பக்கங்கள்

தேநீரின் கதையிது



இளம் மாலையொன்றில்
நினைவுகளில் மூழ்கியபடி
தேநீரில் இலயித்திருந்தேன்
தன்னிலை மறந்து

குதித்தது தேநீர்
கோப்பையிலிருந்து
தன் கதையினைக்கூற
உயிர் பெற்றதாய்

சோகக் கதையினை
சொல்லத் தொடங்கியது
சோம்பிய குரலில்
சுவைகொண்ட தேநீர்

அறிவீரோ மக்களே
அறிவீரோ மக்களே
எம்மக்கள் மாண்டகதை
தேநீரும் பிறந்த கதை




அன்றொரு நாள்
வெள்ளையன் ஆட்சியில்
ஆடியது பஞ்சம்
கோரதாண்டவம் தன்னை

செய்வதேதென்று அறியாது
திகைத்திட்ட மக்கள்
படைபடையாய்த் திரண்டனர்
பச்சைமலையினை நோக்கி

மலைகளின் வனப்பினிலே
தேயிலைத் தோட்டங்களிலே
பிழைப்பவர் ஆயிரம்
வனப்போடு என்றெண்ணி

ஊரினை விட்டு
உறவினை விட்டு
உணவினைத் தேடி
சென்றவர் ஆயிரம்

நம்பி வந்தவன்
நயவஞ்சகன் ஆனகதை
பின்னரே தெரிய
திகைத்தனர் மக்கள்

பணத்தினைக் கொடுத்து
பிடித்தவன் பிடியில்
ஆயினர் மக்கள்
ஆண்டான் அடிமைகளாய்

பஞ்சத்தின் பிடியில்
தப்பிக்க நினைத்து
மரணப் பிசாசின்
மடியினில் விழுந்தனர்

செங்குருதியில் ஓடிய
ஆறுகளால்
நனைத்து நின்றன
தேயிலைச் செடிகள்

தேயிலைத் தோட்டத்து
கொழுந்து செடிகள்
செழித்து வளர
நடந்த முயற்ச்சியில்

தண்ணீரும் விட்டு
கண்ணீரும் விட்டு
சேர்த்தே விட்டனர்
செங்குருதியும் கொஞ்சம்

பிணங்களின் மீது
முளைத்திட்ட செடிகள்
கண்ணீர் வாழ்வின்
அபத்த சான்றுகள்

இன்றேனும் தெரிந்ததா
தேநீரின் நிறமிது
எங்கிருந்து வந்ததென்று?"
முடித்தது கேள்வியுடன்

இதுநாள் வரையிலும்
மறந்தும் மறைத்தும்
இருந்திட்ட கதையொன்று
உயிர்த்தது கண்முன்

ருசித்திட்ட தேநீர்
கசப்பாய் போக
கணத்தது கோப்பை
என்றுமில்லாமல் இன்று

-- பிரியா


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வலியினை மட்டுமே கொண்ட வாழ்வின் பதிவை கண்டதால் இருக்கலாம்... நன்றி குமார் சார்

      நீக்கு
  2. வணக்கம்

    கவிதையின் வரிகள் சிறப்பு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ம்ம்....தேயிலைத்தோட்டம்....ஒவ்வொரு செடியும் கல்லறைத்தோட்டம்.

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான்... மனம் கனக்கச் செய்யும் கவிதை...

    பதிலளிநீக்கு
  5. தேயிலையின் கதை வருத்தம் வரவழைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தங்களை மட்டுமே கொண்ட கதை அல்லவா அதனால் தான்..

      நீக்கு
  6. Yes...! Ungal varigalin veeriyam padippavarukkum manathil raththam vara vaithu vidugirathu Priya! Thamizhargal seitha thiyagangal than ethanai? ethanai? Paradesi padam partha pinnar tea kudikka pidikkalai... ippo ungal kavithaiyum manathil Aani Arainthu Vittathu! (Sorry fot the Taminglish)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் பரதெசியயை காட்டிலும் வீரியம் மிக்க எரியும் பனிக்காடு (Red Tea) நாவலைப் படித்ததால் தோன்றிய வரிகள் இவை.. அந்த நூலைப் படித்த பிறகு நான் மிகவும் ரசித்த எங்கள் பகுதியில் இருக்கும் வால்பாறை தேயிலைக் காடுகளை இப்பொழுது கொஞ்சமும் ரசிக்க முடிவதில்லை... தேயிலைச் செடிகள் ஒவ்வொன்றும் தங்கள் வாழ்வைத் தொலைத்த ஒவ்வொரு மனிதராக மாறி நிற்கிறது... :(((((

      நீக்கு
  7. நெகிழவைத்த கவிவரிகள்!

    இப்படி எத்தனை எத்தனையோ...
    வலிபோக்கும் தேநீரில் எத்தனை உதிரங்கள்... உடலங்கள்....:(

    ஜீரணிக்காது இனி...எனக்கு...

    பதிலளிநீக்கு
  8. சத்திய கவிதை
    சற்றிற்று
    சகலதையும்.

    அருமை தோழி.

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை.....! ரசித்தேன்.....! அழகாய் அத்தனையும் எடுத்து வைத்த விதம் நன்றாக இருந்தது, நெஞ்சையும் உருக்கியது, தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு