பக்கங்கள்

சிதறல் - 14

மெல்ல
-----------
பெருவெள்ளமென
இத்தனை வேகமெதற்க்கு
உன்னை முழுவதுமாய்
இரசித்திட வேண்டும்....
மெல்லவே  நடந்துவா!
மழை மகளே


வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்

வெற்று அறிவிப்புகள்
ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன
எங்கேனும் வெள்ளம் பாதித்த
எங்கேனும் கட்டிடம் இடிந்த
எங்கேனும் தீ பிடித்த
ஒவ்வொரு காலையிலும்

நான் இதுவே

எனக்கான காற்று 
எனக்கான மழை
எனக்கான நிலம்
எனக்கான வாழ்க்கை 
எனக்கான என்னுடையவைகள் 
இவைகளை மட்டுமே - நான் 
எனதுடைமை என்கிறேன்

நடந்தேறா முயற்சி

சிறிது நாட்களாக
சில நினைவுகளை
அழிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டுள்ளேன்
தீவிரமாக

ஒரு கரும்பலகையை
சுத்தம் செய்வதுபோல் - அது
அத்தனை சுலபமாய்
இருப்பதில்லை

பாத்திரத்தில் வடித்த
எழுத்துக்களைப் போல் -
அவைகளின் ஆழம்
கொஞ்சம் அதிகம்

நீக்க நினைக்கையில்
நிச்சயம் எச்சங்களை
விட்டே செல்லும்
கீறல்களாக

இருப்பினும் ஏதேனும்
ஒரு வகையில் அத்தனையும்
அழித்தொழிக்க முயல்கிறேன்

சேதாரங்கள் மட்டும்
சற்றே குறைவாக
இருக்கும்படி




--பிரியா

சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150

மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - பெண்கள் பாதுகாப்புக்காக 150 கோடியும்  சர்தார் பட்டேலின் சிலையை குஜராத்தில் நிறுவ 200 கோடியும் ஒதுக்கீடு


வறுமை எழுத்தறிவின்மை சுகாதாரம் போன்ற ராட்சதப் பிரச்சினைகள் இன்னும் நீங்கப்  பெறாத சுதந்திர இந்தியாவில், இவை அனைத்தையும் விட தற்பெருமைக்காக 2500 கோடி ரூபாய் செலவு செய்து  கட்டப்படும் ஒரு சிலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் சுலபமாய் 200 கோடிரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் அதுவே இச்சமூகத்தின் சரி பாதியாய் நித்தம் நித்தம் ஏதேனும் ஒரு வகைப் பிரச்சினையில் ஆட்பட்டு வாழும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு இவர்களால் ஒதுக்க முடிந்தது வெறும் 150 கோடி மட்டுமே. பாவம் இவர்களின் வறுமை கூட பாரபட்சமானது போல. 

இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது இந்திய அரசு?.  பெண்களின் பாதுகாப்பு என்பது இந்த அரசாங்கத்திற்க்கு அத்தனை பெரிய விசயமாக படவில்லையா? இல்லை இந்த இந்திய சமூகத்தில் பெண்கள் அத்தனை அதிக பாதுகாப்பாக வாழ்கிறார்களா? எப்பொழுதும் தொலை நோக்கிகளை கையில் வைத்துக் கொண்டு கனவுலகில் வாழும் இந்த அரசாங்கத்திற்கு நிஜம் அத்தனை சீக்கிரம் புரியாதுதான்.  ஆனால் என்ன செய்ய எங்கள் கைகளில் தொலை நோக்கிகளும் இல்லை,  இவர்களைக் குறித்தான கனவுகளும் இல்லை, எங்கள் வெற்று கண்களுக்கு நிகழ்காலம் அத்தனை அப்பட்டமாய் தெரிகிறதே.



தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் தான் அதில்  நிச்சயம் மாற்றுக் கருத்தென்பதே கிடையாதுதான். ஆயினும் போராடி வாழ்ந்து மறைந்த தேசத்தலைவர்களுக்கு  ஆடம்பர சிலை அமைப்பதைக் காட்டிலும் நித்தம் நித்தம் போராட்டத்துடன் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் மிகவும் அவசியம். இதை அந்த தலைவர்களின் ஆன்மாவும் கூட உறுதியாய் ஒத்துக்கொள்ளும்(நீங்கள் கேட்டுப் பார்த்தால்). உங்கள் சிலை அமைப்பின் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கலாம். ஆனால் அதில் எங்கள் நலனைப் புறக்கணிக்காதீர்கள். நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களித்தது நிச்சயம் சிலைகளை மட்டுமே அமைக்க அல்ல.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த இந்திய வாக்காளர்களில் பெண்களும் உள்ளனர்  என்பதை மோடி அரசாங்கம் மறந்து விட்டது போலும். இவர்களால் தங்களுக்கு ஏதேனும் ஒரு நல்லது நடக்கும்  என்ற எண்ணத்தில்தான் இந்த பெண்கள் வாக்களித்திருந்தனர். அந்த வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி  நல்லதொரு பரிசை அளித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். இது போன்றதொரு நல்லாட்சியை எதிர் பார்த்துதானே வாககளித்தீர்கள் அனைவரும்???

உங்களில் யாரேனும் கேள்வி கேட்கலாம் இருக்கும் நிதி நிலைமையில் 150 கோடியாவது ஒத்துக்கினார்களே என்று, அதே நிதி நிலையிலிருந்துதான் சிலையமைக்க இந்த 200 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மட்டும்தான் மத்திய அரசு இப்படி செய்தது என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னுமொரு பிரச்சினையும் உண்டு மிகப்பெரிய திட்டங்களான லக்னோ அகமதாபாத் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை............................................. வெறும் 100 கோடி மட்டுமே. வாழ்க நமோ அரசாங்கம்


-- பிரியா 

சிதறல் - 13

பயணங்கள்
-----------------
தனிமையுடன் கூடிய
நெடுந்தூரப் பயணங்கள்
முற்றுப்பெறுகின்றன
சிறந்ததொரு பொழுதில்
எனக்கான அறையின்
இறுதித் தனிமையில்

நாடு தொலைத்தவர்கள்

தொலைந்தவர்கள் நாங்கள்
தேடுகின்றோம் வாழ்வுதனை
முளைவிட்ட இடம்தாண்டி
வேர்விட்ட இடம்தனிலே

இரட்சகர்கள் வான்செல்ல
அறிந்தவர்கள் தலை தொங்க
வீதிகளில் அலைகின்றோம்
மீட்பர்கள் யாருமின்றி

தொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு

பொள்ளாச்சியில்  இரு சிறுமிகளுக்கு நடைபெற்ற கொடுமை குறித்து உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.. அதே பகுதியை சேர்ந்தவளாய் என் எண்ணங்களையும் சந்தேகங்களையும் கேள்விகளையும்  பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

பொள்ளாச்சியில்  தனியார் விடுதியில் தங்கியிருந்த இரு மாணவிகள் கடத்தப் பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதுவே செய்தி. இப்பொழுதெல்லாம் செய்தி தாள்களில் இது போன்ற செய்திகள் தினமும் இடம் பெறுகின்றன. இப்படியான செய்திகள் ஏதேனும் ஒரு நாளில் இடம் பெறவில்லை என்றால் தான் அது குறித்து நாம் ஆச்சர்யப்படவேண்டும் என்ற நிலையில் இன்று உள்ளோம்.  நம்மை சேர்ந்தவர்களுக்கோ,  நம் பகுதியிலோ  இப்படியான சம்பவங்கள் நடைபெறாத வரையிலும் இதை நம்மில் பலர் இயல்பாக கடக்கவும் பழகிவிட்டோம்.

பொள்ளாச்சி பகுதியில் கடந்த  சில நாட்களாய் இப்படியான நிகழ்வுகள் தொடர் கதையாகிவிட்டன. காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்முறை, 35 வயது காமக் கொடூரனால் 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக்  கொலை அதைத்தொடர்ந்து இந்த செய்தி. இவை  இப்பகுதியில் எனக்குத் தெரிந்த செய்திகள் தெரியாதவை இன்னும் எத்தனையோ, இது போன்றே பிற பகுதிகளிலும். கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேசத்தில் இதே போன்று சிறுமிகள் தொடர்ச்சியாய் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவமும் அதனைத் தொடர்ந்து நம் அண்டை மாநிலமான கேரளாவில் பெண்கள் இயக்கமொன்று நடத்திய போராட்டமும் உங்களுக்கு லேசாய் இன்னும் நினைவிலிருக்குமென்று நம்புகின்றேன். (என்ன செய்ய நம் வேலைப்பளு அப்படி).

தொடர்ச்சியாய் சிறுமிகள் அனைத்துப்  பகுதிகளிலும் குறி வைக்கப் பட்டு குதறி எறியப்  படுகின்றனர். பாவம் பிஞ்சுகள் தன்னை விட உடல் பலத்திலும் வயதிலும் பலமடங்கு மூத்த ஒருவன்(?)  தன் மீது நடத்தும் வன்முறையை எதுவென்றும் புரியாமல் எப்படி எதிர்ப்பதென்றும் தெரியாமல் கருகிப் போகின்றன. இச்சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எத்தனை தூரம் நம்பிக்கைக்குறியதாய் இருக்கிறது. விடிகின்ற பொழுதுகளில் வெளியில் செல்லும் எத்தனை குழந்தைகள் பத்திரமாய் வீடு திரும்புகின்றன. 

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் மிகச்சிறு வயதில் இப்படியான விடையத்தினை எதிர் கொள்ளும் ஒரு சிறுமியின் மனது எத்தனை பயங்களை கேள்விகளை தன்னுள் தாங்கியதாய்  இருக்கும்? எதிர் காலத்தில் தன் வாழ்வில் ஒரு ஆணை அந்தச் சிறுமி எங்கணம் எதிர் கொள்ளுவாள்? உடல் காயங்களை மருந்து மாத்திரைகள் குணப்படுத்தி விடலாம், மனம் கொண்ட வேதனைக்கு மருந்தென்ன, அவளின் பெற்றவர்கள் கொண்ட துயருக்கு வடிகாலென்ன?

தலைக்கேறிய போதையின் தாக்கத்திலும், நிலை கொள்ளாத மனதினையும் கொண்ட இந்த சில ஆண்களின் ஒரு சில நேர வேகத்தினால் இச்சிறுமிகளின் வாழ்வு மொத்தமுமாய் பறிக்கப்பட்டு விட்டது. 


எனக்கான கேள்வி இதுதான் முன்னேற்றத்தின் பாதையில் செல்வதாக நம்பப்படும் நம் சமூகம்  எதை நோக்கிச்  செல்கிறது, உண்மையில் முன்னேறுகிறோமா? கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்றல்லாம் நம்மில் பலர் தினந்தோறும் கூவி கொண்டிருக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை உண்மையில் அனைவரின் மனதிலும் விதைக்கிறோமா? தெய்வ வழிபாடுகளில் பெண் தெய்வ வழிபாட்டினை அதிகமாகக் கொண்டிருக்கும் இந்திய சமூகம் உண்மையில் தன் தலைமுறைக்குப் பெண்களைக் குறித்து கற்பித்ததும் கற்பிப்பதும் என்ன? ஒரு சில ஆண்களின் மனம் இத்தனை தூரம் வக்கிரமானது ஏன்? 

எழுத்தறிவிலும்  நாகரீகத்திலும் முன்னேறியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் மட்டும் தினந்தோறும் கூறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையான நாகரீகம் என்பது உடையணிவதிலும் மேற்பூச்சு வார்த்தைகளிலும் நிச்சயமாய் இல்லை. அது நாம் நடந்து கொள்ளும் முறைமைகளிலிருக்கிறது. வீட்டிலும் பள்ளியிலும் ஒரு ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் எதிர் பாலினத்தைக் குறித்து எத்தகைய கருத்துக்களை  நாம் விதைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவர்களின் செயல்களும் அமைத்து விடுகின்றன. பெண்களை தெய்வங்களாயும்யும் வேறு வடிவிலும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன் முதலில் ஒரு பெண்ணாய் அவளை உங்கள் மகனுக்கு அறிமுகப்படுத்துங்கள். பெண் என்பவள் குழந்தை பெரும் இயந்திரமோ அல்லது  பசி தீர்க்கும் இடமோ  மட்டுமே அல்ல அவளும் ஒரு சக உயிர் என்பதை உணர வையுங்கள். 

இன்றைய ஊடகங்களும் பெண் உடலை கவர்ச்சி பிண்டமாக்கும் செயல்களை நிறுத்திட முயல வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்       ஆண்கள் வகை வகையாய் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்களுக்காய் எந்த பெண்ணும் ஆணின் பின்னால் ஓடி வர மாட்டாள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் தரத்தினை சோதிக்க ஓடும் லாரியின் முன் குருட்டுத்தனமாய் எவளும் சென்றிட விரும்ப மாட்டாள். ஆண்களுக்கான பொருட்களை விற்பனை செய்வதில் எதற்காக அய்யா ஒரு பெண் தேவைப் படுகிறாள்? விடை கூறுங்கள். ஒன்றைத் தெளிவாய் உணர்ந்து கொள்ளுங்கள் பெண் என்பவள் போகப் பொருளல்ல அவள் உங்களின் ஒரு சக உயிர், உங்களுடன்அனைத்துமாயாகி உங்களுடன் உங்களை போலவே வாழ்ந்து மறைபவள்.


என்றைக்கு பெண் போகப் பொருளாயும், கவர்ச்சிப் பிண்டமாயும் பார்க்கப் படுவது நிறுத்தப் படுகிறதோ அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் அதுவரை இப்படியான சம்பவங்களை தினத்தோறும் செய்திதாள்களில் வாசித்தபடி நம்மை அது பாதிக்காத வரை முடிந்தவரை இயல்பாக நாம் இப்படியேதான் கடந்து கொண்டிருப்போம். ஏனெனில் நம்மிடம் இப்போதைக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கான எந்த ஒரு திட்டமோ உத்திரவாதமோ நிச்சயமாய் இல்லை.




இறுதியாய் அனைத்திற்கும் பெண்ணையே காரணம் கூறும் கலாச்சாரக் காவலர்களிடம் ஒரு கேள்வி. ஒரு வளர்ந்த பெண்ணிற்கு இப்படியான நிலை ஏற்ப்படுகையில் அவள் உடை அணியும் முறையே பெரும்பாலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கிறது, அதுவே ஆண் அப்பெண்ணை நெருங்க காரணம் என்று கூறும் நீங்கள் இச்சிறுமிகளின் விடையத்தில் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? இச்சிறுமிகளிடத்தில் எத்தகைய கவர்ச்சியை உங்கள் காம கண்கள் கண்டன. மழலை மாறாத ஒரு சிறுமியின் உடலிலும் உங்களால் காமத்திற்கான காரணங்களைக் கண்டறிய முடியுமெனில்...... நீங்களெல்லாம் இருப்பத்தைக் காட்டிலும்..........................



--பிரியா 

ஒரு வெளிச்சப் பறவை


எங்கிருந்தோ வந்ததொரு 
வெளிச்சப் பறவை 
இருட்டினுள்  நானடைய 
நினைக்கும் பொழுதுகளில் - என் 
திசை மாற்றிச் செல்ல 

சிதறல் - 12


புரியாத புதிர்
-------------------

எத்தனை முறைதான் எரிப்பது
துளிர்க்காத மரத்தின்
நனையாத வேர்களை....