனவுகளை விட்டுக் கொடுத்து/தொலைத்துத்தான் குடும்ப வாழ்க்கையில் இயந்திரங்களாகி்ப் போகிறார்கள். இதை மாற்றுவதற்கான சக்தியும் தங்களிடமே உள்ளது என்பதை உணர்வதில்லை. கனவு மெய்ப்பட வேண்டும்னு ஒரு அறிஞன் சொன்னது போல விலைமதிப்பற்ற அதுபோன்ற பல கனவுகள் நிச்சயம் கலைந்துவிடக் கூடாதுன்றது என் ஆசைங்க ப்ரி்யா! சுயம் தொலைக்காம குடும்பத்துல இருக்க முடியாதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி.. :)பெண்களை பெண்களாக தன்னை போலவே ஒரு மனுஷியாக பார்க்கும் எண்ணங்கள் வளராத வரையிலும், பெண்களுக்கான சுயங்கள் சொல்லிகொடுத்து வளர்தப்படாத வரையிலும், சுயத்தை இழக்காத ஒரு குடும்ப வாழ்வு கனவாகவே அமையும். பெண்களும் ஆண்களும் இயந்து செயல்பட வேண்டிய விடயமிது. முற்போக்கு பேசும் பெண்களை வெளியில் ஆதரிக்கும் பல ஆண்கள் ஏன் பெண்களே கூட அதே பெண் தன வீட்டை சேர்ந்தவளாய் இருக்கையில் அதை எதிர்க்கவே செய்கிறார்கள். பல நூற்றண்டுகாலமான கட்டமைப்பினாலும் அடிமை முறையினாலும் பெண்கள் தங்களை அடிமைகளாகவும் நினைக்க தொடங்கியதன் விளைவு இது. ஆனால் விரைவில் மாற்றங்கள் வரும், அதை அவரவர் வீட்டிலிருந்தே அனைவரும் தொடங்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.

      நீக்கு